Header Ads



புதிய மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த திறந்து வைத்தார்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
  
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பிரதேசத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்முனைப்  பாலத்தை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19-04-2014 சனிக்கிழமை மாலை  மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,இலங்கைக்கான ஜப்பான் நாட்டு பிரதித் தூதுவர் ஆசகா ஓகைய் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் ஆகியோரினால் பாலம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் ,பாலத்தின் நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

பல்லாண்டு காலமாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் -எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பால வேலைத்திட்டம் ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 210 மீற்றர் நீளமும் 9.8 மீற்றர் அகலமும் கொண்ட மண்முனைப் பாலம் மற்றும் மேற்குப்பக்கம் 195 மீற்றர் கிழக்குப் பக்கம் 293 மீற்றர் நீளம் கொண்ட தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கும் குறுக்காக அமைக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்கள் இணைக்கப்படும்.

இப்பாலம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் கொக்கட்டிச்சோலை கேந்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய பாலத்தின் ஊடாக கொக்கடிச்சோலை, மகிலடித்தீவு, மாவடிமுன்மாரி, அரசடித்தீவு, முதலைக்குடா, தாந்தாமலை, முனைக்காடு, தும்பங்கேணி உட்பட சுமார் 2 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் மிகுந்த பயனைப்பெறவுள்ளனர்.

No comments

Powered by Blogger.