Header Ads



தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..? ஹக்கீம் விளக்குகிறார்

நூர் ஷிபா
 
பொம்மை முதலமைச்சர், பொம்மை ஆட்சி என்பவற்றிற்கு இடமளிக்காதவகையில் உரிய அதிகாரங்களுடனான நல்லாட்சியை கிழக்கு மண்ணில் நிறுவுவதற்கு முன்வரும் தரப்பினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் எனக் குறிப்பிட்ட அதன் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் சம்பந்தமான உத்தரவாதங்களும் தேவை என்றார்.

திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தில் திங்கள் கிழமை (3) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மூன்றாம் கட்ட சூறாவளி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் திருமோணமலை மாவட்டத்திற்கு மீண்டும் வருகைதந்திருந்தார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தவையாவன,

கிழக்கு மண்ணை ஆளுகின்ற உரிமை முஸ்லிம் சமூகத்திற்கு தரப்பட வேண்டுமென்பதற்காக கட்சித் தலைமையை சென்ற தேர்தலில் திருகோணமைக்கு வந்து போட்டியிட்டது.

கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி விட்டோம், வெற்றி கொண்டு விட்டோம் என்ற இறுமாப்பில், ஆவணவத்தில், கர்வத்தில் தேர்தலை வெல்லப்போகிறோம் என்று வந்த அரசாங்கத்தை இந்த மாவட்டத்தில் கடந்த மாகாணசபைத் தேரிதலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தோற்கடித்தார் என்பது வரலாறு.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தாலும், இந்த கட்சிக்கு என்ன அந்தஸ்து தரப்பட்டுள்ளது என்பது அவஸ்த்தைக்குரியதாகும்.
இந்த தேர்தலில் முஸ்லிகாங்கிரஸின் செல்வாக்கு என்னவென்பதை அரசாங்கத்திற்கு காட்டுவதற்காகத்தான் தனித்து போட்டியிடுகிறோம். நாம் மேற்கொண்ட முடிவினால் அரசாங்கம் தடுமாறிப் போயிருக்கின்றது. அதனால் ஆப்பிழத்த குரங்காக அரசாங்கம் ஆகியிருக்கிறது.

இப்பொழுது செய்வதறியாமல், வங்குரோத்து நிலைமையில் எல்லா அரச ஊடகங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வசை பாடுவதற்கு தாராளமாக திறந்து விட்டிருக்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இனவாதியென அமைச்சர்கள் கூறுவதை அரச ஊடகங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றன.

அன்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களைப் பட்டியலிட்டுப் பேச நான் வரவில்லை நான் பேசுகின்றவை களத்தில் உள்ள மக்களின் மன உளைச்சல்களின் வெளிப்பாடாகும். முஸ்லிம்களின் தனித்துவ இயக்கத்தின் தலைமை அவர்களுக்கு நடக்கும் அநியாயங்களைப்பற்றி பேசினால் அவற்றை இனவாதமென கடிவாளம் போடுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது?

சமுதாயத்திற்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்பதற்கு உள்ள உரிமையை என்னிடம் இருந்து யாரும் பறிக்க முடியாதென்பதை திட்டவட்மாக கூறிவைக்கின்றேன்.

நாட்டுத் தலைமையை விமர்சிப்பது எனது நோக்கமல்ல ஆனால், நேர்மையாக எமது சமூகத்தின் பிரச்சினைகளை அவருக்குத் தெரிவிப்பதற்கு நான் பின்னின்றது கிடையாது. அமைச்சரவையில் முரண்பட்டுக்கொள்ளும் நிலைமை ஏற்படாமல் இல்லை. ஆனால், சமூகம் சம்பந்தமான ஏதாவது சிக்கலான விஷயம் பற்றித் தெரியவந்தால் அமைச்சரவைக்கு வெளியில் வந்ததும் அவற்றை ஜனாதிபதியிடம் மிகவும் நேர்மையாக எடுத்துக் கூறியுள்ளேன் என்பது அவர் அறியாத விஷயம் அல்ல, ஆனால் மற்றவர்கள் சொல்வதற்காக முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமையையும் அவர் மலினப்படுத்த முயன்றால் அதற்கான பதிலை மக்கள் தேர்தலில் வழங்குவார்கள்.

இவ்வாறான விஷயங்களை நாம் எவ்வாறு நேர்மையாக கையாளுகின்றோம், அவற்றை மக்கள் மத்தியில் எவ்வாறு நிதானமாகவும் கவனமாகவும் சொல்கின்றோம் என்பதும், சகிப்புத் தன்மையோடும், பொறுமையோடும் தலைமைத்துவம் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதும் ஒரு புறம் இருக்க, எங்கெங்கு ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பேச வேண்டுமோ அங்கங்கு அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றோம். நாட்டின் ஜனாதிபதியே இந்த விடயங்களில் எங்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கூறுமளவிற்கு நாம் சொல்லியிருந்தோம்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வாய் திறந்தால், அது அரசாங்கத்தை மிகப்பெரிய சிக்கலுக்குள் மாட்டிவிடும் என்பது இந்த நாட்டினுடைய தலைமைக்குத் தெரியாததல்ல. தாறுமாறாக இந்த விடயங்களைக் கதைத்து அவற்றை விபரீதமாக்காமல் மிகவும் நிதானமாகவும் நடந்து கொள்கின்றேன். கடிவாளம் இல்லாமல் கதைப்பது எனது நோக்கமல்ல.

இந்த தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதையிட்டு அரசாங்கம் அங்கலாய்க்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வௌவேறு விடயங்களை கூறி வருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்றும் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகின்றது.

அரசாங்கத்தால் எங்களைப்பற்றி தாறுமாறாக விமர்சிக்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட மேற்கொண்ட முடிவினால் இத்தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதில் முஸ்லிம் காங்கிரஸ்தான் தீர்மானிக்கும் சக்தியாகும். இத்தேர்தலில் எதிர்வரும் எட்டாம் திகதி நாம் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் கிழக்கில் ஆட்சியமைப்பது யார் என்பது தீர்மானிக்கப்படும்.

இரு தரப்பினரும் ஆட்சியமைப்பதற்கு எங்களின் தயவை நாடுவார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியையும் மக்கள் பேராதரவையும் கண்டு அரசாங்கம் எங்களை இனவாதக் கட்சியென்று அடிப்படை எவையுமின்றி தாக்க முற்பட்டுள்ளது.

நாங்கள் சஞ்சலமின்றி, அச்சமின்றி நல்லாட்சியை யாரால் நடத்த முடியும் என்பதைப் பொறுத்து இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வோம்.

முன்னைய கிழக்கு மாகாண அரசு வெறும் கைபொம்மை அரசு என்பதை தொடர்ந்தும் கூறி வருகின்றேன். பிள்ளையான் வெறும் பொம்மையாகத்தான் இருந்தார். அவ்வாறான ஒரு தலையாட்டும் பொம்மையாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்க மாட்டாது.

அரசாங்கம் கிழக்கு மாகாண சபையைக் கலைக்கப் போவதாக கேள்விப்பட்டவுடனேயே நான் பிள்ளையானிடம் 'தம்பி, இதில் அகப்பட்டு விடாதீர்க்ள, அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கு முற்றிலும் முரணான விஷயம்' எனக் கூறினேன். அரசியலமைப்பின் பதின்மூன்றாவது ஷரத்தின் பிரகாரம் அதிகாரப் பகிர்வை பாதிக்கும் விதத்தில் பின் கதவால் நுழையும் காரியத்திற்கு துணைபோக வேண்டாம் என்று எச்சரித்தேன்.

பிள்ளையான் அதனை ஏற்றுக் கொண்டு மாகாண சபையைக் கலைப்பதற்கு எதிராக மாகாண சபையில் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கலைக்கப்பட வேண்டிய மாகாண சபையை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிராக பிரேரணை கொண்டு வந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றிய பின்னர், அவரை அலரி மாளிகைக்கு அழைத்து 'அறிவுரை' பகர்ந்த பின்னர் அவர் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. அதனால்தான் பொம்மை ஆட்சி என்றேன். பிள்ளையானை வெறும் பொம்மை என்றேன். அவ்வாறான பொம்மை ஆட்சியை நிறுவுவதற்கல்லாமல் பலமான ஆட்சியை நிறுவவே நாம் தனித்துப் போட்டியிடுகின்றோம்.

எங்களுக்கு பிள்ளையானைப்போல் பொம்மையாக இருக்க முடியாது. எங்களுக்கு உறுதியான உத்தரவதங்களை வழங்க முடியுமானால் எந்தத் தரப்பிற்கும் எங்களால் ஆதரவு அளிக்க முடியும்.

நாளுக்கு நாள் படிப்படியாக முஸ்லிம் காங்கிரஸூக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவை காணும்பொழுது எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வரும் என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் ஐயா உட்பட ஏனையோர் முஸ்லிம் முதலமைச்சர் பதவியைக் கூட பகிர்ந்து கொள்ளலாம் என்றவாறாகக் கூறி வருகின்றனர். முஸ்லிம்களின் உரிமைகள் சம்பந்தமாக தங்களிடம் எவற்றையும் கதைக்கலாம். தாம் அவற்றைப் பெற்றுத்தருவதாகக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

நாங்கள் அமைதியாக இருக்கின்றோம். தேர்தல் முடிந்த கையோடு ஆளுநர் அழைப்பார். அப்பொழுது சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் நாம் கதைப்போம். அப்பொழுது பொம்மை ஆட்சி, பொம்மை முதலமைச்சர் பதவி அல்லாது அதிகாரங்களுடனான நல்லாட்சியை, சகல சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து கிழக்கு மண்ணில் நிறுவுவதற்கு யார் முன்வருவார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வரும்.

இன்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்  போன்ற சர்வாதிகாரியொருவரைக் காண முடியுமா? அவ்வாறுதான் திருகோணமலை அரசாங்க அதிபராக உள்ள படை அதிகாரியும் உள்ளார். திருகோணமலைச் செயலகம் ஓர் இராணுவ முகாம் மாதிரி காட்சியளிக்கின்றது. இந்த நிலைமை தொடர இடமளிக்க முடியாது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், முத்தலிப் பாவா பாறூக் மற்றும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான ஆர்.எம்.அன்வர், ஹசன் மௌலவி, சட்டத்தரணி லாஹிர், சைபுல்லாஹ், சனூஸ், மஹ்ரூப், பளீல், ரூபிகா சாந்தனி, நாகூர் ஆகியோர் ஏராளமான மக்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
   

No comments

Powered by Blogger.