July 29, 2012

முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கமும், சில குறிப்புகளும்..!!

எம்.பௌசர்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தனித்த ஒரு தேசிய இனம் என்கிற வகையில், இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கத்திலும் அதன் பாதிப்பிலும் தீர்விலும் அவர்களுக்கும் பங்குண்டு என்பது முதலில் ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய அரசியல் உண்மையாகும். அதே போல் தேசிய இன அதிகார ஆதிக்கத்திடமிருந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அதனை நிலை நாட்டுவதற்குமான அரசியல் வழிமுறைகளை அம்மக்களுக்குள் செயற்படுத்திக் கொண்டிருப்பதும் ,அந்தப் பயணத்தில் சளைக்காது முன்னோக்கி சென்று கொண்டிருப்பதும் முஸ்லிம்களின் உரிமைக்காக அரசியல் செய்கிறோம் என சொல்லி வரும் அரசியல் தலைமைகளின் அவசியக் கடமையுமாகும்.

நீண்ட கால தேசிய இன மேலாதிக்க அரசியலில் தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என வாயளவில் மட்டும் சொல்லிக் கொண்டு, இந்த இன மேலாதிக்க அரசியலில் இருந்து சொந்த மக்களை விடுவிப்பதற்கான எந்த வேலைத் திட்டமும் இன்றி , நடுவண் அரசின் அமைச்சு அதிகாரத்தினை முஸ்லிம் அரசியலின் அச்சாணியாகவும் அடையும் இலட்சியமாகவும் வைத்துக்கொண்டு, இந்த அதிகாரக் கதிரையினையே அடைவதும் இந்த அதிகாரத்தின் ருசியினை கைவிடமுடியாமல் திணறிக் கொண்டிருப்பதுமான நிலை, இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ உரிமைக்கான அரசியல் போராட்டத்தினை வேறு அர்த்தப்பட்டிற்குள் கொண்டுவந்து தள்ளி இருப்பதுடன் நிலமையினை மேலும் சிக்கலாக்கி உள்ளது என்பதே இன்று நாம் காணும் யதார்த்தமாகும்.

உண்மையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தாங்கள் இதுவரை கொண்டிருந்த வழிமுறைகளின் ஊடாக இப்போது பெரும் நெருக்குவாரத்தினை எதிர் கொள்கிறார்கள் என்பது, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட கையுடன் அம்பலத்திற்கு வந்து விட்டுள்ளது. கடந்து வந்த காலத்தினைவிட,எதிர்காலம் என்பது மோசமான முஸ்லிம் இன அடக்குமுறைகளை தரக்கூடிய அரசியல் சூழலை தன்னகத்தே கொண்டது என்பது இலங்கையின் இன்றைய அரசியலை விளங்கிக் கொள்பவர்களுக்கு முன்னுள்ள எளிய உண்மையாக இருக்கிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு என்பது, பண்பளவில் சிங்கள கடும்போக்களர்களின் கருத்தியலை செயற்படுத்துவதற்கான அதன் அதிகாரத்தினை தயவு தாட்சன்னியமின்றி பிரயூகிக்கிகக் கூடிய அரச இயந்திரம் என்பது நிருபணமான நடைமுறைச் சான்றாகும். இலங்கை பல்லின,பல்கலாசார அடையாளம் கொண்ட தேசிய இனங்களின் தாயகம் என்பது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடு என்பதனை ,இந்த அரசு அழுத்தம் திருத்தமாக சொல்லி வருவது மட்டுமன்றி இந்த பல்லின அடையாளத்தினை மையங்களிலிருந்து விளிம்பினை நோக்கி தள்ளும் அனைத்து பலப்பிரயோகங்களையும் சகல மட்டங்களிலும் செயற்படுத்தி வருகிறது.

இப்படியான ஒரு கடும் போக்கு அரசு,இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தன்னை அசுரப்பலப்படுத்தி ,சமூக ஜனநாயக முகத்தினைத் தாண்டிய சிங்கள தேசியவாத கருத்தியல்அடக்குமுறை அரசாக ஸ்தாபிதம் கொண்டுவிட்ட நிலையில், இலங்கையின் அரசியல் தன்மையின் வடிவங்களும் பண்புகளும் வேறு தளங்களுக்கு மாறி விட்டன, இந்த தள மாற்றத்தில் பிராதானமானவற்றுள் முஸ்லிம்கள் மீதான அரசஅடக்குமுறை வடிவமும் இன்று முன்னுக்கு வந்துள்ளது.

இன்றைய இலங்கை அரசாங்கமானது இலங்கை வாழ் ஏனைய தேசிய இனங்களினதோ,கட்சிகளினதோ தயவிலும் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியத்தினை கடந்து ,சிங்கள மக்களின் பெருமலவிளான ஆதரவுத் தளத்தை தனதாக்கிக் கொண்ட மாற்றம் இதற்கு பிரதான காரணமாகும் இந்த ஆதரவு பலத் தளமானது இரவோடு இரவாக உருவானதல்ல. 2005 ஜனாதிபதி தேர்தலில் மிகக் குறைந்த பெரும்பான்மையில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி முதலில் அவர் செய்தது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை சுக்கு நூறாக உடைத்து அதன் பாராளுமன்றப் பிரதிநிதிகளையும் அதன் ஆதரவு மக்கள் தளத்தின் கணிசமான பகுதியை தன்வசமாக்கிக் கொண்டமை. ஜேவிபி,முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளிடையேயும் இந்த அணுகுமுறையை பாவித்து அதன் பாராளுமன்றப் பிரதிநிதிகளையும் அதன் ஆதரவு மக்கள் தளத்தின் கணிசமான பகுதியை தன்வசமாக்கிக் கொண்டமை. இந்த உடைப்பும் அணிச்சேர்ப்பும் இச்சிறு கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மகிந்த அரசின் கீழ் சாஸ்டாங்கமாக விழச் செய்தன.

இன்றைய கூட்டு முன்னணி அரசாங்கம் என்பது வெறும் பெயரளவிலானது. சித்தாந்த பலமும், போராட்ட வழிமுறையைக் கொண்ட ஜேவிபி கட்சியால் பெயரளவில் மட்டுமான இந்த கூட்டு முன்னணிக்குள் இருக்க முடியவில்லை. ஜேவிபி இந்த அரசின் கூட்டிலிருந்து வெளியேறுவது என முடிவெடுத்த போது ,மகிந்தவிற்கு ஜேவிபியின் ஆதரவு தேவையாக இருக்கவில்லை. இன்னொரு வகையில் சொல்லப் போனால் ஜேவிபி தன்னுடன் இருப்பது மகிந்தவுக்கு தலையிடியானதாவே இருந்தது. சிங்கள கட்சியான ஹெல உறுமய மகிந்தவுடன் கொள்கை அடிப்படையில் முரண்படுவதற்கான அரசியல் புள்ளி குறைவானதே. சிங்கள கடும் போக்கு தேசியவாதகட்சியான ஹெல உறுமய கொண்டுள்ள இலங்கை சிங்கள மக்களின் தாயகம், இலங்கை அரசாங்கத்தினை தீர்மானிக்கின்ற தீர்மானகரமான சக்தியாக சிறுபான்மை இன கட்சிகள் இருக்கக் கூடாது.பரந்தளவிலான சிங்கள குடியேற்றம், வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அதிகார பகிர்ந்தளிப்பிற்கான மறுப்பு என்பன இன்றைய மகிந்த அரசின் தீர்மானகரமான உறுதியான கொள்கை நிலைப்பாடாக இருக்கின்ற போது, சிங்கள கடும் போக்கு கட்சியான ஹெல உறுமய இன்றைய அரசாங்கத்துடன் முரண்ணிலைக்கு செல்வதற்கு அக்கட்சிக்கு எந்த தேவையும் இல்லை.

இனத்துவ அடிப்படையில் பண்புமாற்றம் பெற்ற இந்த அரசானது, நாட்டில் தொழில்பட்டு வருகின்ற அனைத்து எதிர்கட்சிகளையும் பலவீனப்படுத்தி ஜனநாயக விரோத தன்மையையும் பெற்று விட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி,ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு இந்த அரசின் ஜனநாய விரோதத் தன்மையையும் ,இதன் அசுரப்பலமும் வீழ்த்த முடியாத சவாலினை முன்னால் வைத்துள்ள அதே நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீங்கலாக ஏனைய சிறுபான்மை இன சிறு கட்சிகளுக்கு முன்னே அரசிடம் சரணாகதியாவதை தவிர வேறு வழியை விட்டு வைக்கவில்லை.

இந்த இடத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் முஸ்லிம் காங்கிரசையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் இயக்கங்களான இக்கட்சிகள், மேற்கூறப்பட்ட பண்பு மாற்றங்களை தன்னகத்தே கொண்ட அரசாங்கத்துடன் தமது மக்களின் அடிப்படை இன உரிமைகளுக்காகவும், ஜனநாயக வாய்ப்புகளுக்காவும் தொழிற்படுவது தொடர்பாகவுள்ள அரசியல் தன்மையும் அதன் நிலைப்பாடுகளும் இங்கு முக்கிய மாகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அரசாங்கத்தால் உடைக்கப்பட முடியாது ஓரளவு பலமாகவும், இதன் உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளை காட்டி இழுக்க முடியாமல் இருப்பதற்குமான பிரதான தடையாக இருப்பது, இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க கூடியது அல்ல என்கிற அதன் நடைமுறை யதார்த்தமேயாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்கின்ற மக்கள் பிரிவினர், ஒரு தனித்த தேசிய இனம் என்கிற வகையில் தமக்கான அரசியல் உரிமையை நீண்ட காலமாய் கோரி நிற்பவர்களும், இந்த அரசியல் நிலைப்பாட்டினை விட்டு கொடுக்க முடியாது என நம்புபவர்களுமாகும். தமிழ்மக்கள் தந்த அரசியல் ஆணையின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு விசேட அதிகாரப் பகிர்ந்தளிப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி நிற்கிறது.

இன்றைய நிலையில் முஸ்லிம்களுக்குள் உள்ள கட்சிகளில் முஸ்லிம் காங்கிரசின் பாத்திரம், தமிழ் மக்களுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ள பாத்திரத்தினை ஒத்ததே. இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இந்த விடயத்தில் உள்ள தெளிவினை விட, அக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையுடன் அக்கட்சியை ஆட்டிப்படைக்கிறது. அக்கட்சி உருவானதன் தேவையும் நோக்கும் அதன் ஸ்தாபனப் பண்பும் அதனை மெய்ப்பிப்பதற்கான களத்தின் அரசியல் சூழலை எதிர்கொள்கின்ற முக்கிய சந்தர்ப்பத்தின் போது அதன் இன்றைய அனைத்துப் பலவீனங்களைடியும் தாண்டி முன்னுக்கு வருகிறது.

இப்படியான இக்கட்டான நிலையில் குழப்பமும் தடுமாற்றமும் ஏமாற்றமும் கையருநிலையுமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தள்ளாடித் திணறுகிறது. எஞ்சி இருக்கின்ற சிறு நம்பிக்கையுடன்முஸ்லிம்களின் உரிமையை பெறுவதற்கான அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரசை பார்ப்பவர்கள் தமது இதுவரையான பார்வையை உரசிப்பார்ப்பதற்கான முக்கிய தருணமாக இத்தேர்தலையும் தேர்தலுக்குப் பின்னான காலத்தினையும் கொள்ள முடியும். ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு அரசாங்கத்துடன் இணைந்து நின்று தேர்தலை கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்களுக்குள் தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பினை வரலாறு வழங்கியுள்ளது என்பது, அக்கட்சி முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கமாக உள்ளது என்கிற அரசியல் பண்பே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் ஆனதில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இன்று மிக நெருக்கடி நிலையில் உள்ளார். அமைச்சுப் பதவியையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், மக்கள் மத்தியில் கட்சியின் ஆதரவுத்தளத்தினையும் நிலைநாட்ட வேண்டும்,அதேநேரம் மகிந்த ராஜபக்சவையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அவரது இந்த திரிசங்குநிலையுடன் கட்சிக்குள்ளும் இரு விதமான போக்குகள் வலுப்பெற்று வருகின்றன. ஒன்று முஸ்லிம் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டும்,ஏனைய முஸ்லிம்கட்சிகள் போல் தொழில்பட முடியாது, அரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகளுக்கு தொடர்ந்தும் சப்பைக் கட்டு சொல்லி காலத்தினை கடத்த முடியாது என்கிற நிலைப்பாடு. இன்னொரு பிரிவினர் அமைச்ச்சுப்பதவி மற்றும் அரசுவளங்கும் வாய்ப்பு வசதிகளை கைவிட்டுவிடமுடியாது, இப்படியே காலத்தை ஒட்டிவிடலாம் என நினைக்கும்,அதற்காகவே கட்சிக்குள் இருக்கும் ஒரு பிரிவினர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என எடுத்த முடிவு,கட்சி தலைமையை பொறுத்தவரை உறுதியானதும் தெளிவான முடியும் அன்று. அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த எந்த கோரிக்கையையும் கணக்கில் கொள்ள தயாராக இல்லை என சொன்னதன் பின்பு,கட்சிக்குள் கருத்து விவாதங்கள் எழுந்து கட்சியின் செயலாளர் உறுதியான நிலைப்பாடு எடுத்து நின்றதன் பின்பும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கே தயாராகி இருந்தது. ஆனாலும் அரசின் பண்பு முஸ்லிம் காங்கிரசுக்கு அந்த இடத்தினை வழங்க தயாராக இருக்கவில்லை என்பதே யதார்த்தமாகும்.

அக,புற நிலைமைகளின் காரணமாக தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் முஸ்லிம் காங்கிரசின் நிலை இன்றைய அரசியல் அரங்கில் பல தெளிவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பினைத் தருகிறது. தேர்தல் அரங்கில் அரசாங்கத்தினை விமர்சிக்க முஸ்லிம் காங்கிரசால் முடியப் போவதில்லை, முஸ்லிம்களுக்குள் நின்று முஸ்லிம் காங்கிரசுக்கு சவாலாகவுள்ள ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகளை விமர்சிப்பதுடன், நான் ஏலவே சொன்ன முஸ்லிம்களின் அரசியல் சமூக உரிமைகளை பெற்றுத்தரக் கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரசே,ஆகவே முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என மட்டுமே சொல்ல முடியும். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கான வேலைத்திட்டத்தினையோ வழிவகையினையோ முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் முஸ்லிம்கள் மத்தியில் வைக்க முடியாது , ஏனெனில் தற்போது அதன் தலைமையிடம் எந்த திட்டங்களும்இல்லை. தேர்தல் கால நிலைமை இப்படி என்றால் தேர்தலுக்குப்பின் எழுகின்ற அரசியல் சூழல் இன்னும் நெருக்கடியானது.

௦. முஸ்லிம் மக்களின் நலன் சார்பான எந்த அரசியல் கோரிக்கைகளும் இன்றி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் செல்ல முடியாது. உதாரணமாமாக கட்சியின் செயலாளரால் அழுத்தப்படுகின்ற கரையோர மாவட்டம், அம்பாறை,திருமலை மாவட்டங்களுக்கான தமிழ் பேசும் அரசாங்க அதிபர்களின் நியமனம்.

௦. அப்படி செல்வதாக இருந்தால்,முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கம் என்கிற பண்பினையும் எஞ்சி இருக்கின்ற அதன்அரசியல் அடையாளத்தினையும் கைகழுவ வேண்டி இருக்கும்.

௦. கட்சித் தலைமை இரண்டையும் செய்வதற்கு தயாரில்லை என்றால், முஸ்லிம் காங்கிரசில் உள்ள இரண்டாவது பிரிவினர், கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் ஒருசிலரை முடியுமானால் அழைத்துக் கொண்டு அரசாங்கத்தில் இணைய வாய்ப்புண்டு.இல்லாது விட்டாலும் தங்களுக்கு அமைச்சு,பிரதி அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டு போக கூடும்.

௦.இன்றைய இலங்கையின் நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையிட்டினை சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரசின் சட்ட ரீதியான பிரதிநிதிகளாக அவர்கள் இருக்க முடியும்.

௦.இப்படி நேர்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்க முடியாது.

௦.தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் தமிழ் மக்களுக்கான,அல்லது கிழக்கு மாகாணத்திற்கான அதிகார கோரிக்கையை அரசியல் ரீதியாக வலுப்படுத்தி முன் செல்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த விடயத்தில் மௌனம் சாதிக்க முடியாது. இப்படியானதும் இன்னும் பலதுமான சிறிதும் பெரியதுமான பல நெருக்கடிகள் தேர்தலுக்குப்பின் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு முன் உள்ளன.

நடக்கப்போகின்ற கிழக்கு மாகான சபைத் தேர்தல் என்பது தேசிய இனங்களான தமிழ்,முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பகிர்ந்தளிப்பின் அரசியல் கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட மக்கள் ஆணைக்கான களமாகவும்,நடுவன் அரசுடன் பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை கோருவதற்குமான அரசியல் தளமுமாகும். கிழக்கில் முஸ்லிம்களுக்கான முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை முன்வைத்து இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் கருவாகி உருவான ஒரு கட்சி,அந்த கோரிக்கையை கைவிடுவதுடன்,அந்த அரசியல் பாதையை விட்டு தடம் புரளுவதுடன், அதிகாரப் பகிர்வினை வலியுறுத்தும் இன்னொமொரு தரப்பின் அரசியல் கோரிக்கைக்கு தடையாக இருப்பதும் நடந்து விடக்கூடிய அபாயங்களில் ஒன்றாக உள்ளது.

இங்கு கட்டுரையாளர் அழுத்தம் தந்து சொல்ல விரும்புகின்ற செய்தி யாதனில், முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையேயான அரசியல் கோரிக்கை, நிலைப்பாடுகள், வழிமுறைகளில் எந்த வேறுபாட்டினை வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கம் என இன்னமும் அடையாளப்படுத்துவது என கேட்பவர்களுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் உரிமைக்கான கட்சி என நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஓரளவு தெளிவான பதிலை கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் ,பின்நிலமைகளும் தந்து விடும் .சொந்த மக்கள் மட்டுமல்ல,தலைமைகளும் அதிக விலை கொடுக்க வேண்டிய காலமுமிது .
 

2 கருத்துரைகள்:

THANKS FAWSAR,
ramalan1975@gmail.com

its is good article and muslim community in eastern province should understand the reality and vote for muslim congress. then it lead to think about the other muslim leaders that muslims are need more rights at the movement

Post a Comment