Header Ads



ஞானசாரர் குரோதத்தை தூண்டினார் - பேஸ்புக் குற்றம் சுமத்துகிறது

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான தகவல்கள் தொடர்ச்சியாக பேஸ்புக் கணக்கில் பதிவாகியிருந்த காரணத்தினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்க நேரிட்டதாக பேஸ்புக் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஞானசார தேரரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு சமூக வலைத்தள விழுமியங்களுக்கு முரண்பாடான வகையில் இயங்கி வருவதனால் முடக்கப்டப்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள் கணக்கின் ஊடாக பரிமாறிக் கொள்ளப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது பேஸ்புக் கணக்கு மட்டுமன்றி பலரின் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தேசப்பற்றுடைய தேசியவாத கருத்துக்களை வெளியிட்டு வரும் உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகளின் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமக்கு எதிராக சில தரப்பினர் மேற்கொண்ட முறைப்பாடுகளே பேஸ்புக் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய உணர்வுடன் செயற்பட்டு வரும் பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது முஸ்லிம் கடும்போக்காளர்கள் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு உண்மைகளை இந்த சமூக வலைத்தளத்தின் ஊடாகவே பொதுமக்களுடன் தாம் பகிர்ந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் தர்மம் பலவீனமடைந்துள்ளதுடன் அதர்மம் தலையோங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கணக்கு முடக்கப்பட்டமை குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கத் திட்டமிட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் வேறும் வழிகளில் தொடர்ந்தும் மக்களுடன் இணையத்தில் தொடர்புகளை பேண திட்டமிட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.