Header Ads



ராஜபக்ஸ சகாப்தம் முடிவுக்கு வருமா...? ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் உக்கிரம்

Gtn

ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் முரண்பாடுகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்துள்ளது.

இடதுசாரி கட்சிகள் ஒரு நிலைப்பாட்டையும், தேசிவாதம் பற்றிய கடும்போக்குடைய கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் பிறிதொரு நிலைப்பாட்டையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றுமொரு விதமான நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எடுக்கப்படும் தீர்மானங்களை நேரடியாக அல்லது பகிரங்கமாக விமர்சனம் செய்யும் அளவிற்கு இந்த முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமெனவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான அழுத்தங்களை தவிர்க்க வேண்டுமெனவும் கோரி வருகின்றன.

இது தொடர்பில் கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, தேசியவாத கடும்போக்குடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் ஜாதிக ஹெல உறுமய ,ஜே.என்.பி, மஹஜன கட்சி போன்ற கட்சிகள் பிறிதொரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், வெளிநாட்டு நிபுணர்குழுவினரின் தலையீடு அவசியமற்றது எனவும் கோரி வருகின்றனர்.

போதைப் பொருள் வர்த்தகம், கசினோ சூதாட்டம் போன்றன தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். 12 அம்சக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தவறியதாகத் தெரிவித்து ஜே.என்.பி கட்சி இம்முறை ஊவா மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடவும் தீர்மானித்துள்ளது.

முஸ்லிம் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமெனவும் சிங்கள பௌத்தகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் கோரி வருகின்றனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில தீர்மானங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

கசினோ சூதாட்டம் போன்ற திட்டங்களுக்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மாற்று அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் அடுத்த ஆண்டு அரசாங்கம் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. இன்ஸா அல்லாஹ். அல்லாஹ்வின் உதவியுடன் எல்லாம் நல்ல படியாக நடக்கும். இறைவன் இல்லங்களில் கைவைத்தவர்களுக்கான தீர்பை அவனிடமே ஒப்படைத்தோமல்லவா? பொறுமையாளர்களுடன் அல்லாஹ் என்றும் இருப்பான். அனீதம் இழைக்கப்படவர்களின் பிரார்த்தனையும் கண்டிப்பாக அல்லாஹ் அங்கீகரிப்பான். மற்றவை நாளடைவில் தெரியவரும்.

    ReplyDelete

Powered by Blogger.