Header Ads



ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கிறார் ஆஸாத் சாலி..!

சமய முரண்பாடுகளைக் கையாள புதிய பொலிஸ் பிரிவை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் அறிவிப்பு காலோச்சிதமானது. - தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடனான தனது வழமையான சந்திப்பின் போது மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இதை நாட்டு மக்களுக்கான ஒரு வாக்குறுதியாக அவர் ஊடகங்கள் வாயிலாக வழங்கியுள்ளார் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக சமய ரீதியான மோதல்கள் மற்றும் பிரச்சினைகளைக் கையாள பொலிஸ் திணைக்களத்தில் புறம்பான ஒரு பிரிவை ஏற்படுத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இரண்டாவதாக சட்டத்தை எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ தனது கரங்களில் எடுத்துக் கொள்ள தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக இந்த நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஹோட்டல் அபிவிருத்தித் திட்டங்களில் கசினோக்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அவர் வழங்கியுள்ள உறுதிப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ளார்.

இதில் சமய ரீதியான முரண்பாடுகளைக் கையாள பொலிஸ் திணைக்களத்தில் புதிய பிரிவொன்றை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள விடயம் தான் புதிய விடயம். ஏனைய இரண்டும் கேட்டுக் கேட்டு சலித்துப் போன விடயங்கள். இந்த புதிய பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்படுமாயின் அதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். உண்மையில் அது மிகவும் நல்லதோர் முடிவு. ஆனால் அது பொலிஸ் திணைக்களத்தில் இருக்கும் பிரிவுகளில் பத்தோடு ஒன்று பதினொன்று என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தனியாக பிரிக்கப்பட்டு தனியான ஒரு அமைச்சின் கீழ் ஜனாதிபதியின்; நேரடி கண்கானிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று இந்த நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நாமும் அதை அன்று பெரு மனதோடு வரவேற்றோம். நாட்டில் சீர்குலைந்திருந்த சட்டமும் ஒழுங்கும் மீளக் கட்டி எழுப்பப்படும் என்று மக்கள் எதிர்ப்பார்த்தனர். நாட்டில் சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என்று மக்கள் நம்பினர். அப்படியே தாக்கப்பட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மக்கள் எண்ணினர். ஆனால் இந்த எண்ணங்களும் நம்பிக்கைகளும் இது வரை ஈடேறவில்லை. நிலைமை மேலும் மோசமடைந்ததே தவிர சீரடையவில்லை. எனவே தான் உத்தேச இந்தப் புதிய பிரிவு வெரும் வார்த்தைகளால் ஆன ஒரு பிரிவாக அமைந்து விடக் கூடாது என்று நாம் கூற விரும்புகின்றோம்.

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராகவும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகவும் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் பொலிஸார் ஒரு வேடிக்கை பார்க்கும் பிரிவாகவே செயற்பட்டுள்ளனர். ஆனால் இன்று இந்த அடாவடித் தனங்களுக்கு காரணமானவர்கள் ஆளும் குடும்பத்தையே குறிவைக்கத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் அண்மைக்கால கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. அதனால் தான் ஜனாதிபதி வலியை உணரத் தொடங்கியுள்ளார். 

ஒரு புறம் சமயத் தீவிரவாதம் அதன் கொடூர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் போது அதை கண்டு கொள்ளத் தவறிய பொலிஸார் அரசியல் சண்டித்தனத்தையும் அசட்டையாக வேடிக்கை பார்த்ததை அண்மைக்கால அம்பாந்தோட்டை சம்பவங்கள் நரூபித்துள்ளன. ஜனனாயகத்தின் காவலனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜனாதிபதியின் சொந்த மண்ணில் அதுவும் அவரது மூத்த சகோதரர் பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதியிலேயே அரசியல் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டதால் இன்று ஆளும் குடும்பத்துக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்த சம்பத்தை அரசுக்கு வக்காளத்து வாங்கும் அரசியல் வாதிகளும் அமைச்சர்களும் நியாயப்படுத்தி பேசி வருவதால் ஆளும் குடும்பம் மேலும் வெற்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும் பரவாயில்லை காலம் மேலும் கடந்து நிலைமைகள் கட்டு மீறி செல்வதற்கு முன் அவர் புதிய பொலிஸ் பிரிவை ஏற்படுத்தும் முடிவை எடுத்துள்ளமையை வரவேற்கின்றோம். இந்தப் பொலிஸ் பிரிவுக்கு அது பெற்றுக் கொள்ளும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்த பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். மிக நேர்மையான நியாயாமான அதிகாரிகளை அந்தப் பிரிவுக்கு நியமிக்க வேண்டும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முழு அதிகாரமும் சுதந்திரமும் அந்தப் பிரிவுக்கு வழங்கப்பட வேண்டும். இதில் எந்த விதமான தலையீடுகளும் குறுக்கீடுகளும் இருக்கக் கூடாது. ஏனெனில் இந்த நாட்டுக்குத் தேவை அமைதி, மக்களுக்குத் தேவை நிம்மதியும் சுதந்திரமும். அவற்றுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் எவராக இருப்பினும் சரி அவர்களின் தராதரம்,அவர்கள் அணிந்திருக்கும் உடை என்பனவற்றை கருத்திற்; கொள்ளாமல் அவர்களுக்கு எதிராக சட்டம் தன் இரும்புக் கரங்களை பிரயோகிக்க வேண்டும் எனபதே எமது தாழ்மையான வேண்டுகோளும் எதிர்ப்பார்ப்புமாகும்.

அதேபோல் கெசினோக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற உறுதி ஜனாதிபதி ஏற்கனவே இந்த நாட்டின் சமயத் தலைவர்களுக்கு வழங்கியுள்ள ஒரு உறுதி மொழி என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இது தொடர்பான புதிய சட்டமூலத்தில் மிகவும் சூட்சுமமாக கெசினோ என்ற சொல் மட்டும் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 'இணைந்த சேவைகள்' என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்த நாட்டு மக்களையும் மகாநாயக்கர்களையும் மடையர்களாக கருதி செய்யப்பட்டுள்ள ஒரு சூட்சுமம் ஆகும். உண்மையிலேயே அரசு இந்த விடயத்தில் தனது பரிசுத்த தன்மையை நிரூபிக்க வேண்டுமானால் 'இணைந்த சேவைகள்' என்பது என்ன? என்று மக்களுக்கும் மகாநாயக்கர்களுக்கும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டு மக்களை மடையர்களாக்கி கெசினோக்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியாகவே இந்த சட்ட மூலத்தை நாம் கருத வேண்டியுள்ளது.

ஜனாதிபதி இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேசத் தலைவர்களுக்கும் அளித்த உறுதி மொழிகளை காற்றில் பறக்கவிட்ட பெருமைக்குரிய ஒரு நபர். எனவே அவர் தற்போது வழங்கியுள்ள உறுதி மொழிகளுக்கு என்னவாகும் என்பதை காலம் செல்ல செல்லத்தான் நாம் காணக் கூடியதாக இருக்கும்

No comments

Powered by Blogger.