Header Ads



பாராளுமன்றத்தில் தனிநாடு, பொதுக் கூட்டங்களில் வெளிநாடு, அதாஉல்லா முன்னுக்குப் பின் முரண்பாடு

(நவாஸ் சௌபி)

பௌத்த பேரினவாதத்தின் பலிபீடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது தொடரும் அழித்தொழிப்புக்களை அரசாங்கம் தடுப்பதற்கும் முடியாமல் தட்டிக் கேட்பதற்கும் முயலாமல் பாராமுகமாக இருந்துவருகிறது.

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல்; தலைவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நிலையானது இருதலைக் கொல்லி எறும்பு போல் ஆகியிருக்கிறது. மக்களுக்கு நல்லவர்களாகவும் அரசாங்கத்தைப் பகைக்காதவர்களாகவும் மிகச் சாதூரியமாக தங்களது எதிர்குரல்களையும் கோஷங்களையும் எழுப்பிவருகிறார்கள்.  இது அவர்களின் அரசியல் நலனுக்கே அன்றி சமூக நலனைக் காட்டவில்லை என்பதும்; புலனாகிறது.  

முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் மேல் எழுகின்ற சந்தர்ப்பங்களில் மக்களின் எதிர்பார்ப்புகள் அரசியல்வாதிகளைத்தான் குறிவைக்கிறது. இதனடிப்படையில் பௌத்த கடும்போக்கு வாத அமைப்புக்களில் மிகப் பிரதானமான அமைப்பான பொதுபல சேனாவின் திட்டத்தில் அரங்கேறிய அளுத்கம, பேருவளை, தர்காநகர் சம்பவங்கள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் என்று அனைவரது செயற்பாடுகளும் பேச்சுக்களும் சமூகத்தினுள் அவர்களை எவ்வாறனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறது.

இவ்வாறு முஸ்லிம் சமூகம் தங்களது வேதனைகளுக்கும் விடிவுகளுக்கும் உதவாதவர்கள் எனக் கருதுவோரில் ஒருவராக தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான அதாஉல்லாவை  விமர்சிப்பதுண்டு. நெருக்கடியான சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறுகின்ற போது அதற்கெதிராக  எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலும் அதற்காக அரசைப் பகைக்காமலும் அந்த விடயம் தனது கண்ணுக்குத் தெரியாதபடியும் காதுக்கு எட்டாதபடியும் வேற்றுக் கிரகத்தில் இருப்பது போன்று இருந்துவிடுவதனால்தான் அவரை மக்கள் இவ்வாறு விமர்சிக்கின்றனர்.    

மறுபுறம் அவரது நிலையில் இருந்து நோக்கும் போது, தன்னை இந்த சமூகம் ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு பிரதேசத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த பிரதேச வாக்குகளால், தான் பிரதிநிதித்துவம் பெற்று வரும் நிலையில் நான் யாருக்காகப் பேசுவது? எதற்காகப் பேசுவது என்ற கேள்வியும் அதாஉல்லாவின் பக்கமிருந்து எழலாம்.

இந்நியாயத்தின்படி, இதுவரைகாலமும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் என்ன அனுகுமுறைகளோடும் மனநிலையோடும் அமைச்சர் அதாஉல்லா இருந்தாரோ, அதே பாணியில் அவர் தொடர்ந்தும் இருந்திருக்காலாம். அவர் எப்போதும் இருப்பதுபோன்று இப்போதும் இருக்கின்றார் என்று நினைத்து மக்களும் இருந்திருப்பார்கள். அவ்வாறில்லாது அளுத்கம சம்பவங்களுக்காக அமைச்சர் அதாஉல்லா ஆவேசம் கொண்டு அதன்பால் சமூகத்தின் பக்கம் தனது முகத்தை காட்டமுனைந்து அதற்காக அவர் பேசும் பேச்சுக்களைக் கேட்கும் போது, இப்படிப் பேசுவதைவிடவும் அவர் இதற்காக எதுவும் பேசாதிருப்பது மேலானது என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அளுத்கம சம்பவங்கள் முடிவுற்று 2014 ஜூன் 18  ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத்தில் அமைச்சர் அதாஉல்லா உரையாற்றும் போது, பொதுபல சேனா முஸ்லிம்களையும் தனிநாடு கோரத் தூண்டுகிறதா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். அவரது ஆவேசமான கேள்வி அனைவரையும் ஆச்சரியமாகவே பார்க்கவைத்தது. ஊமையாக இருந்த ஒருவருக்குத் திடீரெனப் பேச்சுவந்ததுபோல் எல்லோரும் அவரை இந்தக் கேள்வியின் ஊடாக அவதானித்தனர். இணைய ஊடகாமான ஜப்னா முஸ்லிம் இதனை 'அமைச்சர் அதாவுல்லாவும் வாயை திறந்தார்' என்ற தலைப்பிலேயே ஒரு செய்தியாக இட்டிருந்தது.

இவ்வாறு அமைச்சர் அதாஉல்லா ஆவேசப்பட்டது போன்று மக்களும் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசங்களோடு எழுந்து முஸ்லிம்களுக்கான தனிநாட்டைக் கேளுங்கள் என்று அமைச்சர் அதாஉல்லாவிடம் வேண்டினால் அவரால் அதனைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க முடியுமா? இதுவரை முஸ்லிம்களுக்காக நடைபெற்றுவருகின்ற அழித்தொழிப்புகளையும் அடக்குமுறைகளையும் தட்டிக் கேட்க முடியாத அவரால் எப்படி தனிநாட்டுக்கான கோஷம் எழுப்ப முடியும்? அதனைப் பெற்றுத்தர முடியும்? எனவே இது உண்மையான ஒரு பேச்சு அல்ல பாராளுமன்றத்தில் நானும் முஸ்லிம்களுக்காகப் பேசி இருக்கின்றேன் என்பதை ஜாடை காட்டும் ஒரு பேச்சுத்தான். 

அன்று பாராளுமன்றத்தில் 'முஸ்லிம்களும் தனிநாடா கேட்பது' என்று ஆவேசமாக குரல் எழுப்பிய அமைச்சர் அதாஉல்லா அதற்கான சமூக அக்கறைகளை பாராளுமன்றப் படிகளிலேயே விட்டுவிட்டு வந்ததுபோல், அடுத்த சில நாட்களில் பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2014 ஜூன் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற புறநெகும திட்டத்தின் கீழான கூட்டத்தின் போது, அளுத்கம இனக்கலவரம் ஒரு வெளிநாட்டு சதி என்பதை வலியுறுத்திப் பேசி இருந்தார்.

அதனைக் குறிப்பிடும் போது:  'அன்று விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டு சக்திகள் உதவி செய்தன. நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக செயற்பாடுவதற்கு பின்னணியில் செயற்பட்டனர். இன்று அதே பாணியில் நாட்டை சீர்குலைக்கவும் அரசை வீழ்த்துவதற்குமாக அன்று விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்த அதே வெளிநாட்டு சக்திகள் இன்று இன்னுமொரு இனவாதக் குழுவை கையில் எடுத்துக்கொண்டு நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துகின்றன.' என்பதாகப் பேசியிருந்தார்.

இப்பேச்சு, பொதுபல சேனா முஸ்லிம்களையும் தனிநாடு கோரத் தூண்டுகிறதா? என பாராளுமன்றத்தில் தான் பேசியதை தானே மாற்றிப் பேசுவதாகவும் முஸ்லிம்களுக்கு அரசின் மீது ஏற்பட்டுள்ள கசப்புணர்வை மாற்றியமைத்து, அதனைத் திசை திருப்புவதாகவும் அமைந்திருக்கின்றது. 

அமைச்சர் அதாஉல்லா கூறுவது போன்று, நாட்டை சீர்குலைக்கவும் அரசை வீழ்த்துவதற்குமாக அன்று விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்த அதே வெளிநாட்டு சக்திகள் இன்று இன்னுமொரு இனவாதக் குழுவை கையில் எடுத்துக்கொண்டு நாட்டில் கலவரங்களை ஏற்படுத்துகின்றன என எடுத்துக் கொண்டால், இது நேரடியாக யாரைப் பாதிக்கின்றது? இது யாருக்கு ஆபத்தானதாகத் தெரிகிறது? என்று நோக்கினால் அது முழுமையாக அரசையும் ஜனாதிபதியையும்தான் பாதித்து, அவரது ஆட்சிக்கும் அரசியலுக்கும் இடையூறாகவும் சவாலாகவும் இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. 

எனவே தனது ஆட்சிக்கும் அரசியலுக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய பாதகமான செயற்பாடுகளைச் செய்ய பொதுபல சேனாவுக்கு வெளிநாட்டு சக்திகள் உதவுகின்றன என்றால் அச்சக்திகளை நாட்டுக்குள் வரவிடாமல் அரசு தடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியைக் கலங்கப்படுத்தும் பொதுபல சேனாவின் செயற்பாடுகளை அரசு தடைசெய்திருக்க வேண்டும். இவை எதுவும் இல்லாமல் அரசு அதனை வேடிக்கை பார்க்கிறது என்றால் அமைச்சர் அதாஉல்லாவின் வாதம் இதுவிடயத்தில் அர்த்தமற்றதுதானே.?

மேலும், அன்று விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தது போல், இன்று வெளிநாட்டு சக்திகள் இன்னுமொரு இனவாதக் குழுவை கையில் எடுத்திருக்கிறது என்று அமைச்சர் அதாஉல்லா குறிப்பிடுகையில், பொதுபல சேனாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அவர் ஏற்றுக்கொள்கிறார் என்றே ஆகிறது. அவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்பைத் தடைசெய்வதற்கும் அதன் செயற்பாட்டை இல்லாதொழிக்கவும் அரசுக்கு ஏன் முடியாதிருக்கின்றது? அத்துடன்  முஸ்லிம்கள் தனிநாடா கேட்பது? என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடிந்த அமைச்சர் அதாஉல்லவுக்கு ஏன் பொதுபல சேனாவை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்த முடியவில்லை.?

அளுத்கம இனக்கலவரம் ஒரு வெளிநாட்டு சதி என்ற கருத்தை பண்டாராநாயக்க ஞாபகர்த்த மண்டபத்துடன் விட்டுவிடாமல் தொடரும் கூட்டங்களிலும் அமைச்சர் அதாஉல்லா அதனையே வலியுறுத்தி வருவதனைக் காணமுடிகிறது. கடந்த 2014 ஜூலை 21 ஆம் திகதி திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஜம்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த வைபவமொன்றில் உரையாற்றும் போது 'பயங்கரவாதத்தை ஒழித்து நிலையான சமாதானத்தைக் கொண்டுவந்த அரசாங்கத்தையும் அதன் தலைமையையும் மாற்ற வேண்டிய தேவை அமெரிக்கா மற்றும் நோர்வை போன்ற வெளிநாட்டு சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது.' என்பதை வலியுறுத்திப் பேசி இருக்கிறார்.

அமைச்சர் அதாஉல்லா கூறுவது போன்று, அரசாங்கத்தையும் அதன் தலைமையையும் மாற்ற அமெரிக்கா மற்றும் நோர்வை போன்ற வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டால் மேலே கூறியது போன்று இதற்கு எதிராக போராடும் முதல் மனிதனாக ஜனாதிபதிதானே நிற்க வேண்டும்.  அமைச்சர் அதாஉல்லாவுக்குப் பரிந்த விடயம் ஜனாதிபதிக்கு புரியாமலிருக்கிறதா? அல்லது ஜனாதிபதியை மீறிய ஒரு சக்தி அரசுக்குள் இருக்கிறதா? அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் ஜனாதிபதி இருக்கிறாரா? 30 வருடகால யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவரினால் இந்த பொதுபல சேனாவையும் அதன் பின்னால் உள்ள வெளிநாட்டு சக்திகளையும் முறியடிப்பது ஒன்றும் முடியாத காரியமா? 

மாறாக அமைச்சர் அதாஉல்லா கூறுவது போன்று இது ஒரு வெளிநாட்டு சதியாகவே இருக்குமானால், இத்தகைய இராஜதந்திர நகர்வுகளை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி இது உங்களுடைய தலைமைக்கும் ஆட்சிக்கும் ஆபத்தான ஒன்று என்பதை ஆதாரப்படுத்தி, இதனை முற்றாக இல்லாதொழிக்கும்படி ஜனாதிபதியிடம் முறையிட்டு அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம்களையும் இதிலிருந்து காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும்;. மேடைக்கு மேடை வெளிநாட்டு சதி என்று சும்மா பேசுவதில் நியாயமில்லை.

ஆனால் உண்மை அதுவல்ல, ஜனாதிபதி தனது பதவிக்கும் ஆட்சிக்கும் அடுத்த தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இந்த இனவாத உணர்வு தேவைப்படுகிறது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் யுத்தத்தை, இனவாதமாகக் கொண்ட பிரச்சாரங்களால் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அறுதிப் பெரும்பான்மை வெற்றியை அவர் பெற்றுக்கொண்டார். அத்தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையான வாக்குகள் அரசுக்கு எதிராகவே இடப்பட்டது. எனவே அரசுக்குத் தேவை தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அல்ல. சிங்கள மக்களின் வாக்குகளே ஆகும். அதற்காக இந்த இனவாதப் போக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வதற்கான ஒரு அரசியல் வியூகமே ஆகும்.

இதற்கமைய எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில்  முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராகவே 90 சதவீதமான வாக்குகளை அளிக்கும் நிலை ஏற்படும் இதனைக் கடந்த மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களும் நிருபித்திருக்கின்றன. எனவே இந்த ஆபத்திலிருந்து தப்பித்து அரசுக்கு முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றுக்கொடுத்து தாங்களும் அரசின் பங்காளிகளாகவும் அரசுக்கு விசுவாசமானவர்களாகவும் ஆகுவதற்கு அமைச்சர் அதாஉல்லா போன்றவர்கள் அரசின் விசுவாசத்தை இதுபோன்ற பிரச்சாரங்களால் வெளிப்படுத்தி வருகின்றார்கள். 

அதற்காகவே, 'அளுத்கம சம்பவத்தை முஸ்லிம்கள் மறந்துவிடுவர்' என்ற கருத்தையும் அமைச்சர் அதாஉல்லா ஜம்யத்துல் உலமா சபைக் கூட்டத்தில் மிகவும் தெளிவுபடுத்திப் பேசி இருக்கிறார். முஸ்லிம்கள் அச்சம்பவத்தை மறந்தால்தான் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற உள் எண்ணம்தான் அவரை இவ்வாறு பேச வைத்திருக்கிறது. முஸ்லிம் சமூகம் இதனை மறக்கிறதோ இல்லையோ!. எதிர்வருகின்ற தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்குகளைக் கேட்பவர்கள் முஸ்லிம்கள் மீதான பலிபீடத்தின் மேல் ஏறிநின்றுதான் அந்த வாக்குகளைக் கேட்கின்றோம் என்பதை மறக்காதிருக்க வேண்டும்.

2 comments:

  1. இவனொரு மதில்மேல் ஏரிய பூனை அவன் அப்படித்தான் பேசுவான்.

    ReplyDelete
  2. முஸ்லிம் அரசியல் தலைமைகளோ, மார்க்கத்தலைமைகளோ..? மக்கள் நலனுக்காக செயற்படவில்லை என்பதும் தமது கட்சியை அல்லது இயக்கத்தை முதன்மை படுத்த விளம்பரப்படுத்த உழைக்கின்றன நிதர்சன உண்மை..! நாட்டிற்கோ, அல்லது பிரதேசத்திற்கோ, அல்லது சமுகத்திற்கென்றொரு எதிர்காலத் திட்டம், அல்லது அபிவிருத்தி நடைமுறை, அல்லது தூர நோக்குப்பயனம் என்பான இல்லாத நாட்டில், எரியும் வீட்டில் புடுங்குவதெல்லாம் மிச்சம் எனும் அடிப்படையில்..! ஆயிரம் ஆயிரம் நிபந்தனையில் உலகக்கடன்களை வாங்கி அமைச்சர்கள் விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள்..! இதில் அமைச்சர் அதவுல்லாஹ் மட்டும் விதிவிலக்கா?
    எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம்கள் இணைந்து தேர்தலி பகிஸ்கரிக்க வேண்டும், அல்லது அரசுக்கு எதிராக அனைத்து முஸ்லிம் கட்சிகளும் நிபந்தனை இன்றி இணைந்து சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு சின்னத்தில் / கட்சியின் கீழ் போட்டியிட வேண்டும் இது நடை முறை சாத்தியம் என்றால் முஸ்லிம்கள் தமது உரிமையையும் கௌரவத்தையும் சிறப்பாக பாதுகாக்கலாம் அல்லது வென்றெடுக்கலாம்.
    அல்லது என்னதான் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஆகும்..!

    ReplyDelete

Powered by Blogger.