Header Ads



முஸ்லிம் இனக் கலவரத்தை உருவாக்கி..!

(சத்தார் எம் ஜாவித்) 

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை தாண்டவமாடுகின்றபோது அதனைக் கருத்தில் கொள்ளாது இனவாதிகள் சிறுபான்மை மக்கள் மீதான அடாவடித்தனங்கள் தொடர்கதையாகவே உள்ளது.

நாடு இன்று சர்வதேசத்தின் முன் எதிர் நோக்கியுள்ள அபாயகரமான நிலையில் ஆட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் நிம்மதியற்ற நிலையில் திண்டாடும் நிலையும் மக்கள் மத்தியில் பெரியளவில் அவதானிக்கப்பட்டு வரும் இத்தருவாயில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஞானசார தேரரின் பௌத்த தீவிரவாதச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி விடயங்களை நோக்கும்போது பொதுபல சேனாவின் கட்டுப்படாத தொடர் அடாவடித்தனங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம் பெறுவதையே கோடிட்டுக் காட்டுகின்றது. கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியிலேயே முஸ்லிம்கள் பல நூற்றுக்கணக்கான சொல்லொனாத் துயரங்களை அனுபவித்தது வருகின்றனர்.

இலங்கையின் இனவாதத்தின் முகமாக பொதுபல சேனாவின் ஞானசார தேரரின் பயங்கவாதச் செயற்பாடுகளுக்கு நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி எந்தவித கருத்துக்களோ அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாது மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது சிறுபான்மை முஸ்லிம் மக்களிடத்தில் பாரிய சந்தேகத்தையும் அவர் மீது வெறுப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

மேற்படி நிலையை நோக்கும்போது மௌனத்தாலான துள்ளலா? அல்லது துள்ளலாளான மௌனமா? என்பதில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது ஜனாதிபதியின் மௌனம் இனவாதிகளை அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு துள்ளச் செய்கின்றதா? அல்லது இனவாதிகளின் கட்டுக்கடங்காத துள்ளால் ஜனாதிபதி மௌனம் சாதிக்கின்றாரா?

ஞானசார தேரரை சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களும் அவரை ஒரு சண்டியனாகவே தற்போது பார்க்கின்றனர் அவரைக் கண்டால் பௌத்த சண்டியன் என்று கூறுமளவிற்கு வந்துவிட்டது இந்த நிலைமை உண்மையான புத்த பெருமானின் போதனைகளை பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் பௌத்த தர்மத்திற்கு எதிர் காலத்தில் பாரிய இழுக்கை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே தற்போது நோக்கப்படுகின்றது.

அகிம்சையையும், நற்போதனைகளையும் வெளிப்படுத்தும் பௌத்த தர்மம் இன்று இரத்தக் காட்டேறி போன்றவர்களை உருவாக்குகின்றதா? என்ற ஒரு கேள்வியை எழுப்புகின்றது. காரணம் இனவாதக் கும்பலினால் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றமையே புலப்படுத்துகின்றது. இவ்வாறு மேற்படி தீவிரவாதக் கும்பல் செல்லும்போது தனது ஆட்சியில் ஜனாதிபதி பார்த்துக் கொண்டிருப்பது ஜனாதிபதி ஒரு பௌத்தரா? என்ற சந்தேகங்கள் தற்போது மக்கள் மத்தியில் வியாபித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் உயர் நிலை பௌத்த பீடங்கள் தமது சமய மற்றும் கலாச்சார விழுமியங்களில் முக்கிய கவனமெடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் வேண்டி நிற்கின்றனர். காரணம் பௌத்த இனவாதிகள் பௌத்தத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் முஸ்லிம்கள் தொடர்பாக வீணான பொய்ப் பிரச்சாரங்களையும், வதந்திகளையும் ஒற்றுமையாக இரண்டறக் கலந்து வாழும் பௌத்த மக்களிடத்தில் கூறி பிரிவினைகளையும், சண்டைகளையும் உருவாக்கி ஈற்றில் சிங்கள முஸ்லிம் இனக் கலவரத்தை உருவாக்கி சிறுபான்மையான முஸ்லிம்களை பர்மாவில் மேற் கொள்ளப்பட்டது போன்றதொரு இயல்பற்ற நிலையைத் தோற்றுவிக்க முயல்கின்றனர்.

மேற்படி இனவாதிகளுக்கு அமைதி, சமாதானம், ஒற்றுமை, இன நல்லிணக்கம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகோதரத்துவ உணர்வுகள் போன்ற நல்ல சமய விழுமியங்கள் அற்ற மனிதர்களின் காட்டுமிறாண்டித்தனங் கொண்ட ஒரு பிரிவினராக இன்று சர்வதே ரீதியில் கண்டு கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களின் சண்டித் தனத்தின் விளைவு இன்று சர்வதேச பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கப்பட்டு ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டமை அவர்களின் அழிவிற்கான ஆரம்பமாகவே நோக்கப்படுகின்றது.

சண்டித்தனங்களுக்கும், மிரட்டல்களுக்கும் ஒரு எல்லை உண்டு ஆனால் இந்த தீவிரவாதிகள் நாட்டின் நலனையோ அல்லது பௌத்த தர்மத்தையோ அல்லது ஏனைய சமுகங்களின் சமய விழுமியங்களை மதிக்காது ஒரு குறிப்பிட்ட சில அரசியல் பலமுள்ளவர்களின் செல்வாக்குகளைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்கள் மீது கண்மூடித்தனமாக தமது ஈனச் செயல்களை மேற் கொண்டு வருவதும் உடல், உள ரீதியான முறையில் மனித தர்மத்திற்கு அப்பாற்பட்ட வகையில் அப்பாவி மக்கள் மத்தியில் நடந்து கொள்வதற்கு விரைவில் சர்வதேசத்தின் பரிகாரத்திற்கும், கண்டனத்திற்கும், ஏன் விசாரணைகளுக்கும் கூட முகங் கொடுக்கவேண்டியதொரு காலம் தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

அந்தளவிற்கு இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளில் அவர்களது கருமித்தனத்தையும், பழிவாங்கும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளனர்.

ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் அனைத்து இன மக்களையும் ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும் ஆனால் இலங்கையில் ஜனாதிபதி சகல அதிகாரங்களையும் வைத்துள்ள போதிலும் அது வெறும் எழுத்து வடிவிலான செல்லாக் காசாக இருப்பதாகவே மக்கள் நோக்குகின்றனர். காரணம் ஞானசார தேரர் உள்ளிட்ட வன்முறைக் குண்டர்கள் சட்டத்திற்கும் நீதிக்கும் ஏன் ஜனாதிபதியின் அதகிhரங்களுக்கு கூட சவால் விடும் சண்டித் தனங்கள் கொண்டவர்களாக சமுதாயத்தில் அருவருக்கத்தக்க ஒரு குழுவாகவே இன்று அனைவராலும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

சட்ட ரீதியற்ற ஒரு கும்பல் துள்ளும் போதும் அவை அடுத்தவருக்குச் செய்யும் அடாவடித் தனங்கள் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டங்கள் தற்போது செயலிழந்து விட்ட அல்லது இல்லாதொழிக்கப்பட்ட நிலைமைகளையே சென்று கொண்டிருக்கின்றதா? என்ற சந்தேகம் கூட ஏற்பட்டுள்ளது.

ஒரு குழு சட்டத்தை மீறும்போது அதற்கு எந்தவித தடைகளும் இல்லை மாறாக சிறுபான்மை மக்கள் ஏதாவது செய்துவிட்டால் அது சாதாரண விடயமாக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கைளை மேற் கொள்ளும் ஒரு நாடாகவே இலங்கை சர்வதேசத்தில் இன்று தோற்றம் பெற்றுள்ளதை ஞானசார தேரரின் இனவாத மற்றும் மதவாதச் செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றதாக முஸ்லிம் கல்விமான்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இனவாதக் கும்பல்களால் மேற் கொள்ளப்பட்டு வரும் காடைத் தனச் செயற்பாடுகளின் எதிரிரொலி அரசாங்கத்தை ஆட்டம் கான வைப்பதற்கான நகர்வினை நோக்கியதாகவே உள்ளதாக பௌத்த புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தவகையில் பார்க்கும்போது அடுத்த தேர்தல்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பக்கள் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வாறு ஒரு அரசியல் மாற்றம் ஏற்படுமானால் அது இலங்கை வாழ் சமாதான விரும்பிகளுக்கு புத்துயிர் அளிக்கும் ஒரு விடயமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லையென வன்முறைகளுக்கு எதிரானவர்கள் கருதுகின்றனர்.

அனைவருக்கும் சொந்தமான ஒரு ஜனநாயக நாட்டில் சட்ட ரீதியற்ற ஒரு கும்பல் சிறுபான்மை மக்களின் இடங்களுக்குள் அத்துமீறிச் சென்று மிரட்டுவதும் இந்த நாடு உங்களுக்குச் சொந்தமில்லை, நீங்கள் குட்டிபோட்டு பெருகுவதற்கும் இந்த இடங்கள் இல்லை என்று வஞ்சித்து கூக்குரல் இடுவதற்கும் வழிவகுத்து அதற்கு தகுந்த பாதுகாப்பும் வாகன வசதிகளும் வழங்கப்படுமானால் அந்த நிலைமைகள் பற்றிச் சிந்திப்பதில் கூட சந்தேகங்கள் காணப்படுகின்றன.

மூன்று தஸாப்த கால பல்வேறு வகையான இன்னல்களை சுமந்துவிட்டு சற்று நிம்மதி கிடைக்கும் என்ற நோக்கில் அரசின் மிகக் குறைவான வசதிகளுடன் சென்று தமது பூர்வீகத்தில் குடியேறிய மன்னார் மரிச்சிக்கட்டி மக்களைக் கூட காவி உடை வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. நொந்துபோன மக்களிடத்தில் பகிரங்கமாக மானிட தர்மத்தை மீறிச் செயற்பட்ட வெறுக்கத்தக்க மனிதர்களான பொதுபல சேனாவின் காடைச் செயலை வைத்து நோக்கும்போது அரசாங்கத்திற்கும் பொதுபல சேனாவிற்கும் வித்தியாசமின்மையைக் காட்டி நிற்கின்றன.

சில வேளைகளில் மேற்படிக் குழுவினரின் செயற்பாடுகளை ஜனபரிபதி மறைமுகமாக கட்டுப்படுத்த முற்பட்டாலும் பொதுபல சேனாவிற்கு பாதுகாப்புச் செயலாளரின் பூரண ஆசீர்வாதம் இருப்பதாக இன்று பரவலாக எல்லோராலும் பேசப்படுவதால் குறிப்பாக பொதுபல சேனாவின் முக்கிய காரியாலமொன்றை கடந்த வருடம் பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்து அதில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் இன்று பொதுபல சேனா எனது வழியில் செல்வதாக குறிப்பிட்டுள்ளமை சிறுபான்மைச் சமுகங்களை தாக்குவதற்கு ஒரு உந்துதலை வழங்கியுள்ளதுடன் துணிச்சலுடன் முஸ்லிம்களை தாக்குவதற்கு இன்றை அவர்களின் அடாவடித் தனங்கள் காட்டி நிற்கின்றன.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் துறை இன்று சட்டத்திற்கும், நீதிக்கும் சவால் விடும் வகையில் மனித உரிமை மீறல்களைச் செய்யும் தீய அமைப்பிற்கு உயர் பாதுகாப்பு வழங்கி வருகின்ற நிலைமைகள் இலங்கையின் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுகின்றனர் என்பதனையே உணர்த்தியுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் தமிழிலே ஒரு பலமொழி உள்ளதுபோல் அதாவது துள்கின்ற மாடு பொதி சுமக்கும் என்பதுபோல் பொதுபல சேனா மிக விரைவில் செய்த அட்டூழியங்களுக்கு அதற்கான விளைவை அடைந்து கொள்வர் என்பதில் சந்தேகம் இல்லையென பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி இனவாதிகளின் செயற்பாடுகளை யதார்த்த பூர்வமாக நோக்கும்போது சிறுபான்மை மக்கள் மீதான செயற்பாடுகள் அரசியல் ரீதியாகவும் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் நீண்டகாலமாக திட்டமிடல் மூலம் மேற் கொள்ளப்பட்டு வருவதை கடந்த காலங்களில் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சமய விழுமியங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரங்கேற்றங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.
எனவே இனிவரும் காலங்களில் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை இனவாதிகள் வழங்காது சூறையாடும் ஒரு யுகத்தின் ஆரம்பமே தோற்றம் பெற்றுள்ளதால் சமுகங்கள் ஒற்றுமைப்பட்டு சிந்திக்க வேண்டியதொரு இக்கட்டான நிலையில் சிறுபான்மைச் சமுகங்களின் தேவைப்பாடுகள் உணரப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அரசையும், அதன் அமைச்சர்களையும் நம்பி நம்பி ஏமாந்தது சிறுபான்மை மக்கள்தான் அந்தவகையில் பார்க்கும்போது எதிர்காலத்தை திட்டமிட்டு தீர்மாணிக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இந்த பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கே உரித்தான விடயமாகும்.

வாழ்விடங்களுக்குள் சட்டத்திற்கு முறணான விதத்தில் ஊடுருவும் நிலை பொதுபல சேனாவிற்கு வருமாயின் அந்த சந்தர்ப்பம் யாரால்? எதனால்? வந்தது என்பதனைச் சிந்திக்க வேண்டும். இவர்களின் ஆட்டத்திற்கு தற்போது துணைபோகின்றவர்களை மக்கள் இனங்கண்டாலும் அவர்களின்; பாதுகாப்பு விடயத்தில் மௌனிகளாக இருப்பதிலும் நியாயங்கள் உள்மையையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய இலங்கையில் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்தால் அதற்கும் மாற்றுக் கருத்துக்கள் சோடிக்கப்பட்டு கைது செய்யப்படும் ஒரு காலமாகவே இன்றைய இலங்கையின் நிலை காணப்படுகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய இனவாதச் செயற்பாடுகளின் மிகைத்தன்மைகள் காரணமாக மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கிய குறிப்பாக சிறுபான்மைச் சமுகங்கள் ஒரு மாற்றம் வேண்டி நிற்பதனையே கடந்த மாகாண சபைத் தேர்தல்களின் வெளிப்பாடுகள் தோற்றுவித்துள்ளது. மேற்படி இனவாத நிலைமைகள் மக்களை அரசின் மீது வெறுப்படையும் காலத்தை நோக்கிய நகர்வாக குறிப்பிடலாம்.

எனவே வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசியல் மாற்றம் ஒன்றின் மூலமே செய்ய முடியும் என்பதனை உணர்த்தியதான வெளிப்பாடுகளே கடந்தகால நிலைமைகளின் விளைவுகள் காட்டி நிற்கின்றன.

No comments

Powered by Blogger.