Header Ads



வாசுதேவவின் கரங்களை பலப்படுத்துவோம்


மதங்களுக்கு எதிராகவும் இனங்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை நிறுத்தும் ஒரு நடவடிக்கையாக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை போன்ற வளர்முக நாட்டுக்கு மிக தேவைப்படும் ஒரு சட்டமாகவே இதனை கருத முடியும். அண்மைக்காலமாக சிறுபான்மை இனங்களுக்கெதிராகவும் அவர்களது சமயங்களுக்கெதிராகவும் பல்வேறுபட்ட வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக ஒரு பாரதுõரமான பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. சில கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கெதிராக மிக மோசமான வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தன.

இச்செயற்பாடு காரணமாக நாட்டில் நீண்ட காலமாக இனங்களுக்கிடையே இருந்து வந்த நல்லெண்ணம், சகவாழ்வு சீர்குலையும் நிலை உருவாகியது.

இந்த நிலமையை அவதானித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்துவதற்காக சட்ட வரைவுகளை தயாரித்துள்ளார். விரைவில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இவ்வாறான சட்டம் ஒன்று 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இனங்களை பாதிக்கும் வகையில் ஒரு சிறிய விடயத்தை செய்தாலும் அதற்கு தண்டனை வழங்குவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கின்றது.

அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் 19க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இஸ்லாமும் இஸ்லாமிய கொள்கைகளும் மிக மோசமாக கொச்சை படுத்தப்படுகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் உதவும் என எதிர்பார்க்கின்றோம்.

சிங்கப்பூரில் 74.2 சதவீத சீனர்களும் 13.4 சதவீத மலாய முஸ்லிம்களும் 9.02 சதவீத இந்திய வம்சாவளியினரும் 3.2 சதவீத ஏனைய இனத்தவர்களும் வாழ்கின்றார்கள். அந்த நாடு இன்று உலகத்திலே ஒரு முன்மாதிரியான அபிவிருத்தி கண்ட நாடாக வளர்வதற்கு இது போன்ற சட்டங்கள் உதவியுள்ளன. இலங்கையிலும் 74 சதவீதமான பௌத்தர்களும் 18 சதவீதமான தமிழர்களும் 9 சதவீதமான முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் மத்தியிலே சக வாழ்வையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதன் மூலமே நாட்டின் முன்னேற்றம் தங்கியுள்ளது.

ஆசியாவின் ஆச்சரியமிகு நாடாக இலங்கையை மாற்ற கனவு காண்கின்ற நாம் அதற்கிருக்கின்ற தடைகளை அகற்ற வேண்டும். இன, மத இனங்களுக்கிடையேயான வெறுப்புணர்வுகள் வளர்வதற்கு துணையாக உள்ள செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால் சிங்கப்பூரில் இருப்பது போன்று தேசத்துரோக சட்டம் இலங்கையிலும் அமுல் செய்யப்பட வேண்டும்.

யுத்தத்திற்கு பின் இலங்கையில் உருவாகி வந்த நல்ல சூழ்நிலை மற்றும் சகவாழ்வுக்கான சூழ்நிலை இன, மத வெறுப்புப் பிரச்சாரங்களினால் இல்லாமல் செய்யப்படும் நிலமை உருவாகியிருக்கின்றது. இந்த பின்னணியில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொண்டு வரவுள்ள சட்டம் நாட்டுக்கு நிச்சயம் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.

அரச எதிர்க்கட்சி பேதமின்றி சகலரும் இச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கி அதனை ஏகமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நாட்டில் சகவாழ்வை உருவாக்க சகலரும் பங்களிப்புச் செய்வோமாக.

இவ்விடயத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கரங்களை பலப்படுத்துவோம்.

1 comment:

  1. ஆம் அமைதியை விரும்பும் அனைவரும் இதனை ஆதரிக்கவேண்டும் முஸ்லிம்களின் விரோதி யார், நண்பன் யார், என்பது தெளிவாகி விடும்.
    வாசு சஹோதரயாவின் முயற்சி வெற்றிபெற அனைவரும் மான சீகமாக பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.