Header Ads



ஈரானின் அடுத்த ஜனாதிபதி யார்..? - 8 வேட்பாளர்களிடையே கடும் போட்டி



ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து இரு முன்னணி நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹஷ்மி ரப்சன்ஜானி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்தின் நெருங்கிய நண்பரான இஸ்பன்தியர் ரஹிம் மஷாய் ஆகியோரை பாதுகாவலர் சபை தகுதி நீக்கம் செய்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 686 பேர் வேட்பமனுத் தாக்கல் செய்த போதும் இறுதிப் பட்டியலில் வெறும் எட்டுப்பேரே வேட்பாளராக தேர்வாகியுள்ளனர். வேட்பாளரைத் தேர்வு செய்யும் பாதுகாவலர் சபையானது ஈரானின் உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா அலி கொமெய்னியின் நம்பிக் கைக்குரிய சபையாகும். இறையியல் மற்றும் சட்ட நிபுணர்களைக் கொண்ட 12 உறுப்பினர்கள் உள்ளடங்கிய இந்தக் குழு தேர்வு செய்திருக்கும் 8 வேட்பாளர்களும் கடும்போக்கு பழைமை வாத கொள்கையுடையவர்கள் என்றும் ஈரானின் ஆளும் மதத்தலைவர்களுடன் தொடர்புபட்ட வர்கள் என்றும் கருதப்படுகின்றனர்.

இதில் ஈரானின் பிரதான அணு சக்தி தொடர்பான தூதுவர் சயீத் ஜலீல், முன்னாள் அணு சக்தி தூதுவர் ஹஸன் ரோஹானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அல் அக்பர் வெலயாதி மற்றும் தெஹ்ரான் நகர மேயர் மொஹத் பாகிர் காலிபவ் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளனர். தவிர, புரட்சிப் படையின் முன்னாள் தளபதி மொஹசன் ரஸாய், முன்னாள் சபாநாயகர் கொலமாலி ஹத்தாத் அதல், முன்னாள் அணுசக்தி தூதுவர் ஹஸன் ரவ்ஹானி, முன்னாள் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மொஹமத் ஹராசி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மொஹமத் ரசா ஆரிப் ஆகியோரும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தேர்வாகியுள்ளனர். இதில் மொஹமத் ரசா ஆரிப் மாத்திரமே சீர்திருத்த சிந்தனை கொண்டவர் என நம்பப்படுகிறது.

தகுதி நீக்கப்பட்ட ரப்சன்ஜானி 1989 தொடக்கம் 1997 ஆம் ஆண்டுவரை ஈரான் ஜனாதிபதியாக இருந்தவராவார். இவருக்கு சீர்திருத்த ஆதரவாளர்கள் மற்றும் மையவாத அரசியல்வாதிகளிடம் ஆதரவு இருந்தது. ரப்சன்ஜானி தகுதி நீக்கப்பட்டதற்கு பாதுகாவலர் சபை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் 78 வயதான ரப்சன்ஜானியின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு அவர் தகுதி இழக்கச் செய்யப்படலாம் என பாதுகாவலர் சபையின் பேச்சாளர் அப்பாஸ் அலி குறிப்பிட்டிருந்தார்.

“சிரேஷ்ட நிர்வாகப் பதவியை ஏற்கும் நபர் ஒரு நாளில் பல மணி நேரம் பணிபுரிவதற்கு தகுதியுடை யவராக இருக்க வேண்டும். அவ்வாறு சாத்தியமில்லா விட்டால் அனுமதி அளிக்க முடியாது” என அப்பாஸ் அலி, அல் அலாம் தொலைக் காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார். ஈரானின் தற்போதைய ஜனாதிபதி அஹமதி நிஜாத்தால், எதிர்வரும் ஜூன் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டத்தில் இடமில் லாத நிலையில், அவரது நெருங்கிய நண்பர் மஷாய்கிற் கும் தற்போது வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. மஷாய் மதவிவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவர் எனப் பிரபலமாகி இருந்தார். 

இவர் ஈரானின் இஸ்லாமிய முறையை அவமதிக்கும் வகையில், பழைமைவாத மதத் தலைவர்கள் நடைமுறை சாத்தியத்திலிரந்து விலகிச் செயற்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தாம் தகுதி நீக்கப்பட் டதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள மஷாய், உயர்மட்ட தலைவரிடம் மேன்முறையீடு செய்வதாகவும் கூறியுள்ளார். எனினும் தனது தகுதி நீக்கம் பற்றி ரப்சன்ஜானி எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் இந்த முடிவுக்கு எதிராக சமூக இணையதளங் களில் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மேன் முறையீடு செய்ய இடமில்லை என பாதுகாவலர் சபையின் பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

இதில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த 30 பெண்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் பெண்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் கண்காணிப்பு உறுப்பினரான ஆயத்துல்லா மொஹமட் யஸ்தி ஏற்கனவே கூறியிருந்தார். இதன்படி உயர்மட்ட தலைவர் ஆயத்துல்லா கொமைனி தனக்கு ஆதரவானவர்களையே தேர்தலில் நிற்கச் செய்திருப்பது தெளிவாவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மூன்று வேட்பாளர்களும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்திய போதும் உயர்மட்ட தலைவர் அதனை முற்றாக நிராகரித்தார்.

இவர்களில் முன்னாள் பிரதமர் மிர் ஹுஸைன் முஸா மற்றும் சிரேஷ்ட மதத்தலைவர் மஹ்தி குர்ராபி உள்ளடங்குகின்றனர். இவர்கள் அரபு எழுச்சியை ஒட்டி 2011 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டதை அடுத்து வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் தடுப்பு காவலிலேயே உள்ளனர்.  தினகரன்

No comments

Powered by Blogger.