Header Ads



'வளம் மிக்க மண்ணை எழில் கொஞ்சும் இஸ்லாமிய நகராக்குவோம்'



(ரசாத் மொஹமட்)

அஸ்ஸலாமு அலைக்கும்!

'لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ'

 'மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.'  (அல்-குர்ஆன் - 13:11) 

இன்றைய காலகட்டத்திலே எமது சமூகத்தினுடைய நிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஓர் உண்மை. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை வழிமுறைகளை விட்டு விலகிக் கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் அனாச்சாரம், பொய், களவு, இலஞ்சம், மோசடி, விபச்சாரம், தொழுகையில்லை, ஸகாத் இல்லை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். முன்னொரு காலத்தில் மஃரிப் தொழுகைக்குப் பின்னர் எங்களுடைய வீடுகளில் ஊதுபத்திகளுடைய வாசனைகளும், அல்-குர்ஆன் ஓதும் ஓசைகளும் தான் கேட்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று தொ(ல்)லைக்காட்சிப் பெட்டிகளுடைய ஓசைகளையே கேட்கக் கூடியதாக உள்ளது. தொலைக்காட்சியிலே நல்ல விடயங்களைப் பார்த்தால் பரவாயில்லை, மாறாக இரவு பகலாக அதன் முன்னே தந்தை, தாய், குழந்தைகள், மாமா, மாமி, அண்ணன், தங்கை, பாட்டன், பாட்டி என ஒட்டு மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து கொண்டு கேவலம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அரை குறை ஆடைகளுடன் ஆடும் காட்சிகள், முத்தம் கொடுக்கும் காட்சிகள், முதலிரவுக் காட்சிகள், குளியலறைக்காட்சிகள் காதல் காட்சிகள் போன்ற ஆபாசக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே எமது கலாச்சார சீரழிவிற்கு முதற்காரணமாக இருக்கிறது.

இதன் இரண்டாம் கட்டம்தான் ஆடைக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றம். இன்றைய எமது சகோதரிகள் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு திரைப்பட நடிகைகளைப் போல தாங்களும் உடை அணிய வேண்டும் என்பதற்காக கணவன், பெற்றோர்களுடைய உதவியோடு கொலவெறி, மசார்களி போன்ற நுளம்பு வலைகள் போன்ற வலைகளாலான இறுக்கமான, நல்ல கவர்ச்சிகரமான ஆடைகளை முலங்கைக்கு மேல்  அன்னிய ஆண்கள் தங்களை ரசிக்க வேண்டும் என்பதற்காக அணிகிறார்கள். இவ்வாறான ஆடைகளுடன் கேவலம்கெட்ட கணவன்மார்கள், பெற்றோர்கள் தங்களுடைய வீட்டுப் பெண்களை வெட்கம் இல்லாமல் கூட்டித்திரிவதைக் காணலாம். இப்படியான சகோதர ககோதரிகளே உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் வரவில்லையா? அல்லாஹ்வுக்கு பயம் வரவில்லையா? 

அடுத்த விடயம்தான் காதல் என்ற பெயரில் விபச்சாரம். இன்று இளம் வயது ஆண்கள், பெண்களில் 95மூமானவர்கள் காதலிக்கின்றவர்களாக உள்ளனர். சில ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுடைய திருமணத்திற்கு முன்பு ஒன்று இரண்டல்ல பல காதலை செய்து விடுகிறார்கள். காதல் மட்டுமல்ல காதலிக்கும் நாட்களில் தம் காதலர்களுடன் விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் திருமணம் முடிப்பதோ வேறு நபரை. 

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் உட்பட அனேகமான இளைஞர்கள் கையடக்கத் தொ(ல்)லைபேசி பயன்படுத்துபவர்களாக உள்ளனர். காதல் என்ற விபச்சாரம் செய்பவர்களுக்கு, ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கு இதுவே மிகமுக்கிய நண்பனாக உள்ளது. சிலர் சொந்தமாக வைத்திருக்கிறார்கள், சிலர் பெற்றோர் மற்றும் வீட்டு சகோதரர்களுடைய தொ(ல்)லைபேசியைப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் சிலர் வீட்டாருக்கு தெரியாமல் வாங்கி இரகசியமாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படிப் பயன்படுத்துவோர் எத்தனையோ பேர் பாடசாலைகளில், வீடுகளில் பிடிபட்ட சம்பவங்கள் ஏராளம்....... ஏராளம்...... ஆகவே அன்புக்குரிய பெற்றார்களே உங்கள் வீட்டு இளைஞர்களுடைய விடயத்தில் மிகக் கவனமாக நடந்து கொள்ளுங்கள். 

அது மட்டுமல்ல, அண்மைக்காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக, குறிப்பாக பள்ளிவாயில்களுக்கு, ஹலால் சான்றிதழுக்கெதிராக பல்வேறு சதித்திட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது எங்களுடைய மனம் கடுமையாக வேதனைப்பட்டது, அப்படி செய்பவர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் பொங்கி எழுந்தோம் 'மாஷா அல்லாஹ்' நல்ல விடயம்தான். ஆனால் நாங்கள் தொழ மாட்டோம், ஹராமான சாராயம் குடிப்போம், புகைபிடிப்போம். அப்படினா இதைதானா 'மம்மலவட' நியாயம் என்பது. இன்றைய நமது முஸ்லிம் இளைஞர்களில் 75 & க்கும் அதிகமானோர் சிகரட், சாராயம் பயன்படுத்துவோராக உள்ளனர். அப்படியென்றால் இப்படியான நாங்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும். சிலர் சிகரட், பீடி குடித்து விட்டு அந்த நாத்த வாயோடு தொழுகைக்கு வருகிறார்கள். நீங்கள் எதுக்கு வீணாக தொழுகைக்கு வருகிறீர்கள்? இப்படி செய்துவிட்டு வந்தால் எப்படி உங்களுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்?

 அத்துடன் நாம் அனைவரும் அறிந்த விடயம்தான் வியாபாரம் ஓர் இபாதத் என்பது. ஆனால் அப்படிப்பட்ட வியாபாரத்தை எமது பல சகோதரர்கள் தங்களின் அறியாமையினால் ஹராமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாம் ஹலாலாகத்தான் உழைக்கிறோம் என்று. ஆனால் அவர்கள் ஓரு ரூபாய், இரண்டு ரூபாய் இலாபத்திற்கு ஆசைப்பட்டு பீடி, சிகரட் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் தங்களுடைய வியாபாரத்தை ஹராமானதாக மாற்றுகின்றனர். இப்படியான கடை உரிமையாளர்களே நீங்கள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தினால் அதனை பயன்படுத்துவோர் அதனை தானாகவே நிறுத்திவிடுவார்கள். இல்லையென்றால் அதைப் பயன்படுத்துவோரை விட அதிகமான பாவம் உங்களுக்கே..

2059. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

'தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!'  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மேலும் அண்மைக்காலமாக எங்களுடைய சகோதரிகளும், சகோதரர்களும் திருகோணமலைக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக, தொழிலுக்காக செல்வது அதிகரித்துள்ளது. அப்படிச் செல்பவர்கள் உங்களுக்கும் இஸ்லாத்திற்கும் கலங்கம் ஏற்படாத வன்னம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலே நாம் சில பிரச்சினைகளை மட்டுமே கூறியிருக்கிறோம். இன்னும் பல பிரச்சினைகள் கூறப்படாமலும், கூற முடியாமலும் இருக்கிறது. எனவே அன்புள்ள இஸ்லாமிய நெஞ்சங்களே! இவ்வாறான நிலை மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும்.  நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே உனது இளமையை எவ்வாறு கழித்தாய்?, உனது சமூகத்திற்கு என்ன செய்தாய்?, இஸ்லாத்திற்கு என்ன செய்தாய்?, மெய்ப்பாளர்களாகிய தலைமைப்பதவியிலே இருந்தாயே உனது தலைமைத்துவத்தை சரியாக செய்தாயா?, ஒரு தந்தையாக, ஒரு கணவனாக உனது குடும்பத்தை நல்ல வழியிலே வழிநடத்தினாயா? போன்ற பாரிய பொறுப்புமிக்க கேள்விகளுக்கு நாம் நல்ல முறையிலே பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், மரணம் எந்த நேரத்திலும் எம்மை ஆக்கிரமிக்கலாம்.

7138. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்',

'நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்'.

நமது பிறப்பு வேண்டுமானால் ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். 97.4 & முஸ்லிம்கள் வாழும் இந்த அழகிய ஊர் கல்வி, கலாச்சாரங்களில் கொடிகட்டிப் பறக்க வேண்டும். அனாச்சாரங்கள் ஓழிய வேண்டும். சுவன பூமியாய் ஜொலிக்க வேண்டும். இனிமேலாவது நாம் செய்கின்ற பாவங்களை எல்லாம் விட்டு திருந்தி நடக்க வேண்டும். நிச்சயம் நாம் செய்தபாவங்களுக்கெல்லாம் இறைவனிடத்திலே பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

எனவே கண்ணியத்துக்குரிய இளைஞர் யுவதிகளே!, மாணவர்களே!, தாய்மார்களே! தந்தைமார்களே!, வியாபாரிகளே!, ஆசிரியர்களே!, அதிபர்களே!, உலமாக்களே!, அரசியல் தலைமைகளே!, நாம் அனைவரும் இனிமேலாவது இவ்வாறான நிலமைகளிலிருந்து நாம் மாறவும் வேண்டும் எமது சமூகத்தை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் பொறுப்புதாரிகள்.

'புறப்படுங்கள்!!!!!!;
வளம் மிக்க நம் கிண்ணியா மண்ணை
எழில் கொஞ்சும் இஸ்லாமிய நகராக்குவோம்'

Movement for Islamic Cultural and Education Revival.
இஸ்லாமிய கலாச்சார மற்றும் கல்வி மறுமலர்ச்சிக்கான இயக்கம்.
கிண்ணியா.


No comments

Powered by Blogger.