Header Ads



காஸா பாடசாலை மீதான தாக்குதல் வெட்கக்கேடானது - இஸ்ரேலுக்கு பான் கி மூன் கண்டனம்

காஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் வீசி தாக்கி வருகின்றனர். சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சண்டை தொடங்கியது. 

இரு தரப்பினருக்கிடையிலான தாக்குதலின் 23-வது நாளான நேற்று இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நாட்டின் பீரங்கிகள் குண்டுகளை  வீசி தாக்குதல் நடத்தின. இதில் குழந்தைகள் உள்பட் 20 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’வடக்கு காஸாவில் உள்ள ஐ.நா. நடத்தி வரும் ஜபாலியா பெண்கள் துவக்கப் பள்ளியில் வீடிழந்த அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இது வரை 17 முறை தெரியபடுத்தி விட்டோம். குறிப்பாக, இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய இரவு கூட இது தொடர்பாக இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளோம்.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதை விட மிகவும் வெட்கக் கேடான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. மிகவும் வெட்கக் கேடானதும், நியாயப்படுத்த முடியாததுமான இந்த கொடூர தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக, தாக்குதல்களை கைவிட்டு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு  இரு தரப்பினரும் உடன்பட வேண்டும். 

இந்த மோதலுக்கான அடிப்படை காரணம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், பேச்சு வார்த்தை மூலம் அவற்றுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும்.’ என பான் கி மூன் கூறியுள்ளார்.

கடந்த வாரமும் ஐ.நா.வின் பராமரிப்பில் உள்ள மற்றொரு பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.