Header Ads



'அரசாங்கம் மக்களை மாடு என நினைக்கிறது' - பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

AD . T

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஏ சித்திகள் பெற்றும் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் கல்வியில் உள்ள நியாயம் என்ன என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இசெட் புள்ளி வெளியிடப்பட்டதன் பின் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

இதனால் பல்கலைக்கழக மாணவர் அனுமதி தொகையை அதிகரித்து, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அநீதியின்றி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2012ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுத ஒரு வாரத்தில் அனுமதி பெற்றுத் தருவதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் ஒரு வாரத்தில் பரீட்சைக்குத் தோற்ற தயாராக முடியுமா என கேள்வி எழுபியுள்ள அவர், அரசாங்கம் மக்களை மாடு என நினைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் தெரெசா திஸானி முன்னர் மூன்று ஏ சித்தி எடுத்து மாவட்ட நிலையில் 232வது இடத்தை பிடித்திருந்தார். இசெட் புள்ளி வெளியான பின் அவரது மாவட்ட நிலை 523ஆக மாறியுள்ளது. மாத்தறையில் 325 பேர் கலை பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்படி அவரால் தற்போது பல்கலைக்கழகம் செல்ல முடியாது. இது என்ன நியாயம்?

ஹம்பாந்தோட்டையில் துசார விமுக்தி 3 ஏ சித்தியுடன் மாவட்டத்தில் 4ம் நிலையில் இருந்தார். இசெட் புள்ளி வெளியிட்டதன் பின் அவரது மாவட்ட நிலை 216 ஆகும். ஹம்பாந்தோட்டையில் 210 பேர் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவர். இவருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காது. இது என்ன நியாயம்?

இவ்வாறு பல மாணவர்கள் பிரச்சினையில் விழுந்துள்ளனர். இதனை கண்டித்து நாம் நாளை தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். அதில் பங்குபற்றுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கிறோம். அரசாங்கம் இம்மாணவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.  இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.