Header Ads



''கௌரவ அரசியல்'' சிங்கத்தின் வாலா..? எலியின் தலையா...??



(தம்பி)

நாடகம் முடிந்து விட்டது போல் தெரியலாம். ஆனால் - உண்மையில் முடியவில்லை. மேடையின் திரைச்சீலைகள் விழுகின்றபோது, நாடகம் முடிந்து விட்டதென்று நினைத்து விடக் கூடாது. அடுத்த காட்சி அரங்கேற்றப்படுவதற்கு முன்பும் - திரைச் சீலை விழுவதுண்டு. பொதுபலசேனா அமைப்பினரின் கூத்துக்களைத்தான் நாடகம் என - நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். 

இந்த நாடகமானது உண்மையில் ஒரு பொம்பலாட்டமாகும். காவி உடைகளுடன் சுழலும் பொம்மைகளில் கட்டப்பட்டுள்ள நூல்களின் மறு முனைகள் - யாரின் கைகளில் உள்ளன என்பதை எல்லோரும் அறிவர். ஆனால், அறிந்தவர்கள் எல்லோரும் இதைச் சொல்வதில்லை. பொம்மைகளை ஆட்டுவிப்பவன் யார் என்பதை - சிலர் அப்பட்டமாகப் போட்டுடைக்கின்றனர். சிலர் குத்துமதிப்பாகக் கூறுகின்றனர். சிலர் இது குறித்துப் பேசுவதேயில்லை. 

பேசாமல் இருப்பது – பாதுகாப்பானது என 'பேசாமல் இருப்பவர்கள்' எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பேசுவதை விடவும் பேசாமல் இருப்பது ஆபத்தானது என்பதை 'பேசாமலிருப்பவர்கள்' ஒரு நாள் புரிந்துகொள்ள வேண்டிவரும்.

பொம்லாட்டம் பற்றியும், பொம்மலாட்டக்காரன் குறித்தும் - துணிச்சலோடு பேசுவது 'பெருத்த' விடயம்தான். ஆனால், பேசுவது மட்டுமே தமது கடமை என்று பிழையாக எண்ணிக்கொண்டு, 'பேசுவோர்' - இருந்துவிடவும் கூடாது. 
பொம்மைகளின் கூத்துக்கள் மிகவும் மோசமானவை, கயமைத்தனம் மிக்கவை, அருவருப்பானவை. ஆனால், அவைகுறித்து, பேசவேண்டியோர் பலர் பேசாமலிருக்கையில் - பேசுவதற்கு எந்தவிதக் கடமைப்பாடும் இல்லாதவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். 

மேடையில் திரைச்சீலை விழுந்து விட்டதால், 'தப்பினோம் பிழைத்தோம்' என்றெண்ணிக்கொண்டு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் - தங்கள் அடுத்த அரசியல் கூத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் பிரதானமானது, முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் கூடிச்சேர்ந்து நடத்துவதற்கு உத்தேசித்துள்ள - உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடாகும். 

எதையோ விட்டு – எதையோ பிடித்தல்     

இலங்கையில் முஸ்லிம்கள் ஹலால் தொடர்பில் அனுபவித்து வந்த சுதந்திரம் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம், முஸ்லிம்களுக்கான தனிச்சட்டம் உள்ளிட்டவற்றின் மீது ஏவி விடப்பட்டுள்ள பேய்கள் குறித்த பயம் இன்னும் தீரவில்லை.  இப்படி, அனைத்தும் அப்படியே கிடக்கின்றன. ஆனால், பிரச்சினைகள் எல்லாமே முடிந்து விட்டனபோல் - முஸ்லிம் அரசியல் தலைமைகள் போய்க் கொண்டிருக்கின்றன, அல்லது போக்குக் காட்டுகின்றன.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை இலங்கையில் நடத்துவது குறித்து நமக்கொன்றும் ஆட்சேபனையில்லை. ஆனால், இலங்கையில் முஸ்லிம்களின் இருப்புக்கே உலை வைக்கும் ஒரு சதித்திட்டம் நிகழ்ந்து கொண்டிக்கும் காலகட்டத்தில் - அதை முறியடிப்பதை விட்டுவிட்டு, ஓர் இலக்கிய மாநாடு நடத்துவதை முன்னிலைப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினை நடத்துவது குறித்த கலந்துரையாடலொன்று அண்மையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலுக்கு அமைச்சர் ஹக்கீம் தலைமை தாங்கினார். அடிப்படையிலேயே இது பிழையானதொரு விடயமாகும். ஓர் இலக்கியச் செயற்பாட்டுக்கு - கட்சிச் சாயம் வலிந்து பூசப்பட்டிருக்கிறது. 

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினை நடத்தும் அமைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதித் தலைவர்களாக அமைச்சர்கள் அதாஉல்லா, றிசாத் பதியுத்தீன், பஷீர் சேகுதாவூத் என்று – நீளமான பட்டியல். ஆனால், அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்ட சிலர் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வரவில்லை. 'நமக்கேன் தோல் தேங்காய்' என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இலக்கிய மாநாட்டினை நடத்துவதற்கான அமைப்பிலுள்ள இன்னும் சிலரின் பெயர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். 'கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை' என்று நீங்கள் சிரிக்கக் கூடும்.  

மேற்படி கலந்துரையாடலில், அமைச்சர் ஹக்கீம் நிகழ்த்திய உரையானது மக்களை ஏமாற்றும் அரசியல் நோக்கம் கொண்டது. தாம் நடத்தப் போகின்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய மிகப்பெரும் தோற்றப்பாடொன்றினை தன்னுடைய பேச்சினூடாக அவர் வெளிப்படுத்தினார். 

இவ்வாறானதொரு மாநாட்டினை நாம் நடத்துகின்றமையானது - பேரினவாதிதிகளுக்கு கடுப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதனை காரணம்காட்டி - முஸ்லிம்களுக்கெதிராக இதுவரை நடந்த கொடுமைகள் அனைத்தையும் விட பாரியளவிலான நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும். 2002 ஆம் ஆண்டில் - இதுபோலானதொரு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடொன்றினை இலங்கையில் நாம் நடத்தியபோது, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழீழ விடுதலைப் புலிகள், அதே காலப்பகுதியில் 'மானுடத்தின் தமிழ் ஊடல்' என்கிற பெயரில் இலக்கிய மாநாடொன்றினை நடத்தினார்கள் என்று ஹக்கீம் தெரிவித்தார். 

இதனூடாக, முஸ்லிம்களுக்கு ஹக்கீம் சொல்ல முயற்சிப்பது வேறொன்றுமில்லை. அடுத்த சமூகங்கத்தவர்களே பொறாமைப்படும் வகையிலான - ஓர் உலக இலக்கிய மாநாட்டினை நாம் நடத்தப்போகிறோம். இது மிகப்பெரும் சாதனையாகும். இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஆயிரத்தெட்டு தடைகளைத் தாண்டியே இந்த மாநாட்டினை இலங்கை முஸ்லிம்களுக்காக நாங்கள் நடத்துகின்றோம் என்று – அவர் சொல்ல முற்படுகின்றார். 

இப்படியெல்லாம் ஹக்கீம் பிரசாரம் செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. காவியுடைக்காரர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழிச்சாட்டியங்களை எதிர்க்க முடியாமல் - ஹக்கீம் உள்ளிட்டோர் கூனிக்குறுகிக் கிடந்தார்கள். இதனால், முஸ்லிம் மக்கள் இவர்கள் மீது ஏகப்பட்ட கடுப்பில் உள்ளனர். ஆக, மக்களுக்குப் பராக்குக் காட்டுவதற்கும், அதனூடாக மக்களின் கோபத்தினைத் திசை திருப்புவதற்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினை மு.கா. தலைவர் ஹக்கீமும் - அவரின் கூட்டாளிகளும் (ஆம் கூட்டாளிகள்தான்) பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

குனூத் விவகாரம்: குறிப்பால் உணர்த்துதல்

இன்னொரு புறம், பொதுபலசேனாவுக்கும் - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபையினருக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறித்து அறிவீர்கள். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த சந்திப்பினை அடுத்து, நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு உலமா சபையினர் அறிவிப்பொன்றினை விடுத்தனர். அதாவது, முஸ்லிம்கள் தமது ஐவேளைத் தொழுகையில் இனி குனூத் ஓதத் தேவையில்லை என்பதே அந்த அறிவிப்பாகும். 

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டில் அதிகரித்திருந்தபோது, ஐவேளைத் தொழுகைகளின் போது, குனூத் ஓதுமாறு ஜம்இய்யத்துல் உலமாசபையினர் முன்பு வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தனர். ஆபத்தான நிலைமைகளின் போது, முஹம்மது நபியவர்கள் குனூத் ஓதியுள்ளார்கள். அதற்கிணங்க, உலமாசபையினர் குனூத் ஓதுமாறு விடுத்திருந்த வேண்டுகோளினை பின்னர் மீளப் பெற்றனர்.

ஐவேளைத் தொழுகைகளில் - இனி குனூத் ஓதத் தேவையில்லை என்கிற உலமா சபையினரின் அறிவிப்பானது முஸ்லிம்களில் ஒரு தொகையானோருக்கு அதிப்தியினையும், கோபத்தினையும் ஏற்படுத்தியது. பொதுபலசேனாவினரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இன்னும் முடிவுக்கு வராததொரு நிலையில் உலமாசபையினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையானது சரியான தீர்மானமல்ல என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

பொதுபலசேனாவினருக்கும் - உலமாசபையினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை. அங்கு நிகழ்ந்த விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதில்லை என்று இரு தரப்பினரும் தீர்மானித்ததால் - உள்ளே நடந்ததை அறிய முடியவில்லை.  

இந்த நிலையில், பாதுகாப்பு செயலாளரின் அழுத்தத்தினாலேயே குனூத் ஓதுவதை நிறுத்துமாறு உலமாசபையினர் அறிவித்ததாக முஸ்லிம்களில் சிலர் குற்றம்சாட்டினர். ஆனால், அதை உலமாசபையினர் அடியோடு மறுத்து விட்டனர்.

தர்க்க ரீதியாக இந்த விடயத்தினை பார்த்தாலும் - குனூத் ஓதுவதை பொதுபலசேனாவோ பாதுகாப்பு செயலாளரோ நிறுத்துமாறு கோரியிருப்பதற்கான சாத்தியங்கள் குறைவாகும். காரணம், குனூத் என்பது முஸ்லிம்களின் மதத்தோடு சம்பந்தப்பட்டதொரு விடயமாகும். இஸ்லாத்தை நம்புகின்றவர்களுக்கே – குனூத் என்பது பெறுமானமுள்ளதாகும். இஸ்லாத்தில் நம்பிக்கையற்றோருக்கு குனூத் என்பது – ஒரு விடயமேயல்ல. எனவே, 'முஸ்லிம்கள் குனூத் ஓதினால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்துவிடம் என்று அஞ்சித்தான் பொதுபலசேனாவினரோ அல்லது அவர்கள் சார்பானவர்களோ குனூத் ஓத வேண்டாம் என்று உலமாசபையினரிடம் கோரியிருப்பார்கள்' என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சரி, அப்படியென்றால் - ஐவேளைத் தொழுகையிலும் குனூத் ஓதுவதை உலமாசபையினர் நிறுத்துமாறு ஏன் கோரினார்கள் என்கிற கேள்வியொன்று இங்கு எழுகிறதல்லவா? சரியாகக் கவனிக்கையில், குனூத் ஓதுவதை நிறுத்துமாறு உலமாசபையினர் வேண்டுகோள் விடுத்தமையினூடாக - அவர்கள் ஏதோ ஒரு விடயத்தினை முஸ்லிம்களுக்கு உணர்த்த விரும்பியிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.  

அதாவது, பொதுபலசேனா மற்றும் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தபோது, உலமாசபையினருக்கு ஏதாவது உத்தரவாதங்கள் கிடைத்திருக்கக்கலாம். அதாவது, முஸ்லிம்களுக்கு எதிராக - இனி, எந்தவித நடவடிக்கைகளும் இடம்பெறமாட்டாது என்று உலமாசபையினருக்கு உறுதிமொழி கிடைத்திருக்கக் கூடும். அதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாத உலமாசபையினர் - 'ஐவேளைத் தொழுகையில் குனூத் ஓதுவதை நிறுத்துங்கள்' என்கிற அறிவித்தலின் ஊடாக – தமக்குக் கிடைத்த உத்தரவாதத்தினை குறிப்பால் உணர்த்துவதற்கு முயற்சித்திருக்கலாம். 

அதாவது, பிரச்சினையின்போது குனூத் ஓதுமாறு கூறியவர்கள், இப்போது, குனூத் ஓதவேண்டாம் என்கிறார்கள். அப்படியென்றால், குறித்த பிரச்சினைகள் தற்போது தீர்ந்து விட்டன என்றுதானே அர்த்தமாகிறது?

அப்படியென்றால் - முஸ்லிம்களுக்கு இனி பிரச்சினையில்லை என்று உலமாசபை எப்படிக் கூறமுடியும் என்கிற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கான – பதிலை நாம் ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிகிறது.   

ஆனாலும், உலமாசபையினருக்கு வழங்கப்பட்டதாக நாம் அனுமானிக்கும் அந்த உறுதிமொழியானது - எந்தக் கணங்களிலும் மீறப்படலாம். 

நக்குத்தின்னிகளின் வக்காலத்து

நக்குண்டார் நாவிழந்தார் என்கிற பழமொழி நம் எல்லோருக்கும் தெரியும். நக்குண்போரை கிராமத்தில்; 'நக்குத்தின்னிகள்' என்பார்கள். 

இவ்வாறு 'ஆட்சியாளர்களிடம் நக்குண்டு கிடக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளால் - முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் காப்பாற்ற முடியாது' என்று அண்மையில் ஓர் அறிக்கை மூலம் சிவப்புநிறத் தொப்பிக்காரரான முபாறக் மௌலவி ஆதங்கப்பட்டிருந்தார். 

முபாறக் மௌலவி என்பவர் யார்? அவரின் அரசியல் பெறுமானம் என்ன? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர் கூறியிருப்பது உறைக்கும் உண்மையாகும். ஆட்சியாளர்களுடன் நக்குண்டு கிடக்கும் வரையில், முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாதப் பேய்களுக்கு எதிராக – முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளால் ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட முடியாது என்பது அப்பட்டமான உண்மையாகும். 

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்து - நாட்டின் ஆட்சியாளர்கள் சம்பிதாயத்துக்கேனும் இதுவரை கவலை வெளியிடவில்லை. மாறாக, முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் எதுவுமில்லை என்றும், நாட்டில் பள்ளிவாசல்கள் எவையும் தாக்கப்படவில்லை என்றுமே ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வாதிட்டு வருகின்றனர். 

உண்மையில், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தமது நியாபூர்வமான கோபத்தினையும், ஆதங்கத்தினையும் ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எவையும் நிகழவேயில்லை. 

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தினை முன்வைத்து இந்திய மத்திய அரசிலிருந்து கருணாநிதியின் தி.மு.க. நடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜிநாமாச் செயதமையை மறந்திருக்க மாட்டீர்கள். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா என்பது கருணாநிதியின் அரசியல் நாடகம் என்றும், நடிப்பு என்றும் ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் உள்ளன. அவற்றில் உண்மைகளும் இல்லாமலில்லை. அதேவேளை, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகுவதனால், இந்திய மத்திய அரசு கவிழ்ந்து விடப்போவதில்லை என்பதும்  எல்லோருக்கும் தெரியும். இருந்தும் - தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறுமாறு தமிழ்நாட்டு மக்கள் கோரினர்.

இந் நிகழ்வானது - இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியிலுள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு ஒரு நல்ல உதாரணமாகும். நமது நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்தும், கோபத்தினை வெளிப்படுத்தியும் மேற்கொள்கின்ற செயற்பாடுகளினூடாக அரசுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்றெல்லாம் ஆராய வேண்டிய அவசியமேயில்லை. நம்மை மதியாதவர்களிடத்தில் - நமது ரோசத்தினையும், சொரணையினையும் வெளிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டே ஆகவேண்டும். 

ஆனால், அரசை விட்டுப் பிரிவது ஆபத்தானது என்றும், ஆட்சியில் நாங்கள் இருப்பதால்தான் எங்களால் ஜனாதிபதியை சந்திக்க முடிகிறது என்றும் - மு.காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் பேசியதாக வந்திருந்த ஒரு செய்தியைப் படித்தபோது கவலையே எஞ்சியது. தவம் அவ்வாறு தெரிவித்திருந்தால், அது அரசியல் கடப்படித்தனம் மிக்கதொரு கூற்றாகும். 

அரசாங்கத்திடம் நக்குண்ணிகளாக இருப்பதை விடவும், மக்களின் மனதைப் புரிந்து கொண்டு நடப்பதுதான் ரோசமுள்ளமுள்ளவர்களின் அரசியலாகும். சிங்கத்தின் வாலாக இருப்பதை விடவும், எலியின் தலையாக இருப்பதே கௌரவமாகும்!

4 comments:

  1. தம்பி அவர்களே,
    சிங்கத்தின் வாலாக இருப்பதை விடவும், எலியின் தலையாக இருப்பதே கௌரவமாகும்! என்று முடித்துள்ளீர்கள். இருப்பது சிங்கத்தின் வாலா அல்லது எலியின் தலையா என்பதல்ல முக்கியம். எதுவாக இருப்பது பயன் தரவல்லது என்பதே

    ReplyDelete
  2. Mr. Gee what are you trying to say about this article

    ReplyDelete
  3. சிங்கத்தின் வால் இல்லாவிட்டாலும் சிங்கம் வாழும். அத்துடன் வால் தலை சொல்வதைத்தான் கேட்கும். வாலால் தலையை ஆட்டுவிக்க முடியாது. தலை இல்லாவிட்டால் எலியும் வாழாது வாலும் வாழாது. ஆக சிறிய குழுவுக்காவது தலையாய் இருப்பது மேல்.
    - அப+ முஸ்னத்

    ReplyDelete
  4. So far so good; there are many angles to approach a critical problem. The current approach by all the leading groups including the political parties we could say correct;given, the aspect of it. Their tactics should yield desired results. Specially the ACJU has rendered a great service to the community with their leadership and thought-out actions. Allah should strengthen their services further.

    ReplyDelete

Powered by Blogger.