July 29, 2012

நற்பண்பான சமூகத்தை தோற்றுவிப்பதற்கான பணி மதகுருமார்களிடம் ஒப்படைப்பு - பிரதமர்

மொஹமட் ஹபீஸ்

 ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ  இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் நற்பண்பு மிக்க சமூகமொன்றினைத் தோற்றுவிப்பதற்கான சவாலானது பௌத்த மகா சங்கத்தினர் உட்பட்ட ஏனைய மதகுருமார்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதம அமைச்சர் தி.மு. ஜயரத்ன அவர்கள் சுட்டிக் காட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதம அமைச்சர் அவர்கள், பௌதீக ரீதியான அபிவிருத்தியின் மூலம் மட்டும் சமூகமொன்றினை நற்பண்பு மிக்க சமூகமாக மாற்ற முடியாதெனவும் ஆன்மீக ரீதியாகவும் அபிவிருத்தியடைந்த சமூகமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவும் கூறினார்.

தேசிய ஒற்றுமைக்கான அனைத்து மதங்களினது அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த நிகழ்வின் போதே பிரதம அமைச்சர் அவர்கள் இவ்வாறு கூறினார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான விசும்பாயவில் கடந்த தினமொன்றில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. இந்த சந்திப்பில் பௌத்த மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான சங்கைக்குரிய கலகம தம்மரங்ஸி தேரர், இந்து மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான பிரம ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான அருட்தந்தை சரத் ஹெட்டிஆரச்சி, முஸ்லிம் மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான அல்ஹாஜ்  ஹஸன் மௌலவி உட்பட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இங்கு, தேசிய ஒற்றுமைக்கான அனைத்து மதங்களினது அமைப்பின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி  மஹந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் நற்பண்புமிக்க சமூகமொன்றினைத் தோற்றுவிப்பதற்காக பிரதம அமைச்சர் தி.மு.ஜயரத்ன அவர்கள் மேற்கொண்டிருக்கும் மத ரீதியான வேலைத் திட்டங்களை தாம் பாராட்டுவதாகவும் தி.மு.ஜயரத்ன அவர்கள் பிரதமராக பதவியேற்ற தினத்தில் இருந்து இன்று வரையிலான இரண்டரை வருட காலத்தினுள் இந்த நாட்டில்  பாரிய சமய புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அது சகல மதங்களைச் சேர்ந்தவர்களினதும் பாராட்டுக்குட்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டினர். அதிமேதகு ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொண்டிருக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைவான வகையில் நற்பண்புமிக்க சமூகத்தினை உருவாக்கும் சவாலை பிரதம அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் கூறினர்.

இங்கு பௌத்த மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான சங்கைக்குரிய கலகம தம்மரங்ஸி தேரர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 2600 வது ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தியுடன் ஆரம்பித்த சமய புத்துணர்ச்சியினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது அவசியமெனவும் பிரதம அமைச்சர் அவர்கள் நாட்டின் தூரப் பிரதேசங்களில் அமைந்துள்ள தானம் கூடக் கிடைக்காமல் பிக்குமார்கள் வசிக்கும் விஹாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளும் பணிகளும் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களின் ஊடாக மேற்கொள்ளும் பணிகளும் பாராட்டுக்குரியவை எனவும் சுட்டிக்காட்டியதுடன் பிரதம அமைச்சர் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் யாவும் சகல வகையிலும் சிறப்பானதாக அமைய மும்மணிகளின் ஆசிகளுடன் நல்ல தேகாரோக்கியம் கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான அருட்தந்தை சரத் ஹெட்டிஆரச்சி  கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையானது  பல மதங்களைப் பின்பற்றும், பல்லின மக்கள் வாழும் நாடு எனவும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல மதங்களைப் பின்பற்றுவோரிடையே மற்றும் பல்லின மக்களிடையே ஓற்றுமையை ஏற்படுத்தும் பொறுப்பும் திறமையும் பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களிடம் காணப்படுவதனாலேயே புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சினை அவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அம்புலுவாவ மலை உச்சியில் சர்வ மத மத்திய நிலையத்தினை அமைத்து சகல மதத்தவர்களுக்கும் ஒரே இடத்தில் தமது மதக் கிரியைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருப்பதாகவும் கூறினார்.

இந்து மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான பிரம ஸ்ரீ பாபு சர்மா குருக்கள் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்கள் சிங்கள,தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ இனத்தவர்களிடையே சமய ரீதியான ஒற்றுமையினை ஏற்படுத்துமுகமாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் எனவும் ஆனாலும் மதங்களிடையே பேதங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பவர்களும் எம்மிடையே காணப்படுகின்றனர் எனவும் அவ்வாறான குறுகிய மனப்பான்மையுடன் செயற்படுபவர்களுக்கு அவர்களின் குறிக்கோளினை அடைந்து கொள்வதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதெனவும் பிரதமர் அவர்கள் இந்து சமய நடவடிக்கைகளின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருப்பதாகவும் கேகாலை, கண்டி, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இந்து மத நடவடிக்கைகளின் அபிவிருத்திக்காக பிரதம அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பினை ஒருபோதும் மறக்க முடியாதெனவும் கூறினார்.

முஸ்லிம் மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளரான அல்ஹாஜ்  ஹஸன் மௌலவி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னரான கடந்த 3 வருட காலத்தினுள் இந்த நாட்டினை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பாரிய அர்ப்பணிப்பினை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதியவர்களுக்கு பிரதமர். தி.மு. ஜயரத்ன அவர்கள் தனது பூரண ஒத்துழைப்பினை நல்குவதனை ஒருபோதும் மறக்க முடியாதெனவும் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பிரதம அமைச்சர் அவர்கள் பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதாகவும் அவரது இந்த சேவையினை முஸ்லிம்களாகிய நாங்கள் மதிப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் பிரத்தியேக செயலாளர் அனுராத ஜயரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.



0 கருத்துரைகள்:

Post a Comment