Header Ads



அவர்கள் உன்னைக் கொன்று விட்டார்கள்..!



(அஷ்ரப் ஷிஹாப்தீன்)

வருடங்கள் காத்திருந்தோம்
நீ 
வருவாய் என்று..

அந்த நாளை 
ஆனந்தித்திருக்க
ஆவலுடனிருந்தேன்...
ஆவலுடனிருந்தோம்...

அவர்கள்
உன்னைக் கொன்று வி்ட்டார்கள்...

இலங்கையைக் கவலை தின்கிறது
நான் கதறுகிறேன்..

இப்படியொரு பிற்பகலைச்
சந்திக்க
சாகும் வரை எனக்குச் சம்மதமில்லை!

பாலுண்ணும் வயதில்
உன்னைப் பாலூட்டச் சொன்னது 
யார் பிழை?

உன்
பாண் துண்டுக்காக
நீ பாலூட்டினாய்...

நீ சென்ற போது இருந்த
நாடு இப்போது இல்லை!

புதிய கட்டடங்கள், அழகு பாதைகள்
புதிய சட்டங்கள்..
எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன
உனது வீடு மட்டும்
அப்படியே இருக்கிறது 
ஓலைக் கூரையோடு -
நிறைவேறாத உனது கனவு போல!

நீ
இங்கே வறுமையிலேயே
செத்துப் போயிருக்கலாம்...
கண்காணா தேசத்தில்
கழுத்தைக் கொடுத்ததை விட!

நம்மிடமும் வசதியுள்ளவர்கள்
இருக்கிறார்கள்...
என்ன செய்ய
உன் கையில் இறந்து போன
குழந்தையின் பெற்றோர் மனசுதான்
அவர்களுக்கும்!

எல்லா இனங்களையும் கொண்ட
அதியுயர் சபை
நாடாளுமன்றம்
உனக்காக ஒரு நிமிடம்
தன் மூச்சை நிறுத்திற்று...

நபிகள் பிறந்த தேசத்தில்
பிறந்தவர்களுக்குக்
கருணை தவறிப் போயிற்று!

ஆனாலும் நீயிருப்பாய் 
எங்கள் மனதில் -
நீ மரணத்தைத் தழுவிய தேசத்தை
ஒரு கருப்புப் புள்ளியாய்
ஞாபகப்படுத்திக் கொண்டு..
நமது மாறாத சமூகத்தின் 
வறுமையின்
அடையாளமாய்...

கதறுவது நானல்ல -
வறுமை!
எனது கண்களில் வழிவது
கண்ணீரல்ல -
என்னைப் பிழிந்த சாரம்!
அழுவது
உனது தாயும் உறவும் 
மட்டுல்ல -
நாங்கள் எல்லோரும்!
கருணையுள்ள இலங்கை!
இரக்கமுள்ள உலகம்!

நீ இழைத்த குற்றத்தை
ஓர் அமெரிக்கப் பெண் இழைத்திருந்தால்?
என்ன செய்ய...
ஏழையாகப் பிறந்து விட்டாய்!

திருகோணமலைக்குக் கூட
தனியே போகத் தெரியாதவள்
நீ...
நீயும் ஒரு குழந்தைதானே..
நீயா கொலை செய்தாய்?

இல்லை...
அவர்கள் உன்னைக்
கொன்று விட்டார்கள்!

(ரிஸானா நபீக் சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண். வறுமைப்பட்ட குடும்பத்தின் தலைப் பிள்ளை. வேலை செய்த வீட்டில் கைக்குழந்தைக்கு புட்டிப் பால் ஊட்டக் குழந்தையின் தாயால் பணிக்கப்பட்டார். பாலருந்திய குழந்தை பால் புரையேறி இறந்து விட்டது. குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் இவரது மரண தண்டனை ரத்தாகும் என்ற முடிவோடு ஏறக்குறைய 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். வயது குறைந்த இவரது வயதை அதிகரித்துத் தொழிலுக்காக அனுப்பிய இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியிலும் இலங்கை ஜனாதிபதியாலும் அரசியல்வாதிகளாலும் இவரது மன்னிப்புக்காக வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னிக்க முன்வராத காரணத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டார்.)

9 comments:

  1. இலங்கையின் அனைத்து மக்களினதும் மனங்களும் புண்பட்டு இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற இவ்வாறான உளறல்கள், புலம்பல்களை தவிர்த்து விடுவதே சிறந்தது.

    இந்த உளறல்களும், புலம்பல்களும் எந்த நன்மையையும் ஏற்படுத்தித் தரப் போவதில்லை.




    குறைந்த பட்சம் இந்த புலம்பலை உரியவர்கூட பார்க்கப் போவதில்லை.
    யாரோ மரணிக்க யாரோ கூலிக்கு மாரடிக்கின்ற வேலை செய்வது அழகல்ல.


    இது யாழ் மஸ்லிம் இணையத்தின் ஆசிரியரின் கவனத்திற்கு.

    ReplyDelete
  2. அழவைத்த அஷ்ரப் ஷிஹாப்தீனின் அற்புதமான வரிகள்...

    இந்த செய்தி கேட்டு
    இறுகிப் போன இதயத்திலிருந்து
    உறுகி வழிந்த
    உதிரத்தை
    தொட்டெழுதிய வார்த்தைகளா....என
    சிந்திக்கவைக்கிறது
    சிவப்பு நிற கவிதை

    ReplyDelete
  3. யாழ் முஸ்லிம் இணையம் பொறுப்புடன் பின்னூட்டங்களை பார்த்து பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    சகே அஷ்ரம் ஸிஹாப்தீன் அவர்களின் ஒரு சிந்தனையாளர் என்று நிணைத்திருந்தேன். அது மிகவும் தவறு என்பதை முதலில் ஏற்றுக் கொள்கிறேன். இஸ்லாமிய குற்றவியல் கோட்பாட்டை சரியாக முதலில் நாம் புறிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையை பல கோணங்களில் இருந்து ஆராய்ந்து கருத்துச் செல்ல வேண்டும். வெருட் வெட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது எல்லேருக்கும் முடியும். முடிந்தால் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை மீளப்படியுங்கள். ஜப்னா முஸ்லிம் தளமானது இவ்வாறானவர்களின் விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும்

    ReplyDelete
  5. Mr. Asharaf Shihabdeen I like ur other poem verses but this is not suitable for u. If u want to write a poem write not against to Islamic shariha these are under vast ur verses are under against to Allah and the holly quran how u can say and judeg ? (Avarhal unnai kondru wittarhal ) widrow this poem otherwise u and Ranjan Ramanaya are same ur not a Muslim if cant accept Islamic low keep quit dont criticize the Sharia low (Neengelam Kavinchanam....)

    ReplyDelete
  6. கண்ணீர் வரிகள்

    ReplyDelete
  7. ஜாஹிலியத்..............................

    ReplyDelete
  8. இஸ்லாமிய ஸரீஆ... ஸரீஆ எனக் கதறுபவர்கள்... சற்று தெளிவு படுத்துவீர்களா... இந்தத் தண்டனையில் இஸ்லாமிய ஸரீஆ பாவிக்கப்பட்ட விதத்தினை... அது மட்டுமன்றி இச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதையும் சற்று தெளிவுபடுத்துவீர்களா.... உளரல்கள் புலம்பல்கள் ஏளனமாக கூறும் சகோதரர் எப்போதாவது ஒரு நேரம் மாத்திரம் சாப்பிட்டிருப்பாரா... வறுமையின் கொடுமையை உணர்ந்திருப்பாரா... அதை உணர்ந்தவர்களுக்கு அதன் அருமை புரியும்... உணராதவர்களுக்கு உளரல்களாகத்தான் இருக்கும்.... சீதனக் கொடுமையை தட்டிக்கேட்கத் துப்பின்றி தூங்குகின்ற சமுதாயத்தில் இது மட்டுமல்ல இன்னும் பல றிஸானாக்கள் இறக்கலாம்... ஒவ்வொரு இறப்பினிலும் பேசிப்பிரயோசனமில்லை நடந்தது நடந்ததுதான் என ஒதுக்கிவிட்டு தன் பிள்ளைக்கும் தன் சகோதரிகளுக்கும் அடுக்கு மாடி வீடுகளையும் டாக்டர் மாப்பிள்ளைகளையும் தேடும் மானம் கெட்டவர்கள் உள்ளவரை விடியல் இருக்கப்போவதில்லை

    அன்புடன்
    தாஸீம்

    ReplyDelete
  9. Hats off to your comments KALMUNAYAN...fantastic intelect words...

    ReplyDelete

Powered by Blogger.