Header Ads



யா அல்லாஹ்... எங்களைக் காப்பாற்று...!


எம்.எப்.எம்.பஸீர்

மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பற்றி  பேசிக்கொண்டிருக்கும்  உலகம் அதனை  செயற்படுத்துவதில்  தென்கிழக்காசியாவை மட்டும்  மறந்து விட்டது.   அதிலும்  வரலாற்றோடும், உலக பொருளாதாரத்தோடும் புராதன  காலம் தொட்டு தொடர்புடைய மியன்மாருக்கு ஊடகங்கள் உபதேசம் செவதில் காட்டி வரும் அசமந்தம் கவலையளிக்கிறது.

எட்டாம் நூற்றாண்டின் மியன்மாருக்கு வந்ததாக   கூறப்படும்  ரோஹிங்யா முஸ்லிம்கள் சோந்த நாட்டில் அகதிவாழ்க்கை வாழ்வது  நோக்கத்தக்க  விடயமாகும். தற்போது  அங்கு (மியன்மாரில்)  முஸ்லிம்களை தேசத்திலிருந்து   முற்றாக  அழிக்கும்  ஓர் திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

வடமேற்கு  மியன்மாரில் ரக்னே அர்க்கான் உள்ளிட்ட  ரோஹிங்யா முஸ்லிம்கள்  செறிந்து வாழும் பகுதிகளில்,  முஸ்லிம்களுக்கெதிரான   படுகொலைகளும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும் தொடர்வதானது  இதனையே அழுத்திச் சோல்லிக் கொண்டிருக்கிறது.

எகிப்தின் ‘வதனுல் மிஸரியா’ என்ற பத்திரிகையில்  வெளியிடப்பட்டிருந்த  மியன்மாரின் முஸ்லிம் மாணவியொருவருடனான சந்திப்பு தொடர்பான விபரமும்  குறித்த  மாணவியின்  அச்ச உணர்வும் மியன்மாரில்  முஸ்லிம்களுக்குள்ள ஆபத்தை  எடுத்தியம்புவதாக உள்ளது. தனது நாட்டு முஸ்லிம்கள் இரத்தத்துக்கு மத்தியில் வாழ்வதாகவும் தனது உறவுகள் பங்களாதேஷில்  உள்ளதாகவும்  ஆயிஷா  என்ற குறித்த  மாணவி தெரிவித்திருந்தார்.  குறித்த மாணவியின்  கூற்றுக்களிலிருந்து இன்னும் சில விடயங்களையும் ஊகிக்க முடியுமாக உள்ளது.

அதாவது  உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு எவ்விதமான  அடிப்படை வசதிகளும் செது கொடுக்கப்படாத   நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்து வருவதாகவும்  அறிய முடிகிறது. அத்துடன்  ஒரு திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாட்டில் மியன்மார் ஈடுபட்டுள்ளதா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில்  மியன்மாரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்  அவலங்கள் தொடர்பில்  சர்வதேச மனித உரிமை அமைப்பொன்றின்  அறிக்கையில்  தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அரச மற்றும் அதன் ஆதரவுடன் கூடிய இனவாதிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் காரணமாக  பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில்  உள்ளவர்கயள் தொடர்பில்  மியன்மாரில் பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும்  அடாவடித்தனம் வருந்தத்தக்கது என  மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.  குறித்த அகதிகளுக்கு நிவாரணங்கள்  கிடைப்பதை தடுக்கும் வகையில் பௌத்த பிக்குகள் முகாம்களை சுற்றிவளைத்துள்ளதாகவும்,  கலவரங்களுக்கு  பின்னால்   பிக்குகளோடு இணைந்த  இராணுவ  நடவடிக்கைகளும் காணப்படுவதாக  அவ்வறிக்கைகளில்  மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில்  சிறுபான்மையினராக  வாழ்ந்து வரும் ரோஹிங்யா  இன முஸ்லிம்கள் மீதான  இன அழிப்பு நடவடிக்கைகள் மே மாதத்தின்  இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது.  கலவரமாக  ஆரம்பித்த குறித்த சம்பவத்துக்கு பௌத்த யுவதியொருவர்  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செயப்பட்டமை காரணமாக  சோல்லப்பட்டது.  முன்னர் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பஸ் வண்டியொன்றில்  போடப்பட்டிருந்தமையையும் ஊடகங்கள்  வாயிலாக அறிய முடிந்தது.  இப்படி ஆரம்பித்த கலகம் தற்போது தணிந்துள்ளதாக வெளியில் தெரிந்தாலும் இனத்துவேச நடவடிக்கைகள் தொடர்வதாக   மனித  உரிமை ஆர்வலர்களும்  மையங்களும் கவலை வெளியிட்டுள்ளன.

இதுவரையில் சுமார் 650க்கும் 750க்கும் இடைப்பட்ட முஸ்லிம்கள் படுகொலை  செயப்பட்டுள்ளதாகவும் 1200 பேர் வரையில்   காணாமல் போயுள்ளதாகவும்  80000 பேர் வரையில்  இடம்பெயர்ந்துள்ளதாகவும்  நம்பகரமான அறிக்கைகள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தலைவர் நவநீதம்பிள்ளை  உத்தியோகபூர்வ  அறிவிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 78 எனக்குறிப்பிட்டுள்ளமையானது குறித்த மனித உரிமை அமைப்புக்களின் கணக்கெடுப்புக்கு முரணாகவே உள்ளது.

ரோஹிங்யா  முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுப் படுகொலைகளில் பௌத்த பிக்குகள் பின்னணியில் உள்ளமை மிகவும் வருந்தத்தக்கது. இது தொடர்பில்  லண்டனிலிருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்’ பத்திரிகை உருக்கமான செதியொன்றை வெளியிட்டிருந்தது.

இதனிடையே  ரோஹிங்யா முஸ்லிம்களை ஐ.நா. வின் அகதி முகாம்களுக்குள் தள்ளப் போவதாக  மியன்மாரின் ஜனாதிபதி தைன்சைன்  எச்சரித்துள்ளார். இந்த  வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றே ரோஹிங்யா  முஸ்லிம்களின்  படுகொலை அரச ஆதரவோடு இடம்பெறுகிறது என்பதை  நிரூபிக்கப் போதுமானது.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பொன்றின்  உயர் அதிகாரியொருவர் மியன்மாரில் தேசியவாதம் (Nationality) மற்றும் உயர் தேசியவாதம் (Super - Nationality) என்ற  இரு பிரிவுகள் உள்ளதாகவும் உயர் தேசிய பிரிவின் தீவிர நடவடிக்கைகளின்  வெளிப்பாடே ரோஹிங்யா  முஸ்லிம்கள் மீதான அத்துமீறல் என ஈரானிய செதி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில்  இடம்பெற்று வரும் அக்கிரமங்களும்  அராஜகங்களும்  ஊடகங்களில்  அவ்வளவாக வெளிவராத  நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் குரல் கொடுக்கத் தயங்கி வரும்  சமாதானத்துக்கான  நோபல் பரிசு வென்ற  ஆங்சாங் சூகிக்கெதிரான  குரல்களும்  சர்வதேச அளவில்  வலுப்பெற்று வருகின்றன. ஏனெனில் ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்த சூகி தனது நாட்டுப் பிரஜைகளான  ரோஹிங்யா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் பேசாமல்  இருப்பது கவலைக்குரியதே. தனது முதலாவது  பாராளுமன்ற உரையில்  சிறுபான்மை மக்களை காக்க தனிச்சட்டம் அவசியம் என வலியுறுத்திப் பேசிய சூகி அதில்   ஒரு இடத்திலேனும்  ரோஹிங்யா முஸ்லிம்கள்  தொடர்பில்  குறிப்பிடாதது வருந்தத்தக்கது.  முன்னதாக  கடந்த மாதம்  ஜெனீவாவில் வைத்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் பிரஜைகள் தானா? என சூகி கேள்வியெழுப்பியமையானது சமாதான  பரிசின் தொடர்ச்சியாக உலகம் சுற்றிய அவர் மேற்குலகின் கைப்பொம்மையாக  மாறி விட்டாரா எனவும்  கேட்கத் தோன்றுகிறது. ஏனெனில் அமெரிக்காவின் மௌனமும் மியன்மார்   விடயத்தை  கையாளும் விதமுமே இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஜனநாயக  வட்டத்துக்குள் நுழைந்து விட்டதாகக் கூறி  பொருளாதாரத் தடைகளை அகற்றிய  அமெரிக்கா ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான  படுகொலைகளையோ, உரிமை மீறல்களையோ  கண்டு கொள்ளாதது சந்தேகங்களைத் தூண்டக்கூடியதே.

மியன்மார் விடயத்தில் பாகிஸ்தான், ஈரான், குவைத்  உள்ளிட்ட பல நாடுகள் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ள நிலையில் லண்டன்  ஒலிம்பிக்  போட்டிகளின்  போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அல்ஜெஸீராவிடம்  சோன்னவையும் கவனிக்கத்தக்கவை.  பங்களாதேஷ் அகதிகளை (ரோஹிங்யா)  கட்டாயப்படுத்தி விரட்டுவதாக  வெளியான செதிகளை மறுத்துள்ள  ஹசீனா, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அபயமளிக்கும் சக்தி தமக்கு  இல்லையெனத் தெரிவித்துள்ளார். 3.5 மில்லியன் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பது சிரமமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  உடனடியான நிவாரண மற்றும் பிற நடவடிக்கைகள்  தொடர்பில்  ஐ.நா. வும் தற்போது  கண் விழித்துள்ளமை கொஞ்சம் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. வின் மனித உரிமைப் பேரவைத் தலைவர் நவநீதம்பிள்ளை மியன்மாருக்குள் கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படுவது குறித்து ஆராய வேண்டுமென தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக அங்கு அரச ஆதரவுடனேயே படுகொலைகள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டியுள்ள பிள்ளை நாட்டுக்குள் ஐ.நா.  உறுப்பினர்களை அனுமதிப்பதன் ஊடாக மட்டும்  விசாரணைகளிலிருந்து மியன்மார் அரசால் தப்பிக்க முடியாது எனவும் கூறியிருப்பதானது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

படுகொலைகளுக்கு அப்பால் பாலியல் துஷ்பிரயோகங்கள், கொள்ளைகள், அபகரிப்புக்கள் என ரோஹிங்யா  முஸ்லிம்களுக்கெதிரான அராஜகங்கள் தொடர்வதை  தென்கிழக்காசிய  வர்த்தக ஏகாதிபத்திய போட்டியில் சர்வதேசம் (குறிப்பாக  அமெரிக்கா, சீனா போன்ற   வல்லரசுகள்) கண்டு கொள்ளாமல்  இருக்கின்றன.

எனினும் ரமழான் மாதத்தில்  நோன்பு பிடிப்பதற்கேனும் வசதிகளற்ற நிலையிலும் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற முடியாத நிலையிலும் உயிருக்கு அஞ்சியவர்களாக அல்லலுறும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ‘ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன்’ என்ற  நபி மொழியின் அடிப்படையில் உதவுவது  அவசியமல்லவா?

எனவே  எங்களால்  முடியுமான உடல் உள ரீதியான  உதவிகளை அவர்களுக்கு செய்வதுடன்  அவர்களின் அவல நிலையை நீக்க இந்த நன்னாளில் இறைவனிடம் இரு கரம் ஏந்துவோமாக. 

No comments

Powered by Blogger.