Header Ads



''நாமும் எமது முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது'' விமல் வீரவன்ச

அரசாங்கத்தையும் நாட்டையும் பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சியையும் எமது கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அரசாங்கத்தில் இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆட்சியை தீர்மானிக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தனித்தே போட்டியிடும். வெற்றியோ தோல்வியோ சவாலை எதிர்கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார்.

தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் விமல் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

யுத்தத்தின் பின்னர் நாட்டில் நிரந்தர சமாதானமொன்றினையும் நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து  செயற்பட்டோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை பாராட்டி அதை ஆதரித்ததைப் போலவே அரசாங்கம் செய்யும் தவறுகளையும் நாம் சுட்டிக்காட்டி அதை கண்டித்தமையும் கடந்த காலங்களில் இடம்பெற்றன.

அரசாங்கம் தவறான பாதையில் செல்கின்றது

எனினும் அரசாங்கம் இப்போது தவறான பாதையில் பயணித்துக் கொண்டு செல்கின்றது. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டை பாதுகாக்கும் வகையில் எம்மால் முன்வைக்கப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. நாம் அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமையினாலும்  நாட்டை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவுமே எமது கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் அரசாங்கம் எமக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. நாம் குறிப்பிடுவதை செவிமடுக்க மறுக்கின்றது. எமது கோரிக்கைகளை தேவையற்ற ஒன்றாகப் பார்க்கின்றது.

முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது

எனவே நாமும் எமது முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எமக்கு முக்கியத்துவம் வழங்காத  எமது கோரிக்கைகளை மதிக்காத அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

நாம் எப்போதும் சுயாதீனமான முடிவுகளை எடுப்பவர்கள் அல்ல. அன்று ஜே.வி.பி வுடன் நாம் கைகோர்த்த போது இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்தோம். எம்மைப் பற்றியோ எமக்கு என்ன நடக்கும் என்றோ சிந்திக்கவில்லை. 1989ஆம் ஆண்டில் ஜே.வி.பி. தவறான பாதையில் பயணித்த போதும் கூட அக் கட்சியை விட்டு நாம் வெளியேறவில்லை. ஏனெனில் கட்சியை நல்வழிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இருந்தது. அதேபோல் கடைசி கால கட்டத்தில் கூட ஜே.வி.பி. தவறான பாதையில் புறப்பட்டதன் காரணமாகவும் அரசாங்கத்தையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அரசுடன் இணைந்தோம். எனினும் இன்று அரசாங்கத்துடன் ஒற்றுமை நிலவவில்லை. அவர்கள் வேறு திசையினை தீர்மானித்து நாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.

சுருக்குக் கயிற்றை 
தாமே போடுகின்றனர்

சர்வதேச அளவில் இலங்கைக்கு சுருக்குக் கயிற்றை போட மேற்கொள்ளும் முயற்சிகளை அரசாங்க பங்காளிக் கட்சிகளான நாமே தவிர்த்து வருகின்றோம். அதனாலேயே 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவோ அல்லது தென்னாபிரிக்காவோ தலையிடக் கூடாது எனவும் இலங்கையின் விசாரணை விடயத்தில் சர்வதேசம் தலையிடக்கூடாது எனவும் முக்கியமாக சுட்டிக் காட்டினோம்.

ஆனால் அரசாங்கமே இப்போது சுருக்குக் கயிற்றினை மாட்டிக் கொள்ளும் வகையில் செயற்பட ஆரம்பித்து விட்டது. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைக் குழுவிற்கு அப்பால் சர்வதேச நிபுணர் குழுவினை நியமித்திருப்பதனால் இறுதியில் இலங்கைக்கே பேராபத்தாக வந்து சேரும். அதேபோல் சர்வதேச நிபுணர் குழு விடயத்தில் அரசாங்க கூட்டுக் கட்சிகளான எம்மிடம் ஒரு சந்தர்ப்பத்திலேனும் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை.

எம்மை பொருட்படுத்தாது அவமதிக்கும் வகையில் செயற்படும் போது எம்மாலும் அரசை நம்பி செயற்பட முடியாது உள்ளது.

ஊவா தேர்தலில் தனித்துப் போட்டி

எனவே, நாம் இப்போது தெளிவாக முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்து விட்டோம். எமது முடிவுகளை இப்போது தெரிவிக்க முடியாது போனாலும் அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளோம். ஊவா மாகாண சபைத் தேர்தல் அடுத்த பொதுத் தேர்தலை தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாகும். இதில் தனித்து போட்டியிடுவது பலருக்கும் சவாலாகவே அமையும். எனினும் அரசாங்கத்தை விடவும் மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.

எனவே, வெற்றியோ, தோல்வியோ முகம் கொடுக்க தயாராகவே உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். VI

1 comment:

  1. மிச்சம் நாளா இந்த பூச்சாண்டி வேலை நடக்கிறது. அரசாங்கம் சொல்லியாச்சே உம்மை தாராளமாக வெளியேறலாம் என்று. உமது கோரிக்கைகளை தூக்கி குப்பையில் வீசிவிட்டார்களே.

    ஆனால் அரசாங்கம் சொல்கின்றது நீர் அரசாங்கத்தை விட்டு விலகினால் பழைய படி காலுக்கு செருப்பு கூட இல்லாமல் ரோட்டில் அலையும் நிலைதான் வருமென்று. பின்ன என்ன? எப்போ பொறப்படப்போறிங்களோ?
    இல்ல வழமைபோல நாம் எக்காரணங்கொண்டும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லை என்ற மானங்கெட்ட பொழப்புதானா?

    ReplyDelete

Powered by Blogger.