Header Ads



நீளும் வாளை விட சாடும் 'நா' கொடியது


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 

"முஸ்லிமை ஏசுவது பாவம்; முஸ்லிமோடு போரிடுவது இறை நிராகரிப்பு" என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நீண்ட வாள்களை விட, நீண்ட நாவுகள் ஆபத்தானவை. வாள்கள் வாளாக இருக்கும். நாவுகள் தான் அவற்றைத் தீட்ட வைக்கும். பின்னர் தூக்க வைக்கும்.

யார் முஸ்லிம்களுக்கெதிராக தங்களது நாவை நீட்டுகின்றார்களோ அவர்கள் தங்களது வாளையும் அவர்களுக்கெதிராக உயர்த்த முடியும். யார் தங்களது நாவையே நீட்ட விரும்பவில்லையோ அவர்கள் வாளைத் தொடவும் அஞ்சுவார்கள்.

முஸ்லிம்களுக்கெதிராக தங்கள் நாவுகளை நீட்டியிருக்கும் குழப்பவாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பம் விலைவிப்பதற்காக அன்று ஸஅது பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வாள் தூக்கச் சொன்னவர்கள் இன்றும் இருக்கிண்றார்கள். அவர்கள் இரண்டு காரணங்களுக்காக இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் வாள் தூக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஒன்று, மார்க்கத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு அதில் காட்டும் மிதமிஞ்சிய தீவிரம். மற்றது, தங்களது குறுகிய, தனிப்பட்ட அரசியல் இலாபங்கள்.]

ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த அறிவிப்பைக் கவனமாக வாசியுங்கள். இதனை உஸாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களை ஒரு படையுடன் ‘ஜுஹைனா’ குலத்தாரைச் சேர்ந்த ‘ஹுரைக்கத்’ கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். (நாங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தோம்) அவர்களில் ஒருவனை நான் தாக்க முயன்ற போது அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" எனக் கூறினார். எனினும் நான் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டேன். அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. நான் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறியபோது, "லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகா நீர் அவரைக் கொலை செய்தீர்?" என்று கேட்டார்கள். "ஆயுதத்தைப் பார்த்து பயந்துதான் அவர் அவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கூறினேன். அதற்கு அன்னார், "அவர் அதற்காகத்தான் சொன்னார் என்பதை அவரது நெஞ்சைப் பிளந்து பார்த்தீரா?" என்று (கடிந்து) கேட்டார்கள். அந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவுக்கெனில் நான் அன்றைய தினம் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்குமளவு.

இந்த சம்பவத்தின் அடியாக ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த முஸ்லிமுடன் நான் இனி போரிடுவதாக இருந்தாலும் இந்த உஸாமா அவருடன் போரிடுகின்ற வரை நான் அவருடன் போரிடமாட்டேன். (இதன் பொருள் உஸாமா இனி எந்த முஸ்லிமுடனும் போரிட மாட்டார், எனவே, நானும் போரிடமாட்டேன் என்பதாகும்.) அப்போது ஒரு மனிதர் ஸஅது ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் "முற்றிலும் (ஃபித்னா எனும் ) குழப்பம் நீங்கி அடிபணிதல் அல்லாஹ்வுக்கே என்றாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்" (அல்குர்ஆன் 8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா? (எப்படி நீங்கள் போராட்டத்தைக் கைவிட முடியும்?) எனக் கேட்டார். அதற்கு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடுமையான தொனியில்,

"(ஆம் அல்லாஹ்வுடைய துதரின் காலத்தில்) ‘ஃபித்னா’ எனும் குழப்பம் முற்றாக நீங்கிட வேண்டும் என்பதற்காக நாங்கள் (இஸ்லாத்தின் எதிரிகளான, இறை நிராகரிப்பாளர்களுடன்) போரிட்டோம். இன்றோ நீரும் உம் தோழர்களும் (குழப்பம் நீங்குவதற்காகவல்ல) குழப்பம் உருவாக வேண்டும் என்பதற்காகவே போரை விரும்புகின்றீர்கள்" என்று கூறினார்கள்.

முஸ்லிம்களுடன் போரிட்டு அவர்களுக்கு மத்தியில் பிளவையும், பிணக்கையும் உருவாக்கி ‘ஃபித்னாவை’ வளர்க்க விரும்புவோர் தமது ஈனச் செயலுக்கு குர்ஆனை ஆதாரமாக்கிக் கொள்ள முனைகிறார்கள். இத்தகைய குழப்பவாதிகளைத்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கு கடுமையாக கண்டனம் செய்கிறார்கள்.

"ஃபித்னாவை இல்லாதொழிப்பதற்கு அல்லாஹ்வின் தூதரோடு இணைந்து நாங்கள் போரிட்டோம். அது முஸ்லிம்களோடு அல்ல; முஸ்லிம்களுக்குள் மறைந்திருந்த முனாஃபிக்குகளுடனும் அல்ல; இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க விரும்பிய யூதர்களுடனும், இஸ்லாத்தை அழிப்பதற்காக குறைஷித் தலைவர்களுடன் ஒன்றிணைந்த நிராகரிப்பாளர்களுடனும் போரிட்டோம்." அந்தப் போரின் மூலம் ‘ஃபித்னா’ எனும் குழப்பம் முற்றாக நீங்கி அமைதியும் சுபிட்சமும் உருவாகியது. இத்தகைய போராட்டங்களை வலியுறுத்த வந்த குர்ஆன் வசனங்களை முஸ்லிம்களோடு போரிடுவதற்கான ஆதாரமாகக் காட்டும் உம்மைப் போன்றவர்கள் குழப்பத்தை நீக்க வந்தவர்களல்லர். நீங்கள்தான் உண்மையான குழப்பவாதிகள் என ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு குழப்பவாதியைப் பார்த்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவிப்பதே மேற்கண்ட சம்பவம்.

சம்பவத்தைத் தொடர்ந்து படியுங்கள்:

கொலை செய்யப்பட இருந்த இறுதி நேரத்தில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ சொன்ன அந்த மனிதன், ஏற்கனவே முஸ்லிம்களோடு கடுமையாகப் போரிட்டு இன்ன இன்ன முஸ்லிம்களையெல்லாம் கொன்று குவித்தான் என உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் எனும் ஓர் அறிவிப்பும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

அவ்வாறிருந்தும், "அந்த லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமா மறுமையில் (உனக்கெதிராக) வந்துவிட்டால் நீ என்ன செய்வாய்?" என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உஸாமாவிடம் திருப்பிக் கேட்டதாகவும் அந்த அறிவிப்பு கூறுகிறது.

முஸ்லிம்களோடு மும்முரமாகப் போரிட்ட ஓர் எதிரியாக இருப்பினும் சரி அவன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ சொன்னதும் மறுகணம் அவனுக்கெதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்தி இருக்க வேண்டும். நீர் அதனைச் செய்யவில்லை என்றல்லவா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உஸாமாவைக் கடிந்து கேட்டார்கள்.

"நான் இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்று உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எண்ணும் அளவு அந்தக் கண்டனம் கடுமையாக இருந்தது.

இதனை உணர்ந்துதான் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இனி எந்த முஸ்லிமுடனும் போராட மாட்டேன் என்றார்கள். ஆனால், இந்த உண்மையை விளங்காத ஒருவர், குழப்பம் நீங்கும் வரை போராடுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றானே, போராடினால் என்ன? என்று குர்ஆனைக் கொச்சைப்படுத்துகின்றார். அவருக்கு ஸஅது பின் அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடுமையாக பதில் சொன்னார்கள்.

"நாங்கள் குழப்பம் நீங்குவதற்காகத்தான் போரிட்டோம்; நீயோ குழப்பத்தை உருவாக்கப் போரிடுகின்றாய்."

இன்று முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுகின்றவர்களைப் பாருங்கள். இறுதி நேரத்தில் ஆயுதத்துக்குப் பயந்து இஸ்லாத்தில் நுழைந்து கொண்ட முஸ்லிம்களுடனா இவர்கள் போராடுகின்றார்கள்? தனது இறுதி மூச்சைத் தூக்கு மேடைக்கு சமர்ப்பித்து இஸ்லாம் என்ற பயிருக்கு தனது உயிரையும், உடலையும் உவந்தளித்த, உவந்தளிக்க முற்பட்டவர்களூடனல்லவா இவர்கள் போராடத் துவங்கி இருக்கின்றார்கள்!

முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்கள் வாளை உயர்த்திப் போராடுவதற்கு மட்டுமல்ல, நாவை நீட்டிப் போராடுவதற்கும் தடை விதிக்கிறது இஸ்லாம்.

"முஸ்லிமை ஏசுவது பாவம்; முஸ்லிமோடு போரிடுவது இறை நிராகரிப்பு" என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஆம், யார் முஸ்லிம்களுக்கெதிராக தங்களது நாவை நீட்டுகின்றார்களோ அவர்கள் தங்களது வாளையும் அவர்களுக்கெதிராக உயர்த்த முடியும். யார் தங்களது நாவையே நீட்ட விரும்பவில்லையோ அவர்கள் வாளைத் தொடவும் அஞ்சுவார்கள்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாலேயே கொலை செய்யப்பட்ட உதாரணங்கள் எம்மத்தியில் இருக்கின்றன அல்லவா? அந்த உதாரணங்களைச் சிறிது நோக்குங்கள். அங்கு முஸ்லிம்களுக்கெதிரான வாள்கள் திடீரென உயர்த்தப்படவில்லை என்பதையே நீங்கள் காண்பீர்கள். மாறாக, நாவுகள் தொடர்ச்சியாக நீட்டப்பட்டதன் விளைவே வாள்களும் ஒரு கட்டத்தில் உயர்த்தப்படுவதற்கான காரணமாக அமைந்துவிட்டது.

"ஹராத்திற்கு இட்டுச் செல்வதெல்லாம் ஹராம்" என்ற இஸ்லாமிய சட்ட விதியின்படி, நீட்டப்படும் வாள்கள் மட்டுமல்ல; அவற்றை உயர்த்துவதற்கு காரணமாக அமையும் நீண்ட நாவுகளும் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

இன்னும் சொன்னால் நீண்ட வாள்களை விட, நீண்ட நாவுகள் ஆபத்தானவை. வாள்கள் வாளாக இருக்கும். நாவுகள் தான் அவற்றைத் தீட்ட வைக்கும். பின்னர் தூக்க வைக்கும்.

முஸ்லிம்களுக்கெதிராக தங்கள் நாவுகளை நீட்டியிருக்கும் குழப்பவாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பம் விலைவிப்பதற்காக அன்று ஸஅது பின் அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வாள் தூக்கச் சொன்னவர்கள் இன்றும் இருக்கிண்றார்கள். அவர்கள் இரண்டு காரணங்களுக்காக இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் வாள் தூக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஒன்று, மார்க்கத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு அதில் காட்டும் மிதமிஞ்சிய தீவிரம். மற்றது, தங்களது குறுகிய, தனிப்பட்ட அரசியல் இலாபங்கள்.

இரு காரணங்களுக்காகவும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவை உருவாக்கி இருக்கின்றவர்களைப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைத்தான் தங்களது எதிரிகளாகப் பார்க்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்துக்கு வெளியே இருக்கும் இஸ்லாத்தின் பகைவர்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்க யூத, ஸியோனிச சக்திகள் அவர்களது கண்களுக்கு தெரிவதே இல்லை. முஸ்லிம்களைத்தான் அவர்கள் போருக்களைக்கிறார்கள். அதாவது பகிரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாளினால் வெட்ட முடியாதவர்களைத் தங்களது கூரிய நாவுகளால் வெட்டுவதற்கே இந்தப் பகிரங்க விவாதம்! இத்தகையோருக்கு அவர்களது வாயில் ஒன்று சேரும் பகை விஷத்தை அடிக்கடி உமிழ்ந்து கொண்டிருப்பதற்கு பகிரங்க விவாதம் தேவைப்படுகிறது.

நீண்ட நாவும், தீராத பகையும் கொண்ட இத்தகையோர் தங்களது இஸ்லாமிய விரோதச் செயல்களைப் பிழையென உணராதிருக்க முடியாது. அவர்களது உள்ளம் அவர்களது பிழையை அவர்களுக்கு உணர்த்தவே செய்யும். முஸ்லிம் சமூகத்தினுள் பகையையும், குரோதத்தையும் வளர்த்துப் பிளவுகளையும், பிணக்குகளையும் உருவாக்கி இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் சமூகத்தை இலகுவாக விழுங்கும் வண்ணம் சமூகத்தை நன்றாக மென்று கொடுக்கும் இவர்களது செயலை இஸ்லாமிய உணர்வு கொண்ட எந்த உள்ளமும் சரிகாண மாட்டாது.

எனினும், தங்களது உள்ளத்தின் சாட்சிக்கெதிராக அவர்கள் செயல்படுகிறார்கள். அதற்கான நியாயங்களையும் அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தினுள் பிணக்கையும், பிளவையும், குரோதத்தையும், பகையையும் வளர்ப்பதற்கு அவர்கள் தேடிக் கொண்ட மிக இலகுவான நியாயம்தான் தம்மோடு உடன்படாதவர்களை வழிகேடர்கள், நரகவாதிகள் என்று முத்திரை குத்துவதாகும். அவர்கள் எத்துனை பெரிய அறிஞர்களாயினும் சரி; மேதைகளாயினும் சரி.

இதன் மூலம் தாங்கள் பகை வளர்ப்பது முஸ்லிம்களுக்கு எதிராகா அல்ல; நரகவாதிகளான காஃபிர்களுக்கு எதிராகவே என்று அவர்கல் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கு வாள் தூக்க முடியுமாக இருந்தால் முஸ்லிம் சமூகத்தில் இரத்த ஆறு ஓடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இவ்வாறு ‘ஃபித்னா’ எனும் குழப்பத்தை ஒழிப்பதற்கல்ல; வளர்ப்பதற்கு பாடுபடும் நோக்கில் ஒரு சிலர் செயல்படுகிறார்கள். இந்த இயல்புடைய ஒரு சிலர் முஸ்லிம் சமூகத்தில் கியாம நாள் வரை இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் இருப்பு ஒரு பிரச்சனை அல்ல. அவர்களைச் சமூகம் புரிந்து கொள்ளாதிருப்பதும், அவர்களை நெறிப்படுத்த திராணியற்றிருப்பதுமே பிரச்சனையாகும். இத்தகைய குழப்ப சிந்தனையுடையோரை நெறிப்படுத்தாது, வழிப்படுத்தாது அவர்களது போக்கில் விட்டுவிடும் போது சமூகம் பின்னோக்கி நகருமே தவிர, நல்ல மாற்றங்களை நோக்கி முன் நகரும் நிலை உருவாகாது.

குழப்ப சிந்தனை கொண்ட இத்தகையோரை நெறிப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் முயற்சியில் பிற ஊர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது காத்தான்குடி. காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா என்பன இத்தகைய குழப்ப சிந்தனை கொண்டோரை அவ்வப்போது நெறிப்படுத்தி, கட்டுப்படுத்தி ஊரில் குழப்ப நிலை உருவாகாமல் தடுத்து வருகின்றன.

எனினும், பல ஊர்களில் நடப்பது வேறொன்று. அமைதியாகவும், இணக்கமாகவும் பிறரை மதித்தும் செயல்படுபவர்களைத் தங்களிடமுள்ள அனைத்து ஆகுமான, ஆகாத வழிமுறைகளைக் கொண்டு தடுக்க முற்படுகின்றார்கள். குழப்ப சிந்தனை கொண்டவர்களை அவர்களது போக்கில் விட்டுவிட்டு வாளாவிருக்கிறார்கள். இத்தகைய பொறுப்பாளர்கள் சமூகத்தை முன்னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்வார்களா?

சமூகத்தை நெறிப்படுத்தும் தமது பொறுப்பை நிறைவேற்ற முடியாத தலைவர்கள் தங்களது சமுதாயத்தையோ, கிராமத்தையோ ஃபித்னாவுக்கு பழக்குகின்றார்கள் என்றே பொருள். நாளை அங்கு இடம்பெறப் போகின்ற பிணக்குகள், பகை உணர்வுகள், குரோதங்கள், வெறுப்புகள், சீர்கேடுகள், ஒழுங்கீனங்கள், கட்டுப்பாடற்ற நிலைமைகள்ஸ அனைத்தையும் உருவாக்குவதில் இத்தகைய தலைவர்களுக்கும் பங்குண்டு. காரணம், இவர்கள் ஃபித்னாவுக்கு மௌன அங்கீகாரம் கொடுத்துவிட்டு தங்களது பதவிகளுக்கும் அந்தஸ்துகளுக்கும் இடையூறு வராமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பதற்கு இவர்கள் தங்களது அதிகாரத்தையோ செல்வாக்கையோ சிறிதும் பயன்படுத்தவில்லை.

அத்தகையவர்கள் இஸ்லாத்தின் எழுச்சிக்கு உதவுவதைவிட, அதன் வீழ்ச்சிக்கு வழி திறந்து கொடுக்கிறார்கள். அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களைத் தவிர!

வெற்றிகளால் பெருமை கொள்ளாதுஸ சோதனகளால் உணர்ச்சிவசப்படாதுஸ பாதிப்புகளால் சினமுராதுஸ சவால்களால் துவண்டு போகாதுஸ அல்லாஹ்வுடைய பாதையில் தடம்பதித்து உறுதியாக இருக்கிறார்களே, அவர்கள்தான் இறையருள் பெற்றவர்கள்.

6 comments:

  1. இந்த கட்டுரையில் ஹஜ்ஜுள் அக்பர் அவர்கள் இப்படி சொல்கிறார்

    //எனினும், தங்களது உள்ளத்தின் சாட்சிக்கெதிராக அவர்கள் செயல்படுகிறார்கள். அதற்கான நியாயங்களையும் அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். //

    ஒருவர் தனது உள்ளத்தின் சாட்சிக்கு செயல்படுகிற...ார் என்று இவருக்கு எப்படி அவரின் உள்ளம பற்றி தெரியும் ?

    உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டும்தான் அறிவான் என்று இருக்க இவர் எப்படி உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொண்டார் ?

    கீழ் வரும் ஹதீஸை மற்றவருக்கு படிப்பினையாக சொன்ன ஹஜ்ஜுள் அக்பர் அவர்கள் எப்படி தான் அந்த ஹதீஸில் படிப்பினை பெறாமல் விட்டார்

    ஆக அடுத்தவருக்கு நாவு நீளம் என்று சொல்ல வந்த ஹஜ்ஜுள் அக்பர் தனது நாவின் நீளத்தை அளந்து கொள்ள மறந்துவிட்டாரா ?

    //"ஆயுதத்தைப் பார்த்து பயந்துதான் அவர் அவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கூறினேன். அதற்கு அன்னார், "அவர் அதற்காகத்தான் சொன்னார் என்பதை அவரது நெஞ்சைப் பிளந்து பார்த்தீரா?" என்று (கடிந்து) கேட்டார்கள். அந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவுக்கெனில் நான் அன்றைய தினம் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்குமளவு.//

    ஆக ஹதீஸை சொல்லும் அந்த தருணத்திலாவது அதற்கு மாற்றமாக பேசாமல் இருந்திருக்கலாமே

    ReplyDelete
  2. Ithu vithnda vatham!!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. உள்ளத்தின் சாட்சிக்கு எதிராக செயல்படுவது என்பது, பாவமான காரியங்கள் இன்ன இன்னதுதான் என்று மனித உள்ளம் அறிந்து வைத்திருக்கிறது, பெரும்பாலும்!

    இருந்தாலும், அதை மனமுரண்டாக மனிதன் செய்கிறான். இதைத்தான், உள்ளத்தின் சாட்சிக்கு எதிராக செயல்படுவது என்பது!

    அதேவேளை, பாவமான காரியங்கள் எவை என்று அறியாத உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

    கலிமா சொன்னவரை, துன்புறுத்துவது பாவமான செயல் என்பதை அந்த சஹாபி அறிந்திருப்பார் அல்லது அறியாமலும் இருந்திருப்பார்.

    இதைத்தான், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும் கண்டிக்கிறார்கள்.

    பாவம் என்றால் என்ன என்று அறிந்த உள்ளமும் சில வேளை பாவத்தில் ஈடுபடும். அறியாத உள்ளமும் பாவத்தில் ஈடுபடும். இது மனித இயல்பு.

    கல்புகளைப் புரட்டுவனும் ரஹ்மான்தான்! அதில் உறுதியான ஈமானை ஸ்திரப்படுத்துவதும் ரஹ்மான்தான்!

    உஸ்தாத் அவர்கள் எதிலும் முரண்படவில்லை என்பது தெளிவு.

    Abdullah

    ReplyDelete
  5. ,//எனினும், தங்களது உள்ளத்தின் சாட்சிக்கெதிராக அவர்கள் செயல்படுகிறார்கள்//
    அடுத்தவர் உள்ளத்தில் உள்ளது ஹஜ்ஜுல் அக்பருக்கு எப்படித் தெரியும் என்று ஏன் கேட்கின்றீர்கள்?

    அவர் தன் உள்ளத்தில் உள்ளதைப் பற்றி,அதாவது தான் தனது உள்ளத்தின் சாட்ச்சிக்கு எதிராக செயல்படுவது பற்றி சொல்லுகின்றார் என்று ஏன் விளங்கிக் கொள்ளக் கூடாது?
    அவர் கண்ணாடியை பார்த்து சொல்லுகின்றார் போலும்...

    ReplyDelete
  6. It is the desease!! 'Padippinai Pera Mattaarkhal'

    Quote for the Day, I love this...

    "வெற்றிகளால் பெருமை கொள்ளாதுஸ சோதனகளால் உணர்ச்சிவசப்படாதுஸ பாதிப்புகளால் சினமுராதுஸ சவால்களால் துவண்டு போகாதுஸ அல்லாஹ்வுடைய பாதையில் தடம்பதித்து உறுதியாக இருக்கிறார்களே, அவர்கள்தான் இறையருள் பெற்றவர்கள்".

    ReplyDelete

Powered by Blogger.