Header Ads



இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீத்தான சகோதரியின் வயிற்றிலிருந்து குழந்தை மீட்பு


இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா., அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் ஒருபுறம் வலியுறுத்தினாலும் தாக்குதல் நின்றபாடில்லை. 

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வரும் ஹமாஸ் போராளிகளை அழிக்க காசா மீது இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழித் தாக்குதலும் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்ரேல் போலீசாருடன் மோதலில் ஈடுபடுவதால் அவர்களிலும் பலர் கொல்லப்படுகின்றனர். 

இந்நிலையில், 18-வது நாளான இன்று 25-07-2014 இஸ்ரேல் ராணுவம் பல்வேறு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியது. ரபாவில் நடந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் மூத்த தலைவர் சலாஹ் ஹசானென், அவரது 12 வயது மற்றும் 15 வயது மகன்கள் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள டெயிட் அல்-பலாஹ் நகரில் நடந்த தாக்குதலில் 23 வயது கர்ப்பிணி பலியானார். ஆனால், ஆபரேசன் செய்து அவரது வயிற்றில் உள்ள குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். 

இதன்மூலம் காசாவில் மரண எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 8-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு 5240 பேர் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதாக போராளிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிக்குழுவின் முக்கிய கமாண்டர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.