August 07, 2012

பௌத்த மதத் தீவிரவாத அச்சுறுத்தல் - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கண்டனம்



நாட்டில் தொடராக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களின் மத உரிமைகள் மீதான பௌத்த மதத் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன் அரசாங்கமே இச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

அனுராதபுரம் சியாரம் தகர்ப்பு, தம்புள்ள பள்ளிவாசல் தெஹிவளை பள்ளிவாயல் மீதான அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் என்பன இடம்பெற்று பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அச்சம்பவங்களில் பகிரங்கமாக ஈடுபட்டிருந்த அடையாளம் காணக்கூடிய வன்முறையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் விசனத்தையும், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் காரணமாகவே குருணாகல் அக்ரம் பள்ளிவாசல் மற்றும் ராஜகிரிய பள்ளிவாசல் மீதான அத்துமீறல்கள் என மதத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவற்றுக்கெல்லாம் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

மாத்திரமன்றி, இச்சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் எமது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பாராமுகமான பொடுபோக்குத் தன்மையும் இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமைகள் நாட்டில் படிப்படியாக அதிகரித்துச் செல்வதற்கான காரணமாகும். எமது சமூகம் சார்பான அரசியல் அதிகாரத்தைக் கையேற்றிருக்கும் அரசியல் தலைவர்கள் இச்சம்பவங்கள் தொடர்பாக முறையான நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமாகி இருக்காது.

அனுராதபுரம் சம்பவத்தையடுத்து எமது முஸ்லிம் அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளை முஸ்லிம் சமூகத்தை அமைதிப்படுத்துவதற்காக அவசரமாக வெளியிடப்பட்ட ஒரு கண்துடைப்பு முயற்சியாகவே எம்மால் பார்க்க முடிகின்றது. அதேபோல தம்புள்ள பள்ளிவாசல் விடயத்திலும் கூட வெறும் அறிக்கைகளை விட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது உணர்வலைகளை ஜனநாயக வழிமுறையில் வெளிக்காட்டும் நடவடிக்கைகளைத் தடுப்பதில் மாத்திரமே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

தம்புள்ள சம்பவத்திற்குப் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளிலோ அமைச்சரவைக் கூட்டங்களிலோ அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து முஸ்லிம்களின் உரிமைகளை வலியுறுத்தி அவற்றை உத்தரவாதப்படுத்துவதற்கான குரல் கொடுக்கின்ற வலிமையோ ஒற்றுமையோ இவர்களிடம் இருக்கவில்லை என்பதும் பெரும் சாபக்கேடாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுவன் ஒருவன் மீது வெசாக் காலத்தின்போது இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தினார்கள் என்ற விடயம் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதும், சந்தேகத்துக்குரிய இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் நமக்கு ஒப்பிட்டு நோக்கக்கூடிய நல்லதொரு பாடமாகும். அடுத்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் அவர்களின் பிரதிநிதிகளால் எவ்வளவு தூரம் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கும் நமது சமூகத்தின் பாரதூரமான பிரச்சினைகளைக் கூட வாய் திறந்து பேசுவதற்கு நமது பிரதிநிதிகள் எவ்வளவு தூரம் திராணியற்று இருக்கிறார்கள் என்பதற்கும் இது நல்ல சான்றாகும்.

தம்புள்ள பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதென்றும், மூடிய குப்பையைக் கிளற விரும்பவில்லையென்றும்இவ்விடத்தில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் முனைப்பாகச் செயற்பட்ட மு.கா. தலைவரின் அறிக்கையும் 'தம்புள்ளை பள்ளிவாயளுக்கு எதுவுமே நடக்கவில்லை, அனைத்தும் பொய்ப்பிரச்சாரமாகும்' என அப்பட்டமான துரோக அறிக்கைகளை விட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் நடவடிக்கைகளும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்யதாகும்.

உண்மையில் அரசாங்கம் தனது அடிப்படைக் கடமைகளைச் செய்வதற்கு தவறி விட்டுள்ளது என்பதே மதத்தீவிரவாதிகளின் இத்தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அரசாங்கமானது முதலாவதாக இந்நாட்டு முஸ்லிம்களின் மத உரிமைகளையும், வணக்க வழிபாட்டுச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தத் தவறியுள்ளது. இரண்டாவதாக சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் மேற்கொண்ட மதத் தீவிரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது.

இதன் காரணமாகவே அனுராதபுரம், தம்புள்ள பள்ளிவாசல் சம்பவங்களையடுத்து குருணாகல், தெஹிவளை எனத் தொடர்ந்து இன்று ராஜகிரிய பள்ளிவாசல் வரை முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுத் தலங்களின் மீதான அச்சுறுத்தல் செயற்பாடுகள் நீண்டு வருகின்றன. எதிர்வரும் 25ம் திகதியுடன் ராஜகிரிய பள்ளிவாசலை மூடிவிடுமாறு பொலீசார் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

அதேபோல் முஸ்லிம்களின் பூர்வீக வாழிடங்களில் அவர்களின் தனித்துவத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இடையூறுகள் ஏற்படுத்தும் வகையிலும் சம்பவங்கள் தொடர்கின்றன. காத்தான்குடி முஸ்லிம் பிரதேசத்தில் வீதிப் பெயர்ப்பலகைகளில் எழுதப்பட்டிருந்த அறபு மொழி வாசகங்கள் இரவோடிரவாக அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மைபூசி அழிக்கப்பட்டது. இங்குள்ள கலாச்சார மண்டபத்தின் பெயரில் காணப்பட்ட 'இஸ்லாமிய கலாச்சாரம்' என்ற வாசகமும் கூட இந்த அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்து வரும் இப்பிரதேசத்தின் பிரதியமைச்சரால் இல்லாதொழிக்கப்பட்டது.

கிண்ணியா முஸ்லிம் நகரத்தின் நுழைவாசலில் நிறுவப்பட்டு வந்த வரவேற்பு வாசலை இஸ்லாமியக் கலையம்சங்கள் பொருந்தியதாக நிர்மாணிப்பதற்கு கடந்த வாரங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களும் தமிழர்களும் மாத்திரமே சூழ வாழ்ந்து வரும் பௌத்த குடியிருப்புக்கள் அறவே இல்லாத மூதூர் ஜபல் மலையில் புத்தரின் சிலையொன்று சில தினங்களுக்கு முன்னர் இரவோடிரவாக நிறுவப்பட்டுள்ளது. யுத்த காலத்தின்போது மூதூர் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த தினத்திலேயே இச்சிலை வைப்புச் சம்பவம் நடைபெற்றிருப்பதை எண்ணி மூதூர் முஸ்லிம்கள் மௌனக் கண்ணீர் வடிக்கின்றனர்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பொத்துவில் பிரதேசத்தில் எவ்வித அவசியமும் இன்றி பௌத்த மத வழிபாட்டுத்தலங்களும் பலாத்காரமாக நிறுவப்பட்டு வருகின்றன. இப்பிரதேச முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாகவே பொத்துவில் முஸ்லிம்கள் இவற்றைக் கருதுகின்றனர்.

நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட திருகோணமலை கருமலையூற்று கிராமமும், அங்கிருந்த ஒல்லாந்தர் காலத்துப் பள்ளிவாசலும் அரசாங்கத்தின் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு வாழ்ந்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடபுலத்திலிருந்து 90களில் இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஈராண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் தமது பூர்வீக வாழிடங்களில் சென்று குடியேறுவதற்கு தடைகள் விதிக்கப்படுகின்றன. பழைய அகதிகள், புதிய அகதிகள் என்கிற பாரபட்சமான நிர்வாக நடைமுறைகள் மூலம் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் வடபுல முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

மன்னார் உப்புக்குள முஸ்லிம் மீனவ சமூகத்தின் உரிமைகள் கபளீகரத்துக்கு உள்ளாகி இருப்பதோடு அங்கு தொடர்ந்தும் முஸ்லிம்கள் வாழவதற்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு இந்த அரசாங்கத்தினால் உரிய பாதுகாப்பை வழங்க முடியாமல் இருக்கின்றது.

ஒலுவில் அஷ்ரப் நகர மக்களின் காணிகள் கபளீகரமாகியுள்ளது. பொத்துவில் விவசாயிகளின் பூர்வீக நிலங்கள் அரசாங்கத்தினால் மிக அநியாயமாகவும், பாரபட்சமாகவும் அபகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறெல்லாம் எமது மக்களுக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

சிவில் நிர்வாகத்தையும், பொதுமக்களின் அமைதி வாழ்க்கையையும் இந்த நாட்டில் பாதுகாக்க வேண்டிய தரப்பினரே மதத் தீவிரவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இன்று பள்ளிவாசல்களை இழுத்து மூடி முத்திரையிடுவதும், அல்லது மூடி விடுமாறு காலக்கெடு விதிப்பதும் பெரும் துரதிர்ஷ்டமாகும்.

முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கப் போவதாகப் புறப்பட்ட கட்சியின் தலைவர் ஒருவர் நீதியமைச்சராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவது அதை விடப் பெரிய துரதிர்ஷ்டமாகும்.

இத்தனை சம்பவங்களும் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஆற்றுப்படுத்தும் ஒரு வசனத்தைக்கூட இன்று வரையில் நாட்டின் தலைவரான ஜனாதிபதி வாய் திறந்து சொல்லி இருக்கவில்லை.

ஆனால் தம்புள்ள பள்ளிவாசல் மீதான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தம்புள்ள ரஜமஹ விகாரையின் பீடாதிபதி இனாமலுவ சுமங்கல தேரரை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளதுடன் தம்புள்ள புனித பிரதேச நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.
இதிலிருந்து தம்புள்ள பள்ளிவாசல் அதன் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அல்லாஹ்வுக்காக வக்புச் செய்யப்பட்ட பூமியிலிருந்து மிக விரைவில் அகற்றப்படப் போகின்றது என்பது உறுதியாகத் தெரிகின்றது. மட்டுமன்றி தம்புள்ளை பள்ளிவாயல் விரைவில் அகற்றப்பட்டே ஆகுமென குறித்த தேரரும் அகிரங்க அறிக்கை விட்டு வருகிறார்.

இந்நிலையில் அப்பள்ளிவாசல் விடயமாக காத்தான்குடிக்கு வந்து சிம்ம கர்ஜனை எழுப்பிய முஸ்லிம் தனித்துவக்கட்சியின் தலைவர் கடந்த மாதம் 20ம் திகதி கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது, தாம் அரசாங்கத்திற்கு விசுவாசமாகச் செயற்படுவதாகவே எவ்வித தயக்கமும், வெட்கமும் இன்றித் தெரிவித்திருக்கின்றார்.

இது மட்டுமின்றி அவரது கட்சி வடமத்திய மாகாணத்திலும், சப்ரகமுவ மாகாணத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து நின்று வெற்றிலைச் சின்னத்திற்கே முஸ்லிம் மக்களை வாக்களிக்குமாறு எவ்வித தயக்கமோ, கூச்சமோ இன்றி கேட்கின்றனர்.

அதே கட்சியின் தலைவர் அரசாங்கம் வழங்கியுள்ள அமைச்சுப் பதவியுடனும், ஆளம்பு சேனைகளுடனும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து 'நாம் தனித்துக் கேட்கின்றோம். நமது தனித்துவக் கட்சிக்கும், சின்னத்திற்கும் வாக்களித்து எமது பேரம் பேசும் சக்திக்கு வலுவூட்டுங்கள்' என்று தந்திரமாக வாக்குக் கேட்கின்றார். முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தையும், அடிப்படை உரிமைகளையும் இந்நாட்டில் படிப்படியாக இழந்து கொண்டு வருவதை அவர்கள் அனுபவித்து வருகின்ற அமைச்சுப் பதவிச் சுகங்கள் மறைத்து நிற்கின்றன.

முஸ்லிம் சமூகத்தின் சுயமரியாததையைத் தொலைத்து விட்டு ஒரு சில அமைச்சுப் பதவிகளுக்காக அரசாங்கத்திடம் சரணடைந்திருக்கும் அமைச்சர்களையும்,  பிரதியமைச்சர்களையும், இவர்களால் நலிவடைந்து போய்விட்ட எமது முஸ்லிம் சமூகத்தையும் இந்த அரசாங்கம் இன்னமும் ஒரு பொருட்டாகவே கருதியிருப்பதாக எமக்குத் தெரியவில்லை. அவ்வாறு கருதியிருந்தால் கிழக்கிலும், ஏனைய இரண்டு மாகாணங்களிலும் வாழக்கூடிய முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தல் காலத்திலாவது எமது சமூகத்தை ஆசுவாசப்படுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதியோ அவரது பேரின அமைச்சர்களோ எவ்வகையிலும் செயற்படுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அரசுடன் நிரந்தரமாகச் சேர்ந்திருக்கின்ற முஸ்லிம் கட்சிகளும், கிழக்கில் மட்டும் அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட அனுகூலங்களுடன் தமது தேர்தல் வசதிக்காக தனித்துப் போட்டியிடும் தனித்துவக் கட்சியினரும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக பல்வேறு உபாயங்களுடன் களமிறங்கியுள்ளார்கள்.

தமது தேவைக்கேற்ப சில பிரதேசங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும், சில பிரதேசங்களில் தனித்தும் தேர்தலில் போட்டியிட்டு தந்திரமாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை அறுவடை செய்யப்போகும் இவர்கள் தேர்தலின் பின் இவ்வாக்குகளை அரசாங்கத்திடம் தாரை வார்க்கின்ற நிகழ்ச்சி நிரலிலேயே தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் மறந்து விடக்கூடாது.

சமூகத்தின் உரிமைகள், உணர்வுகள், மரியாதையைப்பற்றி கடுகளவிலும் கருத்திற்கெடுக்காத அந்த அரசியல் வியாபாரிகளுக்கு முஸ்லிம் சமூகமே உரிய பதிலை வருகின்ற செப்டம்பர் மாதம் 08ம் திகதி வழங்கியாக வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் மதச் சுதந்திரத்தை மதிப்பவர்கள் என்பதையும், மத அச்சுறுத்தலை மிதிப்பவர்கள் என்பதையும் தமது வாக்களிப்பின் மூலம் அரசுக்கும், அரசின் முகவர்களுக்கும் உறைக்கும் வகையில் புரிய வைக்க வேண்டும்.

சட்டவாட்சி வலுவிழந்து ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் மேலோங்கி வருகின்ற நிலையில் நல்லாட்சியைத் தோற்றுவிப்பதற்காக அர்ப்பணிப்புடன் முன்வந்திருக்கும் புதிய தலைமுறையினரிடம் முஸ்லிம் சமூகம் தனது அரசியல் அதிகாரங்களைக் கையளிக்கத் துணிய வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அதனை நாம் அலட்சியப்படுத்தி விட்டு பின்னர் கைசேதப்படும் சமூகமாக இருந்து விடக்கூடாது.

பதவிகளுக்கும், பணத்திற்கும் சோரம் போகாது சமூகத்தின் ஆணைகளை மதித்து அதற்காகவே தமது பொருளாதாரங்களைச் செலவு செய்து அர்ப்பணிப்புடன் உழைப்பதற்கு முன்வந்துள்ள சமூகப்பற்றாளர்களை கிழக்கு முஸ்லிம் சமூகம் வரவேற்று வாக்களித்து உரிய கௌரவத்துடன் இந்த அரசுக்கு முன்னால் நிறுத்திக் காட்ட வேண்டும். எவ்வித சலுகைகளுக்கும் விலைபோகாமல் எமது சமூகத்தின் நலனுக்காகக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் குரல் கொடுக்கக்கூடிய ஆற்றலும், தகைமையும் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கு விசுவாசமான சக்தியொன்றை இப்போதிருந்தாவது நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இவ்வாறு அக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment