Header Ads



மறிச்சிகட்டி மக்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மன்னார்-மறிச்சிகட்டி, மரைக்கார்தீவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான வழக்கை மேலதிக விசாரணைகளுக்காக அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி தெரிவித்தார்.
 
மேற்படி மறிசிக்கட்டி மக்கள், வில்பத்து வன பகுதியல் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள் என கூறி வன பரிபாலனை சபையினால் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி இதனைத் தெரிவித்தார்.
 
மேற்படி மறிச்சிகட்டி மக்கள் இங்கு சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளார்கள் எனவும், இவர்கள் இலவங்குளத்தில் அமைந்திருக்கும் வன பரிபாலனசபை அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் இன்றைய விசாரணைகளின்போது வில்பத்து வன பரிபாலனசபை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் இங்கு எவ்விதமான கட்டுமானங்களையோ அல்லது அவிவிருத்திகளையோ மேற்கொள்ளாதிருக்க தடையுத்தரவு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
 
இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று 'மறிச்சிகட்டி மக்கள் இங்கு சட்டவிரோதமாகக் குடியிருக்கவில்லை' என ஒருமித்து தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், இந்தக் காணி இம்மக்களின் பூர்வீக சொத்து என்பதனை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள், மற்றும் தகவல்களைத் திரட்ட வேண்டிய தேவை இருக்கின்ற நிலையில் இதற்குக் கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டு வழக்கை பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கும்படியும் நீதிபதியைக் கோரினர்.
 
இவற்றை கவனத்திற் கொண்ட நீதிபதி வழக்கை எதிர்வரும் மே 22ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்ததுடன், மேற்படி மறிச்சிக்கட்டி மக்களை இலவங்குளத்தில் அமைந்திருக்கும் வன பரிபாலனசபை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று வாக்குமூலம் அளிக்கும் படியும் உத்தரவிட்டார்.
 
இதன்போது பிரதிவாதிகளாக மன்றில் ஆஜராகியிருந்த 4 பேர் நீதிபதியின் உத்தரவின் பேரில் ரூபாய் 25000 சரீரப்பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.