Header Ads



றிசானா நபீக் மரண தண்டனை குறித்து கருணாநிதி..!



மனித நேயத்தை உணர்த்தும் வகையில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து மரண தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதிலும் தூக்குத் தண்டனை என்பது அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்று நான் கூறி வருகிறேன். அதைப்பற்றி பலவிதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்து கூறப்பட்ட நேரத்திலேகூட, அவர்களுக்கு தனிமைச் சிறை ஆயுள் முழுவதும் வழங்கலாம் என்ற கருத்தினைத் தான் நான் தெரிவித்தேன். தூக்குத் தண்டனை கூடாது என்ற என் எண்ணவோட்டத்திற்கு பதில் அளிக்கின்ற வகையில் ஒரு சம்பவம். அந்தச் சம்பவம் பற்றி  எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் விரிவாக எழுதியிருக்கிறார். இதிலே தூக்குத் தண்டனையைவிட கொடுமையான தண்டனை! அதுவும் ஓர் இளம்பெண்ணுக்கு!  அந்தப் பெண் செய்த தவறு என்ன? அனைவரின் உள்ளத்தையும் உலுக்குகின்ற  அந்தக் கோரக்கொடுமை இதோ!

கடந்த ஜனவரி 9ஆம் தேதி சவுதி அரசாங்கம்  ஒரு மைதானத்தில் ரிசானாநபீக் என்ற இளம்பெண்ணை, கை விலங்கிட்டு, பொதுமக்கள் முன்னிலையில் மண்டியிடவைத்து, அவள் தலையை நீண்ட அரிவாள் கொண்டு சீவி கொலை செய்திருக்கிறார்கள்,  இல்லை தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஏன் அந்தத் தண்டனை?  என்ன பாவம் செய்தாள் அந்தப் பெண்? 2005ம் ஆண்டு தன் குடும்பத்திலே தனக்கு உணவிட்டுக் காப்பாற்ற வழியில்லாத காரணத்தால், வீட்டு வேலை செய்வதற்காக  இலங்கையைச் சேர்ந்த ரிசானாநபீக் என்ற அந்த இளம் பெண், சவுதிக்குச் சென்றாள். அவள் பணிக்குச் சென்ற அந்த வீட்டிலே சமையல் செய்வது, வீட்டு வேலை களை செய்து, வீட்டு முதலாளியின் நான்கு மாதக் குழந்தையைப் பராமரிப்பது ஆகிய பணிகளை முறையாக நிறைவேற்றி வந்தாள். ஆனால் அந்த நான்கு மாதக் குழந்தையை இளம்பெண் ரிசானாநபீக் கொலை செய்தார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்தக் குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகக் கூறி    சவுதி நாட்டு நீதிமன்றம் ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து  ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர் நீதிமன்றத்தில் ரிசானா நபீக்குக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டி லும் ரிசானாவிற்கு விடுதலை கிடைக்கவில்லை.  தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ரிசானா சவுதி அரசாங்கத்திற்கு அனுப்பிய கருணை மனுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வேறுவழியே இல்லையா? வழி இருந்தது. ஆம், சவுதி ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர் ஒப்புக் கொண்டால், எழுதிக் கொடுத்தால், குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கலாம். ஆனால் இறந்து போன அந்த நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர், அந்த இளம் பெண்ணை மன்னிக்கத் தயாராக இல்லை.   

“அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டிய ஒரு தேவை எனக்குக் கிடையாது, நான் பாலூட்டும்போது குழந்தை மூச்சுத் திணறி அதன் காரணமாக இறந்ததே தவிர, நான் பராமரித்துப் பாதுகாத்து வந்த அந்த நான்கு மாதச் சிசுவை கொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது“ என்று ஓலமிட்ட ரிசானாவின் குரலைக் கேட்க ஒருவருக்கும் மனம் வரவில்லை.  சவுதி அரசுக்கு தன்னுடைய கதையை மனுவாகத் தயாரித்து ரிசானா அனுப்புகிறாள். அந்த மனுவில்,‘ “ எஜமானரின் நான்கு மாதக் குழந்தைக்கு நானே வழக்கம் போல புட்டிப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும்போது, குழந்தையின் மூக்கின் வழியாக பால் வெளியே வரத்தொடங்கியது. நான் குழந்தையின் தொண்டையை மெதுவாகத் தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்ததால், தூங்கி விட்டது என்று நினைத்து படுக்க வைத்தேன். வீட்டு எஜமானி 1.30 மணியளவில் வீடு திரும்பி, சாப்பிட்டு விட்டு அதன் பின்னர் குழந்தையைப் பார்த்தார். அதன் பின்னர் கோபம் கொண்டு எஜமானி செருப்பால் என்னை அடித்துவிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோனார். அவர் அடித்த அடியின் காரணமாக என் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது.  பின்னர் என்னை போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். போலீசார் என்னைத்  தடியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்ததாக கூறுமாறு சொல்லியே அடித்தார்கள்.  அப்படிக் கூறாவிட்டால் எலெக்ட்ரிக் ஷாக் கொடுப்பதாகக் கூறினார்கள். என்னை வலியுறுத்தி அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பமிடச் செய்தார்கள். அல்லா மீது ஆணையாக நான் குழந்தையைக் கொல்லவில்லை, கழுத்தை நெரிக்க வில்லை.“

ரிசானாவின் இந்தக் கருணை மனு ஏற்கப்படவில்லை. இந்தக் குற்றம் நடைபெற்றபோது ரிசானாவின் வயது 17தான்.   சர்வதேச மனித உரிமை சாசனத்தின்படி“மைனர்“ குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது. நியாயம் வெற்றிபெறும் தான் விடுதலையாகி,  இலங்கைக்கே திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இறுதி வரை ரிசானா  இருந்தாள். அவள் கொல்லப்படுவதற்கு  சில மணி நேரங்களுக்கு முன்பாக, அந்தப் பெண்ணை சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.  மக்தூம் என்பவர், ரிசானாவின் பெற்றோருக்கு அவளைச் சந்தித்தது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.   அந்தக் கடிதத்தில், அவரைச் சந்தித்தபோது,  அவரிடம் உனக்கு  இறுதி ஆசைகள்  ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். அந்த நேரத்தில் கூட அவருக்கு தண்டனை பற்றி தெரியவில்லை. ஊருக்கு நான் எப்போது செல்வது என்று என்னிடம் கேட்டாள்.  இன்றைய தினம் உங்களுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்போகிறார்கள் என்று  தடுமாற்றத்துடன் நான் கூறினேன். அவர் பதிலே கூறவில்லை. மௌனமாக இருந்தார். உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். அப்போதும் உங்கள் மகள், என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் என்று  கெஞ்சியது என் உள்ளத்தை உருக்கி விட்டது“ என்றெல்லாம் எழுதியிருக்கிறார். எப்படியோ அந்த ரிசானா என்ற இளம்பெண் மீது  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.  

இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள்! அதனால்தான் மரண தண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டுமென்று நான் கூறி வருகிறேன். இன்றைக்குக்கூட பத்திரிகையிலே ஒரு செய்தி! சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஸ்டீல் பட்டறை தொழிலாளி கோபு.  அவருடைய மனைவி தேன்மொழி. 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தைக்கு மோகனா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். நேற்று முன் தினம்  இரவு சாப்பிட்டுவிட்டு, குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலை 3 மணி அளவில் குழந்தை திடீரென அழுதது. கண் விழித்த தாய், பசியில் குழந்தை அழுவதை உணர்ந்து  தாய்ப்பால் கொடுத்தார். குழந்தை அழுகையை நிறுத்தியது. சில நிமிடங்களில் தாயும் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். காலை 6 மணியளவில் தாய் கண் விழித்து, குழந்தையைத் தூக்கிய போது,  குழந்தை பேச்சு மூச்சின்றி இறந்திருப்பதைக் கண்டு கதறுகிறாள். பால் குடிக்கும்போது, பால் புரையேறி  குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதனால் இறந்திருக்கலாம் என்று அந்தச் செய்தியிலே கூறப்பட்டுள்ளது. ரிசானா பால் கொடுத்த அந்த நான்கு மாதக் குழந்தைக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? மரண தண்டனை என்ற ஒரு கொடுமை ஒழிக்கப்பட்டிருந்தால் ரிசானா குரூரமாகக் கொல்லப்பட்டிருக்கமாட்டாள் அல்லவா?  இதற்கு எப்போது விடியல்? உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி இதுபோன்ற கொடுமைகள் இனியும் நேராமல் இருக்க, மானுடம் காத்திடும் மனித நேய உணர்வோடு, மனித நாகரிக மாண்பினை வெளிப்படுத்தும் வகையில், முடிவெடுத்து அதனை நடைமுறைக்குக் கொண்டுவரமாட்டார்களா? இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. ஐயா...! தமிழகத்தில் இருந்து கொண்டு எமக்காக தயவு செய்து குரல் கொடுக்காதீர்கள். அங்கு அகதியாய் வந்த தமிழனையே கைதியாய் அடைத்த பெருமை உங்களையே சாரும். நீங்ககள் அங்கு நாடகம் நடத்தும் போதே இங்கே தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட சரித்திரத்தில்(தரித்திரியத்தில்) இருந்து இலங்கை மீளவில்லை இன்னும் ஒரு அவலம் எங்களுக்கு தேவையில்லை. எத்தனை ஆண்டு காலம் தமிழக ஆட்சியை பிடித்திருப்பீர்?அங்கு உள்ள மக்களின் வாழ்வாதாரம் என்கானம் உள்ளது?
    அங்கு உள்ள பட்டினிச்சாவை நிறுத்திவிட்டு. மரண தண்டனையை நீக்குவதா? இல்லையா என பிறகு விவாதியுங்கள். உங்கள் சேவையை பாராட்டியே தமிழகம் உங்களை கூண்டோடு கைலாசம் அனுப்பியது.

    ReplyDelete
  2. கருணாநிதி ஐயா அவர்களே! நீங்கள் மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப்போடப் பார்க்கிறீர்கள். உலகில் கொடுமைகளும் குற்றங்களும் கோலோச்சக் கூடாது என்பதற்காகவே சமூக சீரழிவை ஏற்படுத்துகின்ற பயங்கரக் குற்றங்கள் புரிபவர்களை வேறு வழியில்லாதவிடத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.இந்நடைமுறை தீர்க்கமானதும் திட்டமானதுமான நருபனத்தன்மையுடன் நிறுபிக்கப்பட்ட குற்றவாழிகளாக இருக்க வேண்டும் என்பதனையும் இஸ்லாம் கண்டிப்பாக வலியுறுத்துகின்றது.மாற்றமாக எடுத்ததற்கெல்லாம் மரண தண்டனையல்ல.இதன் முக்கிய நோக்கம் உலகில் நிம்மதியும் சமாதானமும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதே இலக்காகும்.அத்தோடு குற்றங்கள் புரிகின்ற பாதகக் குணமுடையோர் இத்தண்டணைகளைக் கண்டு திரிந்தி வாழவேன்டும் என்பது இன்னுமோர் நோக்கமாகும்.இதனால்தான் தண்டணைகணை பகிரங்கமாக வழங்குமாறும் இஸ்லாம் வழி சொல்கின்றது. வேண்டுமென்றே அப்பாவி மணிதனை கொலை செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவது நியாயமேதான்.இவற்றினை விட நடைமுறைக்குப் பொருத்தமான குற்றவியல் சட்டம் ஒன்று உலகில் காணமுடியாது. ஆனால் குற்றவாளியை உண்மையான குற்றவாளிதானா என இனங்கான்பதில் இஸ்லாமிய நாடுகள் தவறிழைத்திருக்கலாம். அதில் ஏதும் பாரபட்சங்கள் மறைமுகமாக இடம்பெற்றிருக்கலாம்.காவல் துறையினர் சிலவேளை கையீட்டுக்கிலக்காகியிருக்கலாம்.இவ்வாறான காரணங்களினால் நிரபராதி கூட குற்றவாளியாக நீதிமன்றில் நிருபிக்கப்பட்டிருக்ககூடும்.அவற்றினை வைத்து இஸ்லாத்தின் சரீஆ சட்டத்தினை குறைகாண முற்படக் கூடாது.சுருக்கமாக கூறின் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் சிறிதும் குறைகாண முடியாதது.ஆனால் அவற்றினை அமுல்படுத்தும் அதிகாரிகள் சிலவேளை தவறிழைக்கலாம். அவற்றினை ஷரீஆவின் குறைகளாக முடிச்சுப்போட்டு சிலர் குட்டையைக் குழப்ப முனைகிறார்கள்.அது பெரிய அவதூராகும்.

    ReplyDelete
  3. சரியான கருத்தை யார் கூறினாலும் அந்தக் கருத்தை நேர்மையாக உள்வாங்கி தர்க்கரீதியாகச் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பொறுமையும் இல்லாததுதான் நம்மவர்களின் முதல் பலவீனம்.


    கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பது உலகமே அறிந்த விடயம். சூழ்நிலைக்குத் தக்கவாறு அவர் தனது கருத்துக்களை எதுவிதமான குற்றவுணர்வுமின்றி மாற்றிக்கொள்வார் என்பதெல்லாம் அவரது தமிழார்வத்தை விட பிரபலமானது.

    ஆனால் அதற்காக ஒரு மூத்த அரசியல் அவதானி என்ற வகையிலே மரண தண்டனை பற்றி அவர் கூறியிருக்கும் கருத்தை -அது நியாயமானதாக இருக்கும் பட்சத்திலே- மறுதலிக்க வேண்டியதில்லை.

    அவர் கூறியது சரியே.!

    ReplyDelete
  4. Jesslya முதலில் இஸ்லாத்துக்குள் வந்து விடுங்கள் அல்லது மூடிக்கொண்டு சும்மாயிருங்கள். ரிஸானா விடயத்தில்,இலங்கை,இந்தியா சட்டங்களையும்,மக்களின் மனநிலையிலும் இருந்து பேச வேண்டாம்.அடுத்து கருணா(நிதி)க்கும் அது போன்றவர்களுக்கும் என் கேள்விளை தெளிவு படுத்துமாறு வேண்டுகிறேன்.
    1. பணம் கொடுத்து சட்ட ஓடடைகள் நிரப்பப்பட என்ன காரணம் இருந்தது?அப்படி ஒரு நிலை இருந்திருப்பின் சஊதி அரசின் வேண்டகோள் ஏற்கப்பட்டு அந்த ஹுதைபியா குடும்பம் சலுகைகளை பெற்றிருக்க வாய்ப்பு அதிகமாகும்.
    2.ரிஸானாவை கொலை செய்யும் அளவுக்கு அந்த ஹுதைபியா குடும்பம் கோபம் ஏற்பட ஏதாவது காரணங்கள் உண்டா?
    3.ரிஸானவை கொலை செய்வதால் அந்த ஹுதைபியா குடும்பத்துக்கு ஏற்படும் நன்மை தான் என்ன.?
    4.கிட்டத்தட்ட 5 அல்லது 7வருடங்கள் சாதாரணமாக ஒருவருடன் பகை இருப்பின் அதற்குறிய அடிப்படை என்னவாக இருக்கும்?
    5.வெறும் 18 நாற்களில் ரிஸானாவுக்கும்,ரிஸானாவின் எஜமாகர்களுக்கும் ஏற்பட்ட பகை என்ன?
    6,சாதாரணமாக காழ்ப்புணர்வு ஏழைகளுடன் வருவதில்லை அனுதாபம் தான் வரும் ஆக ரிஸானாவின் நிலை என்ன?பண்காரியா?ஏழையா?
    7.கொல்லப்பட்ட அல்லது இறந்த குழந்தையின் தாய்-தந்தை இருவருமே கடைசிவரை மன்னிக்கவில்லை ஏன் என்ற கேள்வி பலர் இடத்திலுள்ளது.?
    8.எத்தனையோ மரணதண்டனைகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்க மீடியாக்கள் ஏன் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்ற கேள்வி?.................
    குறிப்பு.(வியற்நாம்,ஈராக்,போஸ்னியா,ஆப்கானிஸ்தான்,பலஸ்தீன்,காஸமீர் மற்றும் முஸ்லிம்கள் வாழுகின்ற பல நாடுகளில் ஐரோப்பாவும்,அமெரிக்காவும் நடத்துகின்ற அநீதிகள் மறைக்கப்படுகிறதே?) இவைகள் மட்டுமல்ல இன்னும் நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம்
    by contact
    Seyed N Deen
    Turkey
    ahlastrd@gmail.com

    ReplyDelete

Powered by Blogger.