Header Ads



பிரேம்குமார் குணரட்னம் காணாமல் போனமை - விசித்திரமான கதை என்கிறார் கோட்டாபய

சோசலிஷக் கட்சியின் (பி.எஸ்.பி.) தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் காணாமல்போன சிறிது நேரத்தில் அவரை கண்டுபிடிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி விசேட கோரிக்கை விடுத்தார்.

ஜே.வி.பியிலிருந்து பிரிந்த பிரேம்குமார் குணரட்னம் மற்றும்  முன்னிலை சோசலிஷக் கட்சியின்  அங்கத்தவரான திமுது ஆட்டிகல ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி ரொபின் மூடி தனக்கு அறிவித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டெய்லி மிரருக்கு நேற்று தெரிவித்தார்.

"இந்நபரை கண்டுபிடிக்குமாறு அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் என்னிடம் கோரினார். அந்நபர் இலங்கைக்கு வந்தமை எமக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் எப்போது இலங்கைக்கு வந்தார் என நான் உயர் ஸ்தானிகரிடம் கேட்டேன். அது தனக்குத் தெரியாதென அவர் கூறினார். இதுவரை தெரியாத ஒரு நபரை எப்படி கண்டுபிடிப்பது என நான் கேட்டேன்.

அப்படியான நபர் இருந்தால் அவரைப் பற்றிய சகல விபரங்களையும் தருமாறு நான் கூறினேன். அவரின் கடவுச்சீட்டு விபரம், இலங்கைக்கு வந்த திகதி, விஸா விபரம் ஆகியவை எமக்குத் தேவை. அந்நபரின் புகைப்படமொன்றையும் நான் கோரினேன். அவை குறித்து தனக்குத் தெரியாதென உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்" என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

"இது விசித்திரமான கதை. முதலில் அவர்கள் பிரேம்குமார் குணரட்ணம் என ஒருவர் இலங்கையில் இருப்பதை மறுத்தார்கள். இப்போது அத்தகைய ஒரு நபர் இங்கு தங்கியிருப்பது குறித்து பேசுகிறார்கள். அவுஸ்திரேலிய பிரஜைகள் எப்படி இங்கு தொந்தரவு ஏற்படுத்த முடியும்.  அவர் அவுஸ்திரேலிய பிரஜையானால் அங்கு தங்கிருக்க வேண்டும். இதைத்தான் நான்  உயர் ஸ்தானிகரிடம் கூறினேன்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

"குணரட்னம் எனும் நபர் குறித்த வதந்திகள் சில மாதங்களுக்குமுன் வெளிவந்தன. அப்போது இது குறித்து அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் நான் நேரடியாக கேட்டேன். அப்படியான நபர் இலங்கைக்கு வந்தாரா எனக் கேட்டேன். அப்படி வந்தால்; அவரின் விஸா, கடவுச்சீட்டு விபரங்களைக் கேட்டேன். எமக்கு  இவ்விபரங்கள் வழங்கப்படவில்லை. திடீரென குமார் குணரட்ணம் காணாமல் போய்விட்டார் எனக் கூறப்படுகிறது. இதில் அரசாங்கம் சம்பந்தப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்" எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
 

No comments

Powered by Blogger.