Header Ads



ஷரீப்தீன் பவுண்டேசனின் 2013ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு



'நான் பிறந்த இந்த மண்ணிலிருந்து நீண்ட தொலைவில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற போதிலும், இந்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு என்னால் முடிந்த உதவிகளையும், ஆக்கபூர்வமான கல்வி முன்னேற்ற செயற்றிட்டங்களையும் அரசியலுக்கு அப்பால் நின்று செயற்படுத்தி வருகின்றேன். இவ்வாறான இந்த உதவித் திட்டங்களை கல்விமான்களாகிய இங்கு வருகை தந்துள்ள அதிபர்கள் எதிர்காலத்தில் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.' என்று ஷரீப்தீன் பவுண்டேசனின் 2013ம் வருடத்திற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி 1ம் குறிச்சி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற போது பவுண்டேசனின் ஸ்தாபக பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன் தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 'கடந்த இருபது வருடங்களாக ஆசிரியராக வெளிநாட்டில் கடமை புரிகின்ற எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்ட பெருமிதம் அடைகின்றேன். எனது தந்தை ஓர் ஆசிரியராக இந்த ஊரில் மாணவர்களுக்கு செய்த சேவையை தொடர்ந்தம் என்னால் முடிந்த வரை செய்ய வேண்டும் என்பதே எனது அவாவாகும். வெறுமனே சமூகம் எனது பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவோ, ஏனையோர் என்னைப் புகழ வேண்டும் என்பதற்காகவோ கல்விப் பணி செய்யாது, எமது முன்மாதிரியைப் பார்த்து படித்தவர்களும், வசதி படைத்தவர்களும், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் சகோதரார்களும் தம்மால் முடிந்தளவு இப்பிரதேச வறிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். வறுமை கல்விக்கு தடையல்ல என்பதை எனது ஆரம்ப வாழ்வில் அனுபவத்தில் கற்றறிந்தவன் நான் என்பதையும், நளீம் ஹாஜியாரின் செல்வத்தில் கல்வி கற்றவன் என்ற வகையில் அவரை எனது வாழ்வில் மிகப்பெரும் முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றேன்' எனவும் கருத்துரைத்தார்.

சகோதரர் எம். சி. எம். ஜவுபர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்திற்கு சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் எம். சி. எம். ஏ. சத்தார்;, மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். எம். இஸ்மா லெப்பை;, பாலமுனை அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம். ஹைறுள்ளாஹ், பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலய அதிபர் ஏ. பி. அப்துர் ரசூல் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். எம். இஸ்மா லெப்பை அவர்கள் 'கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி அந-நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராக மற்றும் அதிபராக நீண்ட காலம் கடமையாற்றிய ஓர் ஆசிரியர்தான் மர்ஹூம் ஷரீப்தீன் ஆசிரியர். தினமும் பாடசாலைக்கு சுபஹூக்கு பின்னர் சென்று தனது கையினால் பாடசாலை முற்றத்தை கூட்டித் துப்பரவு செய்கின்ற ஓர் ஆசிரியராக நான் கண்டிருக்கின்றேன். பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தனது சிறிய மாதாந்த சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை கொடுத்து அப்பியாசக் கொப்பிகளை வாங்கிக் கொடுத்த ஓர் பண்பாளர். இவரை அல்லாஹ் பொருந்திக் கொண்டதற்கு அடையாளமே ஹூசைனியா பள்ளிவாயலில் 1990ம் ஆண்டு ஸஹீதாக்கப்பட்டார். இந்த முன்மாதிரியைக் கொண்டே அவரது மகன் முன்னெடுக்கின்ற இந்த புலமைப்பரிசிலை நீங்கள் கல்விக்காக மாத்திரம் பயன்படுத்த வேண்டும். என வினயாமக் கேட்டுக் கொள்கின்றேன்' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்களால் மாணவர்களுக்கு ஷரீப்தின் பவுண்டேசனின் மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவ்வருடம் பவுண்டேசனின்; தெரிவுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஆரம்பக் கல்வி கற்கும் 20 மாணவர்களும், இடைநிலைப் பிரிவில் 61 மாணவர்களும், உயர்தரம் கற்கும் 9 மாணவர்களும், பல்கலைக் கழகத்தில் உள்ள 30 மாணவர்களும் உட்பட 120 மாணவர்கள் இதன்போது புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர். 






No comments

Powered by Blogger.