Header Ads



ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரியுங்கள் - ஜெயலலிதா


(குறிப்பு - இந்தியா தமிழ்நாட்டில் முஸ்லிம்களை, ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தமிழர்கள் என்றே அழைக்கின்றனர். சில முஸ்லிம்களும் தம்மை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு முஸ்லிம்களிடம் ஏற்படுவது மிக அவசியமாகும். இலங்கையிலும் நம்மவர்கள் சிலர் ''தமிழ் பேசும் மக்கள்'' என அழைப்பர். இதுவும் துரதிஷ்டவசமானது எனலாம். முஸ்லிம்களை முஸ்லிம்கள் என்று அழைப்பதே எப்போதும் சிறந்தது.)

செய்தி உதவி - மாலை மலர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,

ஐந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவதற்காக, தமிழ்நாடு ஹஜ் குழுமத்துக்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுமம், தமிழகத்துக்கு 2863 இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்று சொல்ல தேவையில்லை.

2012-ம் ஆண்டுக்கான ஹஜ் புனித பயண வழிபாட்டு நெறிமுறைகளின்படி, தமிழர்களுக்கான 2863 இடங்களில், 1146 இடங்கள், இட ஒதுக்கீடுக்கான பிரிவினருக்கும், 1717 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது. மேலும் 9243 விண்ணப்பதாரர்கள் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தின் போது, இந்திய ஹஜ் குழுமம் தமிழகத்துக்கு தொடக்கத்தில் 3049 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன.

பின்னர் கூடுதல் ஒதுக்கீடு மற்றும் அரசின் சிறப்பு ஒதுக்கீடு இவற்றால் தமிழகத்தில் இருந்து 4084 யாத்ரிவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடிந்தது. அப்படி இருக்கையில், இந்த ஆண்டு தமிழர்களுக்கான ஒதுக்கீடு 2863 இடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறைவானது ஆகும்.

எனவே தமிழக முஸ்லிம் மக்கள் தொகையையும், பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள தமிழர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்துமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தேவையான அளவுக்கு கூடுதலான ஒதுக்கீட்டை அளிக்குமாறு வெளியுறவு துறையையும், இந்திய அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் பெருமளவு தமிழக ஹஜ் பயணிகள் பயனடைவர். நிறைய பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியும். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.